Skip to main content

எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு அஞ்சலி ( நேர்காணல் - மறுபிரசுரம்)


உலகளவில் கணிசமான சாதனைப் படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்ட தமிழ் சிறுகதை மரபில் இராசேந்திர சோழனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'எட்டு கதைகள்' ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்சியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல்  தமிழ் சாத்தியம் அவர். சிக்மண்ட் ப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள் உலகளவிலும் தமிழ் படைப்புலகிலும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், பிராய்டின் சாயலேயின்றி அசாதாரணமாக மனிதர்களின் உளவியலுக்குள் குறிப்பாக ஆண்-பெண் உறவு சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணித்த படைப்புகள் இராசேந்திர சோழனுடையவை. வட ஆற்காடு வட்டார வழக்கை உள்வாங்கி சிறுகதை என்ற வடிவத்தின் கூர்மை, மௌனம், மொழியின் செம்மை, விமர்சன வன்மையைக் கொண்டவை. ஒரு பெண்ணின் சுதந்திரமான பாலுறவுத் தேர்வு ஆண் மனத்தில் உருவாக்கும் அச்சங்கள், கலவரங்களை அதன் பதைபதைப்புடனேயே ஆக்கிய இவரது குறுநாவலான 'சிறகுகள் முளைத்து' படைப்பு சமீபத்தில் படிக்கும்போதும் அழுத்தமான அனுபவத்தையே தருகிறது. எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான 'பறிமுதல்' முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய தொகுப்பாகும். அஸ்வகோஷ் என்பது இவரது புனைப்பெயர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி, மார்க்சிய சித்தாந்தத்தின் மூலம் இந்த உலகை மாற்ற முடியும் என்று கருதி அரசியல் செயல்பாட்டாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். அறிவை ஜனநாயகப்படுத்துவதுதான் எனது லட்சியம், அதை நிறைவாகச் செய்திருக்கிறேன் என்று கூறும் ராஜேந்திர சோழன், ‘அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்’, ‘அரங்க ஆட்டம்’, ‘பின்நவீனத்துவம் - பித்தும் தெளிவும்’ போன்ற முக்கியமான அபுனைவு நூல்களை எழுதியுள்ளார். ‘வட்டங்கள்', ‘மீண்டும் வருகை', ‘நாளை வரும் வெள்ளம்' என இவரது நாடகங்களும் புகழ்பெற்றவை. தற்போது சில உடல்நலக் குறைபாடுகளால்  ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். தனது சுயசரிதையை எழுதிவரும் ராஜேந்திர சோழன் 75 வயதுக்குள் நுழைகிறார். அவரை அவரது மயிலம் வீட்டில் சந்தித்தோம்...    


உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'எட்டுக் கதைகள்' நூலிலிருந்தே தொடங்கலாம். உங்களது வாசிப்பு எப்போது தொடங்கியது?

