Skip to main content

மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா

 

நன்றி : விகடன் இணையத்தளம்


தஸ்தயவெஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்' நாவலின் இறுதிப்பகுதியில் சிறுவன் இல்யூஷாவின் மரண ஊர்வலத்தில் அவனது சவப்பெட்டியின் மீது இடப்பட்ட மலர்களில் ஒன்று சாலையில் விழுந்துவிடும். 

அந்த ஒற்றை மலர் உதிர்ந்த நிகழ்வு கடவுளுக்குத் தெரியுமா என்று ஆசிரியக்கூற்று கேட்கும். 

எனது காலை நடைகளில் விரல் சைஸ் கூட இல்லாத தேன் சிட்டுக்களைப் பார்க்கும்போதும், தலை முதல் வால் வரையில் இயற்கை அதற்கு வரைந்திருக்கும் உயிர்த்துடிப்பைக் காணும்போதும், இந்தக் குட்டிப்பறவையின் இருப்பு கடவுளுக்குத் தெரியுமா என்ற கேள்வி, தஸ்தயவெஸ்கியின் பிரதிபலிப்பாக என்னுள் எழும்.

கடவுள் என்று குறிப்பிடப்படப்படுவது எதன் பொருண்மை? இந்த உலகம் ஒரு நியதியில், ஒரு ஒழுங்கில், ஒரு பொறுப்பில் நிகழ்கிறது என்ற கருதுகோளிலிருந்து அந்த ஒழுங்கின் உருவகமாக கடவுள் கருதப்படுகிறார் போலும். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, ஒழுங்கு இருக்கிறதோ இல்லையோ ஒழுங்கு என்ற நம்பிக்கையின் எலும்பைப் போர்த்துவதற்குக் கடவுள், தஸ்தயவெஸ்கி போன்ற மாபெரும் கலைஞனுக்கும் தேவையாக இருக்கிறார்.

கடவுளுக்கு இணையாக இங்கே நிலத்தில் மாறாத மூலப்படிவமாக அம்மா இருக்கிறாள். அதனால்தான் புரட்சிக்குச் செல்லும்போது கூட அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் செல்ல வேண்டுமென்று 'அம்மா அறியான்' திரைப்படம் வழியாக ஜான் ஆபிரகாம் சொல்கிறார். ஒழுங்கு, திரட்சி, உள்ளடக்கம், கரு என்பவற்றின் அடையாளமாக எத்தனையோ நம்பிக்கைகளும் லட்சியங்களும் சிதறடிக்கப்பட்டும் இன்றும் மிஞ்சியிருக்கும் மையமாக அம்மா திகழ்கிறாள். 

பிரான்சிஸ் கிருபாவின் கவிதை ஒன்றில் அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்புவதற்குக் காத்திருப்பவனாக கவிதை சொல்லி வருகிறான். இந்தக் கவிதையில் பெரும்பாலான அம்மாக்களைப் போலவே மடியில் இருந்து பிள்ளையை இறக்குவதற்கு விரும்பாத அம்மா தென்படுகிறாள். செவ்வாய்கிழமை மதியத்தூக்கம் சிறுகதையில்,  திருடனாக கொல்லப்பட்ட மகனின் கல்லறையில் குட்டிமகளோடு கருப்புப் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்த அனாதை வெயில், அனாதை ரயிலில் பயணம் போகும் காப்ரியேல் கார்சியா மார்க்வேஸின் ஏழை அம்மாவும், ஞானக்கூத்தனின் அம்மாவின் பொய்கள் கவிதையில் வரும் அம்மாவும் காணப்படுகிறார்கள். பிரான்சிஸ் கிருபா கவிதையின் அம்மாவும் மைந்தனும் உலகின் அந்தப்புறத்தில் இருக்கும் ஸ்பானிய மூலையிலும் இங்கேயும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். 

நானும் நீங்களும் மழை விடுவதற்காகவும் அம்மாவிடமிருந்து விடுபட்டு வெளியே செல்வதற்காகவும் காத்திருந்த தருணங்கள் எவ்வளவு அனேகம்? இந்தக் கவிதை, எல்லா அம்மாக்களின் சாயல்களையும் வைத்திருப்பது போல, அனைத்து மைந்தர்களின் சாயலையும் கொண்டுள்ளது. 

மழை நின்றபின் போயேன்

என்றாள் மறுபடியும் அம்மா


நிற்பதாயில்லை மழை

இருப்பு கொள்ளாமல்

இங்கும் அங்குமாய் வீட்டுக்குள் உலவினேன்

துளியில் துவங்கி துளியில் முடிக்கும்

எளிய கலையை 

களைப்பின்றி மேற்கொண்டிருந்தாள்

மழைத் தேவதை

நெடுநேரத்துக்குப்பின்

போய் வருவதாய்க் கூறி

வாசலுக்கு வந்தேன்

மழை நின்றபின் போயேன்

என்றாள் மறுபடியும் அம்மா

சொல்லாமல் கொள்ளாமல்

வெளியேறத் தெரியாத

பிள்ளையாய் இருப்பதை எண்ணி

ஆத்திரமடைந்தேன்

விருட்டென்று எழுந்து வெளியேறியபோது

ஸ்தம்பித்தார்கள் 

மழையும் அம்மாவும்

அம்மாவின் கண்களில்

வளர்ந்தது ஆகாய நீலம்

கருவிழிகளில் கார்மேகத் திரள்

மழை

அரவமின்றி இடம் மாறியிருந்தது

துளித் துளியாய் அடுத்த பாட்டம்

பொழியத் துவங்கியது

என் வயதுகள் கரைந்து

வாசலில் வழிந்தன

இறுதித் துளியை நோக்கி

உருகும் பனிக்கட்டியாய்

என் சரீரம் குறுகியது

மழை நின்றபின் போயேன்

என்றாள் மறுபடியும் அம்மா


சுவரில் மாட்டியிருந்த

புகைப்படமொன்றில்

அடைமழையைப் பார்த்து

விடாது சிரித்துக்கொண்டிருந்தார்

அப்பா.

அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் கவிதைக்கு பிரான்சிஸ் கிருபா வந்திருக்க வேண்டும்.

இன்மையாக இருக்கலாம். ஆனால், அம்மா இருக்கும் இடத்தில்தான், பிரான்சிஸ் கிருபாவும் இருப்பான் பாதுகாப்பாக என்று ஆறுதல் கொள்வோம்.


Comments