ஒருவரின் மரணத்தை ஏற்கமுடியாத நிலையில், அவர் செத்து நாம் இருப்பதின் வினோதத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் அந்த மரணத்தைச் சுற்றி காரண, காரியங்களை வைத்துப் பேசுவதற்குத் தொடங்குகிறோம். ஆனால், பகுத்துப் பகுத்துப் பார்த்தாலும் எஞ்சும் ஒரு ரகசியம் மரணத்தைச் சுற்றி இருக்கிறது; அதனால்தான் தொன்றுதொட்டு பயங்கரமாக இருக்கிறது. நேற்றிரவு கோவை ரயிலில் 10.10 மணிக்கு ஏறி ரயில் கிளம்பியவுடன் வண்டியின் அசைவில் கண்ணயர்ந்திருந்த போது, கவின்மலர் தொலைபேசியில் அழைத்தபோதே மிகத் துயரகரமான சம்பவம் ஒன்று என்று தெரிந்துவிட்டது. ‘பிரான்சிஸ் போயிட்டார்' என்று சொல்லிவிட்டு ஏதோ சில வார்த்தைகள் பேசிவிட்டு, இன்னொரு தொலைபேசி வருவதாகச் சொல்லிவிட்டு, துண்டித்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்னர் கவினை அழைத்துக் கொண்டு வடபழனி நூறடி ரோட்டில் பிரான்சிஸ் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்ததுதான் கடைசிமுறை. கொஞ்சம் உடல்நலம் தேறிய, குடிக்காத பிரான்சிஸுடன் சில மணிநேரங்கள் பேசிவிட்டு வந்தது ஆறுதலான ஞாபகமாக இருக்கிறது.
சென்னையில் பிரான்சிஸ் கிருபாவை, காமராஜர் திரைப்படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் அலுவலகத்தில் சந்தித்தது தான் முதல் ஞாபகமாக எனக்கு உள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, எனது தொகுதி வெளிவந்த பிறகு அவரை கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியுடன் சந்தித்தேன். முதல் மாடியிலிருந்த கோடம்பாக்கம் காம்தார் நகர் அலுவலகத்தில் நாங்கள் காலை 10 மணிவாக்கில் படியேறிச் சென்றபோது அங்கே பிரான்சிஸ் கிருபா மட்டுமே இருந்தார். அவருக்கும் விக்கிக்கும் ஏற்கெனவே பரிச்சயம் என்று பேசிக்கொண்டிருந்ததில் தெரிந்தது. 'மெசியாவின் காயங்கள்' தொகுப்புக்கான கவிதைகளை அண்ணாச்சியிடம் அவர் காண்பித்தார். பிரான்சிஸ் அவரிடம் பேசப் பேச அண்ணாச்சியின் முகத்தில் ஏதோ கலவரத்தைப் பார்த்தேன். எனக்கு வேறுமாதிரி தெரியாத நிலையில் மூலையில் இருந்த மரத்தில் செய்யப்பட்ட இடுப்பளவு உயரமுள்ள கண்ணாடி கதவுள்ள புத்தக அலமாரியிலிருந்த புத்தகங்களைத் துழாவிக் கொண்டிருந்தேன். அங்கே ஜே. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள் சில அருமையான பைண்டிங்கில் கிடைத்தன. பிரான்சிஸிடம் இதைப் படிக்க எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். பிரான்சிஸ் என்னிடம், நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் எடுத்து நன்றியுடன் பக்கத்தில் வைத்துக் கொண்டேன். அண்ணாச்சியும் பிரான்சிஸ் கிருபாவும் மொட்டை மாடிக்கு சிகரெட் பிடிப்பதற்குச் சென்றனர். பிரான்சிஸ் அண்ணாச்சியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அண்ணாச்சி தலையை ஆட்டியபடி தன் பாணியில் கேட்டுக் கொண்டேயிருந்தார்.