1961-ம் ஆண்டு மயிலத்தில் எஸ்எஸ்எல்சி முடித்தபிறகு, ஆசிரியர் பயிற்சிக்குப் போகலாம் என்றார்கள். அப்பா, அம்மா, மாமா எல்லாரும் ஆசிரியர்கள். அதனால் ஆசிரியர் பயிற்சிக்குப் போக விருப்பமில்லை. அலைச்சல், சென்னையில் செங்கல் சூளைகளில் வேலை பார்த்துச் சேர்ந்த சமூக அனுபவங்கள் என மூன்று ஆண்டுகள் ஓடியது. ஓய்வு மலிந்த, விடுமுறை மலிந்த பணியாக ஆசிரியர் பணியே இருக்குமென்றும் மாணவர்களிடமும் ஊடாடுவதற்கு வாய்ப்பான அந்தத் தொழிலுக்கே போய்விடலாமென்று நினைத்து ஆசிரியர் பயிற்சியில் 65-ம் ஆண்டு சேர்ந்தேன். அதற்குப் பிறகு நூலக வாசம் தொடங்கியது. அங்குதான் மாக்சிம் கார்க்கியின் மூன்று தலைமுறைகள் கதையைப் படித்தபோதுதான் இதுபோன்ற கதைகள் இங்கு இல்லையே என்று தோன்றியது. டால்ஸ்டாய் எழுத்துகளையும் விரும்பிப் படித்தேன். அப்போதுதான் ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய மார்க்சிய மெய்ஞானம் ஓர் அரிச்சுவடி என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. அந்தப் புத்தகம் ஒரு பிரளயம் போல ஒரே இரவில் என்னை உருமாற்றியது. இயல்பிலேயே என்னிடமிருந்த தத்துவத் துறை ஈடுபாட்டால் அந்தப் புத்தகத்தின் மேல் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்த நாள் விடியும்போது உலகத்தையே புதிதாகப் பார்க்கிறேன். உலகத்து நடவடிக்கைகளைப் புதிதாகப் பார்க்கிறேன். நான் புதிய மனிதன். இந்த உலகத்தை மாற்றுவதுதான் என்னுடைய வழி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தமிழ் இலக்கியம் சார்ந்து எல்லாரையும் அந்தக் காலகட்டத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், எனது எழுத்தில் ஏதாவது செல்வாக்கு தென்படுமானால் புதுமைப்பித்தனையும் தி. ஜானகிராமனையும் தான் சொல்வேன். அவர்கள் இரண்டுபேரைத் தவிர மற்றவர் யாரும் என்னைக் கவரவில்லை. 

இப்படித்தான் இடதுசாரி இலக்கியத்துக்குள் வருகிறீர்கள் அல்லவா?

கலை இலக்கியத்தின் உன்னதக் குறிக்கோள் ஒரு புதிய மனிதனை, ஒரு புதிய சமூகத்தைப் படைப்பதே. ஒரு புதிய சமூகத்தை மட்டும் படைத்து அதில் பழைய மனிதனை விட்டுவைப்பதல்ல. அல்லது ஒரு புதிய மனிதனை மட்டும் படைத்து பழைய சமூகத்தை அப்படியே பாதுகாப்பதும் அல்ல. இந்த இரண்டுமே முரண். இந்த முரண் ஒன்றுக்கொன்று இணங்கிப் போகமுடியாது. இவை ஒன்றுசேர முடியாது. ஆகவே இந்த முரண் கலை இலக்கியத்துக்கு இலட்சியமாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது. இந்த உழல்விலிருந்து மனிதனை மீட்டெடுப்பதுதான் இடதுசாரி இலக்கியம் என்று நம்பினேன், நம்புகிறேன். 

அப்போது ஜனசக்தியும் தீக்கதிரும் வந்து கொண்டிருந்தன. இரண்டையும் புரட்டிப் பார்த்துப் படிக்கத் தொடங்கிய போது, நான் படித்த சித்தாந்தத்துக்கு ஓரளவுக்கு நெருக்கமாக இருந்தது தீக்கதிர். அப்போது அது வார இதழாக வந்து கொண்டிருந்தது. வாராவாரம் பத்து பிரதிகள் வாங்கி மயிலத்தில் நண்பர்களிடம் விற்றேன். என்னை யாரும் வழியெல்லாம் காட்டவில்லை.

