Skip to main content

ஹிட்லரிலிருந்து மோடி வரை மக்களை மயக்கி இறுக்கும் பிம்பங்கள்

 


ஜார்ஜ் ஆர்வெல் நினைவு தினத்தையொட்டி, ஹிட்லரின் மெய்ன் காம்புக்கு அவர் எழுதிய மதிப்புரையை ‘தி வயர்’ உள்ளிட்ட இணையத்தளங்கள் கவனப்படுத்தியிருந்தன. ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட சர்வாதிகார நடைமுறைகளை, அவை உச்சபட்ச துயரங்களைத் தந்தாலும் ‘மேலான நன்மை’ என்ற பெயரால், கடவுளர்களின் சோதனையாக விரும்பி, வெகுமக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் இந்த மதிப்புரையில் ஆராய்கிறார். ஹிட்லரின் ஆளுமையும் அவர் ஏற்படுத்திய பிம்பமும், வலிய விதியை எதிர்த்துப் போராடும் துயர நாயகனின் சாயலைக் கொண்டது என்கிறார். ஒரு எலியை எதிர்த்துக் கொல்வதாக இருந்தாலும் ஹிட்லர் போன்றவர்கள், அந்த எலியை முதலில் ஒரு டிராகன் போன்று பிரமாண்டமான எதிரியாக கதையாகக் கட்டமைத்து விடுவார்கள் என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். கரோனோ போன்ற வைரசை, கருப்புப் பணத்தை, சிறுபான்மையினரை, எதிர்கட்சியினரை, பாகிஸ்தானை, போராடும் விவசாயிகளை பிரமாண்டமான எதிரிகளாகச் சித்தரித்துவிடும் மோடி ஞாபகத்துக்கு வருகிறார். ‘அச்சே தின்’ என்ற பெயரால் நல்ல தினங்கள் வரப்போகின்றன என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த மோடி மக்கள் மேல் சுமத்திய அடுக்கடுக்கான துயரங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன.

 முதலில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எத்தனையோ மனித உயிர்களைப் பலிகொடுத்து, எத்தனையோ வாழ்வாதார நெருக்கடிகளைச் சந்தித்தும் தேசத்தை வலுப்படுத்தத்தான் இந்த நடவடிக்கை என்பதை சாதாரண பொதுமக்கள் நம்பி தொடர்ந்து ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து வந்த உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தலில் பணமதிப்பு நீக்கம் என்ற நடவடிக்கையை கசப்பு மருந்தென நினைத்து மோடியை ஆதரித்துப் பெரும் வெற்றியை அளித்தனர். கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் அந்த மாநில மக்கள்தான், தாங்கள் வாக்களித்த அரசின் அதிகபட்சமான அலட்சிய நிர்வாகத்தால் சொல்லமுடியாத துயரத்தை அடைந்தவர்கள். 

கரோனா பெருந்தொற்றின் முதல் அலை தொடங்கியபோது, கால அவகாசமே அளிக்கப்படாமல் ஊரடங்கை அறிவித்து வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த கொடூரம் நிகழ்த்தப்பட்ட போதும், கரோனா என்னும் பிரமாண்ட கிருமிக்கெதிராக மோடி நடத்திய வலுவான யுத்தமாகவே அவருக்கு வாக்களித்த மக்களால் பார்க்கப்பட்டது. கரோனா இரண்டாவது அலையின்போது, மோடியைத் தொடர்ந்து ஆதரித்துவந்த உயர்சாதியினரும் மத்திய தர வர்க்கத்து மக்களும், மோடியின் மெத்தனமான நிர்வாகத்தின் காரணமாக, கற்பனையே செய்ய முடியாத இழப்புகளையும் இடரையும் வரலாறு காணாத அளவில் சந்தித்தபோதும் நரேந்திர மோடி தொடர்பில் அவர்கள் இதயத்தில் வைத்திருக்கும் பிம்பம் சற்றே அதிர்ந்திருந்தாலும் அகலாமலேயே நீடிக்கும் தோற்றம் உள்ளது. இன்றைக்கு சென்னையிலும் பணக்காரர்களிடமிருந்து கருப்புப் பணம் பறிக்கப்பட்டு, ஏழையான தனது வங்கிக் கணக்கில் 15 லட்சம் பணம் விழும் என்ற வாக்குறுதியை நம்பி மோடிக்கு ஆதரவாக வாதாடும் ஆட்டோ ஓட்டுனரை எனது அனுபவத்திலேயே பார்க்கத்தான் செய்கிறேன்.   

