Skip to main content

அபியின் பாழ் பிரமிளின் பாழ்


இரைச்சலின்மை, மோனம், நிசப்தத்தின் அச்சைச் சுற்றிச் சுழலும் வார்த்தைகள் அரிய எளிமையையும் சுருக்கத்தையும் அதேவேளையில் அர்த்த நிறையையும் கொண்டுவிடுகின்றன. பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டை அபி பயன்படுத்தும்போதும், நம் அனுபவப் பள்ளத்தாக்குக்குள் தொடர்ந்த எதிரொலிகளை உருவாக்கும் ஆழமான, அதேவேளையில் மிகச் சிறிய வார்த்தைகளைக் கவிதைகளுக்குள் பதித்துவிடுகிறவர் அபி. கூரிய ஓசை போல நம்மைக் குத்தி செருகித் தூக்கிச் சுழற்ற வல்லது .      

அபியின் 'அந்தர நடை' தொகுப்பில் உள்ள 'குருட்டுச் சந்து' கவிதை, ‘மாலை - பாழ்'-ல் திரும்ப இன்னொரு முனையிலிருந்து பிரதிபலிக்கிறது. பாழும் வீட்டினுள் நுழைந்து முடங்கிக் கொண்ட பாழும் தெரு, கவிதை சொல்லியிடம் 'என்னைப் போலத்தான் நீ' என்கிறது. பாழ் என்ற சொல்லை, பாழும் கிணற்றின் உள்விட்டத்துக்குள் தட்டித் தட்டி அடிநோக்கிச் சுழன்று  வீழ்வதைப் போல இந்தக் கவிதையின் இறுதியில் பயன்படுத்துகிறார் அபி.

மாலை -- பாழ்

சீட்டி போன்ற

அந்தக் கூரிய ஓசை

குத்திச் செருகித்

தூக்கிச் சுழற்றியது என்னை


விர்ரென்று

வாடைக்காற்றும் கொஞ்சம்

சதையோடு போயிற்று


தெருவில் யாரும் இல்லை

பாழும் தெரு

அஸ்தமனம் தாண்டி

யாரும் இருப்பதில்லை


மங்கல் விளக்கொளிகளிடையே

செருகிக் கனத்துத்

தொங்கும் இருள்

ரணம் கனல எரிந்தது


இருத்தலின் நிமித்தம் --

தெருவும் நானும் என

இருத்தலே.

யுகத்தொலைவில் தெரிந்துகொண்டிருக்கும்

முகங்களுக்காகவோ

தோளை உரசிப் போகிற

தோள்களுக்காகவோ அல்ல


பாழும் வீட்டினுள் நுழைந்து

முடங்கிக் கொண்ட

பாழும் தெரு

- என்னைப் போலத்தான் நீ-

என்றது


வீட்டினுள்

சுழன்று கொண்டிருந்தாலும்

மையக் கூர்மையின்

உறவற்ற பிணைப்பில்

பாழ்கண்டு

படிந்திருந்தது

எனது பாழ்

வீட்டுக்குள்ளேயே சுழன்றாலும் கவிதை சொல்லிக்கு அது வீடு இல்லை. மையக்கூர்மையின் உறவற்ற பிணைப்பில் தோன்றி இருக்கும் பாழைக் கண்டதால் படிந்த பாழ் அது. 

உறவில்லாத குருட்டுச் சந்தில் பாழ் விரிந்து விடுகிறது போல. பிரமிளின் பாழில் இப்படித்தான் ரத்தமும் இந்திரியத் துளியுமாய் மலர்கள் வீசுகின்றன.



அவள் நாடகபாணியில் தலையை நிமிர்த்திக் கொண்டாள். எனக்கோ களைப்பு. மாலை இருளினுள் புரண்டது. ஏதோ, சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிரியுமுன் கைகளைப் பற்றிக் கொண்டோம். சில வேளை, ஒரு பார்வையின் விபத்து பழைய நினைவுகளைத் தொட்டு மறைந்திருக்கலாம். விரல் நுனிகளை நோக்கி நழுவிய கைகள் திடீரென விழித்த பாழ் நிலங்களாயின. உடன் ரத்தமும் இந்திரியத் துளியுமாய் மலர்கள் வீசின. 

- பிரமிள்

Comments