ஆனந்த விகடன் இதழில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்தார்கள். தென் ஆர்க்காடு மாவட்டத்துக்கு அறிவிப்பு வந்தது. எழுதலாமா, வேண்டாமா என்ற தயக்கம் இருந்த நிலையில், உற்பத்தி மாதிரியான ஒரு தூண்டுதலை அந்த விளம்பரம் தந்தது. ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதையை எழுதினேன். கோபுலு ஓவியத்துடன் வந்தது. ஜெயகாந்தன் தேர்ந்தெடுத்தார். இந்தக் கட்டத்தில் கலை இலக்கிய இதழ் ஒன்றைக் கொண்டுவர வேண்டுமென்று 'செம்மலர்' இதழை சிபிஎம் கட்சி கொண்டுவந்தது. முதல் கதையாக 'பறிமுதல்' கதையை அனுப்பினேன். ஆனந்த விகடன் மலரில் பரிசுபெற்ற எழுத்தாளரின் கதை என்று என்னை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் போட்டுப் பிரசுரித்தார்கள். அப்போது அரசுப் பணியில் சேர்ந்துவிட்டதால் நிர்வாகத்திலிருந்து நெருக்கடி வந்தது. அஸ்வகோஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டேன். செம்மலர் இதழில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தன. அப்போது ஒரு நாள் கடிதம் வந்தது. தோழரே உங்கள் கதைகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால், மனிதனை மனிதன் சுரண்டுவதை நீங்கள் கதைகளாக எழுதவேண்டுமென்று அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. எனக்கு கடுப்பு ஏற்பட்டுப் போனது. இதுவரை நான் எழுதிய கதைகளை இவர்கள் என்னவாக நினைத்திருக்கிறார்கள் என்று இப்படித்தான் அவர்களுக்கும் எனக்குமான முரண்பாடுகள் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் தான் 'கசதபற' இதழ் குழுவினர், தங்கள் முதல் இதழை அனுப்பிவைத்து என்னிடம் சிறுகதையைக் கேட்டனர். எனக்கு அவர்களுடைய கலை இலக்கியம், அழகியல் கோட்பாடு சார்ந்து எனக்கு உடன்பாடு ஏற்பட்டது. கோணல் வடிவங்கள், புற்றிலுறையும் பாம்புகள் என தொடர்ந்து அதில் கதைகள் வரத் தொடங்கியது. 1970-லிருந்து 1974 வரை அசுரத்தனமாக கதைகளை எழுதினேன் என்றே சொல்லலாம். 

அந்தக் கதைகளிலிருந்துதான் எட்டு கதைகள் வெளியாகின இல்லையா?

பத்து கதைகளை கொடுத்தேன். அவர்கள் எட்டு கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஞானக்கூத்தன்,  சா. கந்தசாமி, ந. முத்துசாமி எல்லாரும் அந்தக் குழுவில் இருந்தனர். க்ரியா ராமகிருஷ்ணன் எட்டு கதைகளைத் தேர்ந்தெடுத்தார். இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியவர் சண்முகம் என்ற நண்பர். மாலையானால் கசடதபற நண்பர்களைச் சந்திக்க கடற்கரைக்குப் போவேன். அந்த நண்பர்கள் என்னிடம் உரையாடிய பிறகு, இதைப் போன்ற கம்யூனிஸ்டை நாங்கள் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை என்று ஆச்சரியப்பட்டார்கள். கறாரான வறட்சியான இலக்கிய ரசனை இல்லாத ஆட்களையே பார்த்திருக்கோம் என்றார்கள். இலக்கியத் தரம் சார்ந்த அவர்களுடைய நாட்டம் என்னைக் கவர்ந்தது. உங்கள் கதையை எடிட் பண்ணுவதென்றால் அத்தனை யோசிப்போம், ஒரு வார்த்தையை எடுக்க முடியாது என்று சொல்லிப் பாராட்டினார்கள். இப்படி இரண்டு வட்டாரத்திலும் நான் கவனிக்கப்பட்டேன். எனது எட்டு கதைகள், பறிமுதல் இரண்டு தொகுதிகளும் இலக்கிய வட்டாரத்திலும், முற்போக்கு வட்டாரத்திலும் ட்ரெண்ட் செட்டிங்கான சிறுகதை நூல்களாக விளங்கின. இரண்டும் தனித்தனி வழிகளாகவே ஆகிப்போய்விட்டது. வரலாற்றில் அதற்கான வாய்ப்பேயில்லாமல் போய்விட்டது எனக்குத் தனிப்பட்ட முறையில் வருத்தம்தான். 