மனிதர்கள் சௌகரியத்தையோ, தன் நலத்தையோ, ஆரோக்கியமான வாழ்க்கையையோ,  மகிழ்ச்சிகரமான வேலையையோ பொதுவாக விரும்புகிறவர்கள் என்ற பொதுவான மேற்கத்திய கருதுகோளையே ஹிட்லரை முன்வைத்து ஜார்ஜ் ஆர்வெல் கேள்விக்குள்ளாக்குகிறார். தேசபக்தி, சமயபக்தி, வர்க்கநலன் ஆகியவை அதைவிட கூடுதல் சக்திவாய்ந்தவை என்கிறார். உளவியல் ரீதியாக மக்களைக் கவரும் அம்சம் பாசிசத்திலும் நாசிசத்திலும் கூடுதலாக உள்ளதை ஹிட்லரை முன்வைத்து நிறுவுகிறார். ஸ்டாலினின் சோசலிசத்தின் பெயரிலான நடைமுறையும் இதுபோன்றே மக்களை முதலில் ஈர்த்தது என்கிறார்.

“சோஸலிசத்தை ராணுவ வடிவமாக்கிய ஸ்டாலினிடமும் இதுதான் செயல்பட்டது. தாங்கள் ஆட்சி செய்த மக்கள் மீதே தாங்கமுடியாத சுமைகளைச் சுமத்தி தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள். சோசலிசமும், முதலாளித்துவமும், உங்களுக்கு நல்ல அவகாசத்தைத் தருகிறேன் என்றுதான் மக்களிடம் சொன்னது. ஹிட்லரோ, மக்களிடம், “நான் உங்களுக்கு போராட்டம், அபாயம், மரணத்தை அளிக்கப் போகிறேன்"  என்றார். அதன் விளைவாக ஒட்டுமொத்த தேசமும் ஹிட்லரின் காலடியில் விழுந்தது. ஒருவேளை மக்கள் இந்த நடைமுறைகளால் அலுப்புற்று தங்கள் மனத்தை தோல்வியுற்ற போரின் இறுதியில் மாற்றிக் கொள்ளலாம்.” என்கிறார்.

பொருளாதாரம், அமைதி, நல்லிணக்கம், நீதிபரிபாலனம், நிர்வாகம், கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், பொருளாதார வளம், ஊட்டச்சத்து என எல்லா அம்சங்களிலும் இந்தியா படிப்படியாக அடைந்த முன்னேற்றத்தில் பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்திய ஒரு அரசாங்கம் இது. அதன் கையாலாகாத தன்மை ஒவ்வொரு குடிமகனிடமும் நேரடியான ஒரு வடுவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த அமைப்பைத் தலைமையேற்று நிர்வகிக்கும் சர்வாதிகாரிதான் இதற்கெல்லாம் பொறுப்பு என்ற புரிதலை நோக்கி நகரும் எளிய கற்பனையை நோக்கி அதனால் இன்னமும் செல்லமுடியவில்லை. அப்படி நகரமுடியாதபடிச் செய்வது மோடியின் பிம்பம். அந்த அளவுக்கு அந்தப் பிம்பம் மக்களை வசீகரமாகக் கட்டி மயக்கி உள்ளது.  

ஏனெனில் ஜனநாயக இந்தியா கண்ட பெரும்பாலான பிரதமர்களைப் போல, குடும்ப பாரம்பரியம், உயர்கல்வி, உயர்சாதி, உயர்வர்க்கப் பின்னணியிலிருந்து வந்தவர் அல்ல மோடி. எளிய சாதாரண மக்களின் பிரதிநிதியாக, தேநீர் விற்ற சாதாரண பின்னணியிலிருந்து வந்தவராக தனது பிம்பத்தை உருவாக்கியவர் அவர். குடும்பம், சுயநலம் எதுவும் இல்லாதவர், துறவி என்ற அம்சங்களையும் அதனுடன் சேர்த்துக்கொண்டார். அப்படி உருவாக்கிய  பிம்பத்திலிருந்துதான் துயரங்கள் அலையலையாகப் பெருகத் தொடங்கின.  

