Skip to main content

தமிழில் ஆஹா சாஹித் அலி கவிதைகள்


ஆஹா சாஹித் அலி, 1949-ல் டெல்லியில் பிறந்தார். காஷ்மீரில் பெற்றோருடன் இளமைப்பருவத்தைக் கழித்தார். 1976-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறி இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தோ – அமெரிக்க கவிஞராக புகழ்பெற்ற அவரது ஆதர்சக் கவிஞர் எமிலி டிக்கன்ஸன். எமிலி வாழ்ந்த ஆம்ஹெர்ஸ்ட் நகரத்துக்குப் பக்கத்திலேயே 2001-ம் ஆண்டு மரணத்தைத் தழுவினார். ஜம்மு – காஷ்மீரில் வலுப்பெற்ற வன்முறையும் அதை அடக்குகிறேன் என்ற பேரில் தொடங்கிய அரச வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களும் அவரது பிற்காலக் கவிதைகளில் தாக்கம் செலுத்தியது. 

உணர்வுப்பூர்வமான தன் பால்யகால நினைவுகளுடன் அவர் தனது கவிதைகளில் காஷ்மீர் வெளிப்பட்டபோதுதான் அவரது கவித்துவ வாழ்க்கை உச்சத்தை அடைந்ததாக நாவலாசிரியர் அமிதவ் கோஷ் குறிப்பிடுகிறார். அவரது புகழ்பெற்ற கவிதைத் தொடரான ‘The Country Without a Post Office’ அவருக்கு சர்வதேச கவனத்தை அளித்தது. அந்தக் கவிதைகளும் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் கூடுதலான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ஆஹா சாஹித் அலியின் கவிதைகள் தமிழில் வருவது ஒரு அவசரமான நினைவூட்டல். இந்தியா, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் பிடிக்கு ஆட்பட்டு, ஒரு மதவாத  சமூகமாக, துயரகரமான பண்பு மாற்றத்தைச் சந்தித்துவரும் வேளையில் ஆஹா சாஹித் அலியின் ‘மினாரெட் புதைக்கப்பட்ட நாடு’  அவசியமான இடையீடு. 

அக்பரும், தாராஷூகோவும், ஜஹன்னாராவும், திப்பு சுல்தானும், காலிஃபும், பெய்ஸ் அஹமது ஃபெய்சும், சாதத் ஹசன் மண்டோவும், கபீரும், வள்ளலாரும், ஷிர்டி சாய்பாபாவும் சேர்ந்து பின்னிய டாக்கா மஸ்லின் போன்று நுண்மையாக உருவாக்கிய ஒரு பண்பாட்டு நினைவு, ஏக்கத்தின் பெருமூச்சு ஆஹா சாகித் அலி. பல்லாயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் அமெரிக்கக் கண்டத்திலிருந்து, தொலைவின் அழகோடு காஷ்மீரை கவிதைகளில் வரைந்தவர் அவர் .

மினாரெட் புதைக்கப்பட்ட நாடு நூலில் 24 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வேரல் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது. தொடர்ந்து எனது படைப்புகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் லார்க் பாஸ்கரன், அம்பிகா.

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிதைகளை அவ்வப்போது மொழிபெயர்த்து வந்திருந்தாலும் ஒரு நூலாகத் தொகுக்கும் மனதைரியத்தை ஆஹா சாஹித் வழியாகவே பெற்றிருக்கிறேன். ஆஹா சாஹித் அலியின் அந்தரங்க உலகத்தோடு எனது உலகத்தை அடையாளம் கண்டதும் அவரை மொழிபெயர்த்ததற்குக் காரணமாக இருக்கலாம். எளிமையாகத் தோன்றும் இந்தியக் கவிஞர்களை மொழிபெயர்க்கும்போது கலாசார முடிச்சு சார்ந்த ஒரு சுழிப்பில் சிக்கிக்கொண்ட அனுபவமும் உண்டு. ஏ. கே. ராமானுஜத்தின் கவிதைகளில் அப்படிச் சிக்கி மொழிபெயர்க்காமலேயே விட்டிருக்கிறேன். இந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்துவதில் பங்குபெற்றவர்கள் நண்பர்கள் விஜயராகவன், வே. நி. சூர்யா. மொழிபெயர்ப்பில் யாராவது திருத்தங்களைத் தெரிவித்தால் மேம்படுத்தி அடுத்த தொகுதியில் திருத்திச் சேர்க்க உதவியாக இருக்கும்.


லீனா மணிமேகலை எனக்கு எதிர்பாராமல் பரிசாக அனுப்பிவைத்த 'தி கண்ட்ரி வித் அவுட் போஸ்ட் ஆபிஸ்’ வழியாகத்தான், ஒரு தொகுப்பாக ஆஹா சாஹித் அலியின் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஒட்டுமொத்தமாக 'தி வீல்ட் சூட்’ நூல் தற்செயலாக மிஷ்கினின் நூலகத்தில் கிடைத்துப் படித்தேன். ஆஹா சாஹித் அலி என்ற பெயர் கவிஞர் ந. ஜயபாஸ்கரன் வழியாக அதற்குமுன்னரே எனக்குப் பரிச்சயமானது. 

Comments