உங்களது 'சிறகுகள் முளைத்து' குறுநாவல் இன்றைக்குப் படிப்பதற்கும் வலுவான படைப்பாக உள்ளது. பெண், பாலுறவு சார்ந்து தனது தேர்வைச் செய்யும் போது அது ஆணிடம் ஏற்படுத்தும் அதிர்ச்சி, கலவரத் தன்மை இன்றைய சமூகச் சூழலுக்கும் பொருத்தமாக உள்ளது....

மனிதனுக்கு பசி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குக் காதலும் முக்கியம். வரிசைப்படுத்தும் போது வேண்டுமானால் பசி முதலில் நிற்கலாம். ஆனால் பசியை நிரப்பிக் கொள்வதோடு முடிந்துவிடுவதில்லை. மனித வாழ்க்கை. அதேபோலத் தான் கம்யூனிசம். கம்யூனிசம் என்பது மனித விடுதலையின் இலக்கணம். அது மனிதனின் முழு விடுதலைக்கான சித்தாந்தம். இந்த முழு விடுதலைக்கான சித்தாந்தம் பசியை பற்றி மட்டுமே பேசி காதலைப் புறக்கணிக்குமானால் அது ஊனமுடையது. இந்தக் குறுநாவலில் வரும் பாஸ்கரன் பழைய மதிப்பீடுகளின் உருவாக்கம். அந்த மதிப்பீடுகள் தகர்க்கப்பட்ட மாறுபட்ட உறவுகளைக் காணும்போது அவன் அதிர்கிறான். அவன் தாய் செய்யும் தற்கொலைக்கு அவனது மதிப்பீடுகளே காரணம். உறவுகள் இப்படியிருக்கின்றன, வாழ்க்கை இப்படி இருக்கிறது என்கிற ஒரு படைப்பாளனின் எல்லைக்கோட்டுக்குள் நின்றே எதையும் சொல்லியிருக்கிறேன்.

ஆண் - பெண் உறவு சார்ந்த தூய்மை, கற்பு போன்ற புனிதக் கோட்பாடுகளுடன் எனக்கு உடன்பாடில்லை. சமூகம் தனது இருப்புக்காக ஏற்படுத்திய நெறிகள் இவை. அந்த நெறிகளைப் பின்பற்றுவது நடைமுறையிலும் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.  ஆண்- பெண் உறவு சார்ந்து சாதியைக் கடத்தலும் உறவுகளைக் கடத்தலும் இன்னமும் பிரச்சினையாக இருக்கிறது இங்கு. 

பரிணாமச் சுவடுகள், இச்சை, நிலச்சரிவு மூன்று கதைகளும் உங்களுக்கு வந்த கனவைக் கதைகளாக எழுதியதாக தடம் நேர்காணலில் குறிப்பிடுகிறீர்கள். படைப்பாளியின் அறிவை விட கனவு கூடுதல் அறிவோடு இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறீர்கள். படைப்பெழுத்தையும் அப்படியான அறிவைக் கொண்ட கனவு என்று சொல்லலாமா?

அந்த மூன்று கதைகளையும் எழுதியபோது தோன்றியது அப்படி. அதிசயிக்கத்தக்க அளவில் ஏ டூ இசட் வரை ஒரு கதையாகவே வந்தது கனவு. படைப்பே கனவாக வருமா என்ற மலைப்பு எனக்கு. ஒரு பழங்குடிப் பெண் கர்ப்பமானதை தனது சமூகத்துக்கு ஏற்பட்ட அவமானமாக தாய்க்காரி பார்க்கிறாள். அவள் மேல் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லப் போகும்போது கனவு முடிந்துவிட்டது. மனித மனங்களின் ஆழங்களை அதன் விருப்பங்களை நோக்கிப் பயணிக்கும்போது செயல்படும் நபர் வேறொரு நபர் தான். நமது சமூகத்தில் உள்ள இளைஞனின் விருப்பங்கள் இச்சை சிறுகதையிலும் பரிணாமச் சுவடுகளிலும் சிறகுகள் முளைத்து கதைகளிலும் வேறு வேறுவிதமாக இருப்பான். வேறு வேறு மனிதர்களின் சாரமாகத் தான், கனவாகத் தான் கதை வெளிப்படுகிறது. 