ஹிட்லரும் அதேபோல எளிய பின்னணியிலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் என்பதை நினைவுகூர்கிறார் ஆர்வெல்.  

அந்த ஏழைத்தாயின் மகன் என்ற பிம்பம் உண்மையில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வேண்டியதில்லை. அது உண்மையில் எளிமையைப் பேண வேண்டியதும் இல்லை. 

அந்த ஏழைத்தாயின் மகன் என்ற பிம்பம் உண்மையில் போராடும் விவசாயிகளின் குரலைக் கேட்காமல் மயில்களுக்கு உணவளித்தபடி தனி மாளிகையில் இருக்கலாம். அந்த அந்த ஏழைத்தாயின் மகன் என்ற பிம்பம் உண்மையில், பேரிடர் காலத்தில் மனிதர்கள் பிராணவாயுவுக்காக திணறிக்கொண்டிருக்கையில் பதில் கூட அளிக்காமல் தலைமறைவாகலாம். அந்த ஏழைத்தாயின் மகன் என்ற பிம்பம் உண்மையில், தன்னை நம்பி வாக்களித்த ஒரு மாநிலத்து மக்களை ஏமாற்றி, அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை கௌரவமே இல்லாமல் சடலங்களாக ஆக்கி ஆற்றில் மிதக்கவிடலாம். அந்த ஏழைத்தாயின் மகன் என்ற பிம்பம் உண்மையில், தடுப்பூசி மருந்தைக்கூட விலையில்லாமல் மக்களுக்கு அளிக்கவோ, நிவாரணத் தொகை அளிக்கவோ இரக்கமோ மனமோ இன்றி, அதே மக்களின் வரிப்பணத்தில் தேசத்தின் தலைநகரத்தில், நூற்றுக்கணக்கான கோடிகள் செலவில் தனது வீட்டைத் தடையில்லாமல் ஊரடங்கு காலத்திலும் கட்டிக்கொண்டிருக்கலாம். 

அமைதியும் பொருளாதார தன்னிறைவும் கடுமை குறைவான வேலையும் மட்டுமே மனிதர்களுக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை  அளிப்பதில்லை. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவும் பாதுகாப்பான இருப்பிடமும் வேண்டியதில்லை. எல்லாரும் இணக்கமாக ஓரளவு வளங்களோடு சுமுகமாக வாழும் சூழல் தேவையில்லை. பிம்பமும் அது சொல்லும் கதைகளும் அது காட்டும் மயக்கமும் அது கோதிக்கொடுக்கும் வெறுப்பும் இருந்தால் போதும். 

அந்தப் பிம்பத்தால் சிறைப்பட்ட மக்களுக்கு தேசமளவுக்குப் பிரமாண்டமான கனவுகள் வேண்டும்; தேசம், மதம், சாதி என்ற பெயரில் கற்பனையான எதிரிகள் வேண்டும்; இன்றோடு, இப்போதோடு பொருந்தவே பொருந்தாத மகத்துவ ஏக்கங்கள், வரலாற்றில் கூட இல்லவே இல்லாத பொற்காலங்கள் பற்றிய கதைகள் உணவுக்குப் பதிலாக வேண்டும்; அங்கேதான் வரலாற்றில் எலிகளைக் கூட டிராகன்களாக ஆக்கும் சர்வாதிகாரிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் என்பதைக் கசப்புடன் நம்மிடம் பகிர்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். 

நல்ல தினங்கள் என்று சொல்லி ஹிட்லரைப் போல வந்தவர்தான் எண்ணற்ற கொடூரங்களைச் செய்தபடி தன் வசீகரமான பேச்சால் இன்னும் நிறுத்தாமல் மயக்கி மக்களின் கழுத்தை இறுக்கியபடி உள்ளார்.    

Comments

shabda said…
உண்மை