உங்களின் எழுத்தின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது என்ன?

மக்களின் தேவை சார்ந்து இயங்கவேண்டுமென்று எண்ணினேன். அதுதான் எனக்கு மனத்துக்கு நிறைவளிக்கும் கோட்பாடாகவும் உள்ளது. இலக்கியத் தளத்தில் மட்டும் செயல்பட்டிருந்தால் நான் வேறு உயரத்துக்குப் போயிருப்பேன் என்று நண்பர்களிடம் மனக்குறை இருக்கிறது.  

அரசியல் செயல்பாட்டாளராக, போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குப் போகிறவராக, அரசியல் செயல்பாடு அடிப்படையிலேயே இயக்கங்களுடன் தொடர்ந்து முரண்படுபவராகவும் இருக்கிறீர்கள்...

இன்னமும் மார்க்சை சமூக பொருளாதார அரசியல் பேராசானாகவே சித்திரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் இடதுசாரிகள். மார்க்ஸ் சாராம்சத்தில் ஒரு கலைஞன், தத்துவத் தேடலும் மனிதாபிமானமும் விடுதலை வேட்கையும்கொண்ட கலைஞன், இந்தச் சாரமே மார்க்சை பொருளாதார, சமூக, அரசியல் ஆய்வுகளுக்கு இட்டுச்சென்றது. அந்த ஆய்வுகளே விஞ்ஞானப் பூர்வமான கம்யூனிசத் தத்துவமாகப் பரிணமித்து முழு வடிவம் பெற்று இன்று உலக மக்களின் விடுதலைக்கே ஒளிவிளக்காய் திகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.   நான் மட்டும் மார்க்சியத்தைப் பயிலாமல் இருந்திருந்தால் வன்முறையாளனாக சமூக விரோத சக்தியாக மாறியிருப்பேன். எனக்கு மார்க்சியம் வழிகாட்டிய குறிக்கோள் என்பது அறிவை ஜனநாயகப்படுத்துவதுதான். நான் எந்த அளவுக்கு அறிவைக் கொண்டிருக்கிறேனோ அதைச் சகமனிதனுக்கும் பரப்பவேண்டுமென்பது. அப்போது சகமனிதனும் ஏற்றம் அடைகிறான். கொஞ்சம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், ஒருவரை ஒருவர் அறிவுசார்ந்து அதிகாரம் செய்பவராக இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இயங்கமுடியும் என்பதுதான் எனக்கு நோக்கமாக இருந்தது.

அமைப்பு ரீதியாகச் செயல்படும்போது அதன் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டு இயங்கவேண்டிய ஜீவனாகத் தான் அது படைப்பாளியைப் பார்க்கிறது. இதுவரைக்குமான அமைப்புகள் அதற்கு மேல் மெனக்கிட்டதாக சரித்திரமே இல்லை.   ஒரு அமைப்பு என்பது, தனிமனிதனிடம் பொதிந்துள்ள திறமையை ஆற்றலை உள்வாங்கி அதை தனது சமூக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திக் கொள்வதற்கு மாறாக, அவனது சரக்குகளை மோப்பம்பிடித்து காயடித்து தனது நோக்கத்துக்குள் செயல்படுபவையாக மாற்றிவிடுகின்றன.

1980-களின் ஆரம்பத்தில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அடிக்கல் நாட்டிய பிறகு, ஒரு சில அறிவுஜீவிகள் மத்தியில் மட்டுமே அணுசக்தி சார்ந்த விழிப்புணர்வு இருந்தது. பரிக்ஷா ஞாநி, எஸ் என் நாகராசன் டி என் கோபாலன் போன்றோர் ஈடுபாட்டுடன் இருந்தனர். அப்போது அணுசக்தி சார்ந்து விழிப்புணர்வை எளிய மக்களும் அடைய வேண்டுமென்று யோசித்தேன். கன்னிமாரா நூலகத்தில் கிடைத்த 'இந்தியன் ஆட்டம்' என்ற தீரேந்திர பிரம்மச்சாரியின் நூலைப் படித்தேன். அதை வெளியே எடுத்துவந்து நகலெடுத்து, இயற்பியல் பேராசிரியர்களையெல்லாம் தேடிப்போய் துளைத்தெடுத்து எழுதி முடித்தேன். அந்த தருணத்தில் அத்தனை தெளிவுடன் தகவல்களுடன் எழுதப்பட்ட இன்னொரு நூல் இதுவரை வெளிவரவில்லை. இன்றுவரை அந்தப் புத்தகம் பெரிய நிறைவை அளிக்கிறது. அரசியல் செயல்பாட்டாளனாக எனக்கு முன்னால் புனைவு, அ புனைவு என்பதா என்ற தேர்வு என்முன்னால் இருந்தது. நான் அபுனைவை நோக்கிச் சென்றேன். நவீன நாடகம் சார்ந்து எந்தப் புத்தகமும் இல்லாதபோது 'அரங்க ஆட்டம்' நூலை மூன்று தொகுதிகளாக எழுதினேன். இன்றும் நாடக மாணவர்கள் அதை அடிப்படையான பாடநூலாக நினைக்கிறார்கள். அது எனக்கு நிறைவானது.  ‘பின்நவீனத்துவம் - பித்தும் தெளிவும்’ நூல் அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களிடையே பின்நவீனத்துவத்தைப் பற்றிய தெளிவை ஏற்படுத்திய நூல். 

சிறை அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...

ஈழத்தமிழர் போராட்டம் உச்சமடைந்தபோது நிறைய கைதுகள் நடந்தன. அப்போதுதான் அதிகமான சிறைச்சாலைகளைத் தெரிந்துகொண்டேன். வேலூர் சிறைச்சாலையில் எங்களிடம் பேசிக்கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளரிடம் கேட்டேன். ஒரு விடுதி போல துணிகள் எல்லாம் காயப்போட்டு அமைதியாக இருப்பது போலத் தெரிந்த சிறையைப் பற்றிக் கேட்டேன். சிறை சுகமான இடமாகத் தான் இருக்கும் போல இருக்கே என்று கேட்டேன். சார் எங்கிருந்து வர்றீங்க என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு, தனியா வந்து பாருங்க சார், அப்போதான் சிறைன்னா என்னான்னு தெரியும் கூலாகச் சொல்லிவிட்டுப் போனார். மயக்கத்துக்கெல்லம் இடமே கிடையாது. அங்கேயும் சிறை நிர்வாகத்துடன் சமரசம் பண்றவனுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். பண்ணாதவனுக்கு எந்த வசதியும் கிடைக்காது. சிறைச்சாலையோ, போராட்டக் களமோ, அமைப்புகளோ எதுவானாலும் மனிதன் முன்னால் கேட்கப்படும் கேள்வி ஒன்றுதான். சமரசம் செய்துகொண்டு வாழ்கிறாயா? சமரசமேயற்று நிற்பேன் என்கிறாயா? என்ற கேள்விகள் தான் அவை. 

எப்போது சமரசம் பண்ணமுடியாதென்று முடிவுசெய்துவிட்டால் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. எனது முதல் 50 சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்த போது அதைத்தான் பின்னுரையாக எழுதியிருப்பேன். தோப்பில் தனிமரமாக என்பதுதான் தலைப்பு. இடதுசாரி படைப்பாளிகள் என்று சொல்லப்பட்டவர்களுடன் உறவாக என்னால் இருக்கவே முடியாது. அங்கே எனக்கு இடம் கிடையாது. இலக்கியத்தில் தரம் நாடுவோருடனும் இருக்கமுடியாது. பல விஷயங்கள் அவர்களிடமும் முரண்பாடு ஏற்படுகிறது. இங்கேயும் போகமுடியாது அங்கேயும் போகமுடியெதென்றால் எங்கேதான் போவது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

இடதுசாரி இலக்கிய அமைப்புகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

தமுஎசவைத் தொடங்கும்போது தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பாடுகள் தீவிரமாக அந்த இயக்கத்தில் இருக்கவேண்டுமென்று அதைத் தொடங்கும்போது நினைத்தோம். அப்படியான எதுவும் அங்கே நிகழவேயில்லை. மக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் சார்ந்து அவர்களே கூடிப் போராடும்போது, அந்த முன்னெடுப்புகளில் பின்தங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காக வரிசையில் வந்துநிற்கும் அமைப்புகளாகவே இடதுசாரி இலக்கிய அமைப்புகள் உள்ளன.  இவர்கள் தமிழுக்காக குரல் கொடுத்ததேயில்லை. ஆனால், இப்போது தாய்மொழி தமிழ்வழிக் கல்விக்கு அன்றே சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம் என்று சொல்கிறார்கள். 

தமிழ்வழிக் கல்வி கோரி மாநாடு நடத்துவதற்கு துண்டறிக்கை கொடுத்து வசூல் செய்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்கிறேன். அப்போது ஒரு துண்டறிக்கையை ஒரு பேராசிரியர் வீட்டில் கொண்டு போய் என் நண்பர்கள் கொடுத்தார்களாம். இதேபோல ஒரு நிகழ்ச்சியை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய ஞாபகம் உள்ளதே என்றார் பேராசிரியர். இவர்களுக்கு நிகழ்ச்சி நடத்துவதுதான் முக்கியமாக இருக்கிறதே தவிர அதை நோக்கிய தீர்வுக்குப் போகும் நோக்கம் இல்லை. தீர்வுக்கான தியாகங்களுக்கு இழப்புகளுக்குத் தயாராக இல்லை. ஈழப்பிரச்சினை முற்றிவரும்போது கூட்டமைப்பாக ஆனார்கள். தேர்தல் வரும்போது கூட்டணி வேறு வேறாகிவிடுகிறது. இப்படியான சூழ்நிலைகள் மாறாமல் சமூக மாற்றம் சாத்தியம் இல்லை. 

மார்க்சியராக இருந்து தமிழ்தேசியவாதியாக ஆன பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

நான் ஒரு மார்க்சியவாதியாக இருக்கிறேனென்றால் தேசிய இனத்துக்கு ஆதரவான தேசிய இன விடுதலைக்கான கருத்தையும் உள்ளடக்கியதுதான் மார்க்சியம். இதற்கு அப்பாற்பட்ட மார்க்சியமும் கிடையாது. தேசியமும் கிடையாது. மார்க்சியம் வேறு தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக நிறைய பேரிடம் உள்ளது. இதை முழுமைப்படுத்தி எழுதவேண்டும். மார்க்சியவாதி என்பவன் யார்? எந்த தேசிய இன அடையாளமும் இல்லாத மார்க்சியவாதி இந்த உலகத்தில் உண்டா. தமிழன் தமிழ் தேசியவாதியாகத் தான் இருப்பான். இதுவரைக்கும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அவ்வளவுதான். எல்லா மனிதர்களுக்கும் தேசிய அடையாளமென்ற ஒன்று உண்டு. தேசியவாதம் பேசுவது குறுகல்வாதம் அல்ல. பெண் அடிமைத்தனத்தை ஏற்கிற, சாதிய ஏற்றத்தாழ்வுகளை விரும்புகிற மனிதர்களும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள்தான். தேசியம் என்பது பொதுக் கோட்பாடு. அதை ஒரு பூர்ஷ்வாவும் கையில் எடுக்கலாம். மார்க்சியரும் எடுக்கலாம். 

Comments