பிரான்சிஸ் கையெழுத்தில் கவிதைகள் உள்ள காகிதங்களை நானும் படித்தேன். எனக்கு கலாப்ரியாவும் யூமா வாசுகியும் சேர்ந்த தாக்கத்தில் பிரான்சிஸின் கவிதைகள் இருப்பதாகப் பட்டது. அதை உடனடியாகத் தெரிவிக்கவும் செய்தேன் என்று நினைக்கிறேன்.
12 மணி இருக்கும். பாலகிருஷ்ணன் அலுவலகத்துக்கு வந்தார். மொட்டை மாடிக்குத் திறந்திருந்த கடைசி அறையில் நாங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து வரவேற்று என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கு பக்கத்தில் இருக்கும் புத்தகங்களைக் காண்பித்து இவை என்ன என்று கேட்டார். பிரான்சிஸ் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்று சொன்னேன். அண்ணாச்சியைப் பார்த்த பாலகிருஷ்ணன், இப்படித்தான் அண்ணாச்சி செய்கிறார் என்று புகாரைத் தொடங்கினார். பிரான்சிஸ் சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என்றும், அவர் குடியிருக்கும் தெருவில் அதற்கு முந்தின நாள் வீடுகளின் கதவுகளைத் தட்டி பிரச்சினையை ஏற்படுத்தியதையும் கூறினார். பிரான்சிஸ் அமைதியாக தனக்கு மேல் வைக்கப்பட்ட புகார்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தப் புத்தகங்கள் தன்னுடைய சேகரிப்பு என்று என்னைப் பார்த்துக் கூறினார் பாலகிருஷ்ணன். இப்படி நான் இல்லாத வேளையில் செய்துகொண்டிருந்தால் தொடர்ந்து தான் எப்படி கிருபாவை அனுமதிக்க முடியும் என்று விக்ரமாதித்யனிடம் நியாயம் கேட்டார். விக்ரமாதித்யன் பிரான்சிஸுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கரிசனத்துடன் கூறிக்கொண்டிருந்தார். நான் அறைக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை திரும்ப எடுத்த அலமாரியிலேயே அடுக்கிவைத்தேன். விக்ரமாதித்யன் வெளியே என்னை மாலையில் கூட்டிச் செல்லும்போதுதான், பிரான்சிஸ் அவரிடம் பேசிய அத்தனையும் புனைவு என்றும், என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் புலம்பினார். பிரான்சிஸ் அதற்கு அடுத்து சில மாதங்கள் ஊருக்குப் போய்விட்டு ஓரளவு நன்றாகத் திரும்பினார் என்று நினைவு.
இப்படியான அபத்தமான நிகழ்வொன்றில்தான் பிரான்சிஸ் எனக்கு அழுத்தமாக அறிமுகமானார்.
பிரான்சிஸின் கவிதைகள் சார்ந்து அதீதமான ரொமாண்டிக் என்ற எண்ணமும் விலக்கமுமே எனக்கு மிக சமீபகாலம் வரை இருந்தது. விக்ரமாதித்யன், 'மெசியாவின் காயங்கள்' தொகுப்புக்குப் பிறகு வந்த பிரான்சிஸின் கவிதைகளைக் கொண்டாட ஆரம்பித்திருந்தார். வழக்கமான பொறாமையுடன் அவர் சொல்வதைக் கேட்டபடி அலட்சியப்படுத்துவேன். 'மல்லிகை கிழமைகள்' போன்ற கவிதைகள் எனது எண்ணத்துக்குக் கூடுதல் வலுசேர்த்தன. தனிப்பட்ட வகையிலும் பிரான்சிஸுடன் ஒவ்வாமையுடனேயே நான் அப்போது இருந்தேன். நல்வாழ்வுக்கான ருசி மற்றும் ஏக்கத்துடன் குறைந்தபட்ச ஒழுங்குகளைத் தக்கவைக்கப் போராடியபடி பயணித்த எனக்கு அழிவை நோக்கி, சிதைவை நோக்கி வசீகரமாகப் பயணித்த பிரான்சிஸை நெருங்கவேயில்லை.
'சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்' தொகுதியை மிகச் சிறந்த தொகுதி என்று விக்ரமாதித்யன் சொல்ல, அதை வாங்கிக் கொண்டுவந்து ஒரு முறை இரவில் வாசித்துவிட்டுப் படுத்தேன். ஏற்கெனவே இருந்த ஒவ்வாமை, விலக்கத்துக்குக் கூடுதல் நியாயம் கிடைத்த நிம்மதியில் உறங்கப் போனேன். நள்ளிரவில் நனவுக்கும் கனவுக்கும் நடுவே உள்ள நிலையில் பிரான்சிஸின் கவிதைகளிலிருந்த பிம்பங்கள், படங்கள் எல்லாம் பயங்கரத்தின் ஒளியுடன் என் மனத்தில் ஆடத்தொடங்கின. மணி இரண்டரையோ மூன்று மணியோ இருக்கலாம். திரும்ப எழுந்து கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன். அந்த அகால நேரத்தில் தொகுப்பு முழுக்கத் தன்னைத் திறந்துகொண்டது.
இந்தத் தொகுப்பில் பிரான்சிஸின் மொழியுலகம் இரண்டாக உடைந்திருந்தது. சிதைவு, அழிவு, நோய்மையின் அனுபவங்களை எழுதும்போது சர்ரியலான ஓவியங்களை உருவாக்கியிருந்த கவிதைகளை முழுக்க வசனமாகவே எழுதியிருந்தான் பிரான்சிஸ். தொலைந்த காதல், ஏக்கம் என்ற உள்ளடக்கத்துக்கு வரும்போது இசைமையோடு தனது பழைய ஈர நிலத்தில் பயணிக்க முயன்றிருந்தான். கற்பனை உச்சம் கொண்ட புனைவால், மொழியால் உருக்கொண்ட அத்தொகுப்பு குறித்து இரண்டு கட்டுரைகளை எழுதினேன். பிரான்சிஸைப் பற்றிய புரிதலுடன் சேர்ந்து அவரை இணக்கமாக உணர்ந்தேன். பிரான்சிஸும் தொலைபேசியிலும் நேர்ப்பேச்சுகளிலும் என்னிடம் மிகுந்த வாஞ்சையுடன் இருந்தார். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட மொத்த கவிதைத் தொகுதிகளில் உள்ள எனக்குப் பிடித்த கவிதைகள் குறித்து தனித்தனியாக எழுதவேண்டுமென்ற எண்ணம் உண்டு.
பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' நாவலுக்குள் என்னால் இன்னும் செல்ல முடியவில்லை. ஆனால் நான் மதிக்கும் சிறந்த வாசக நண்பர்கள், தோழிகள் 'கன்னி' நாவலின் அனுபவம் வழியாக அவரை கிறிஸ்துவாகவே ஆராதிக்கிறவர்கள். பெண்களுக்கு கிறிஸ்துதான் வேண்டும்; கிறிஸ்துவை விட சற்று மாற்று குறைந்தவர்கள் யாரையும் அவர்கள் விரும்பமாட்டார்கள் தானே.
பிரான்சிஸ் கிருபா அடைந்த மனவாதைகளுக்கும் அகால மரணத்துக்கும் காரணம் ஒரு புராதனமான காதல் என்று யூகிக்க முடிகிறது. ஒற்றை இதயத்தை அடைக்கலமாக நாடிய இடத்தில்தான் அவனுக்கு மரணமுடிச்சு விழுந்திருக்கும் என்று கருதுகிறேன். அவன் குடியில் மூழ்கியதற்கான காரணத்தை முன்வைத்து எழுதிய கட்டுரை ஒன்றில் அதற்கான குறிப்புகள் உள்ளன. மணல் புத்தகம் இதழுக்காக எழுதி பின்னர் ஒரு நூல் தொகுப்பில் அந்தக் கட்டுரை வெளியானது. மும்பை தாராவியின் பின்னணியில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை அனுராக் காஸ்யப் போன்றவர்கள் சினிமாவாக எடுப்பதற்கு ஏற்ற சிறந்த கதை அது. கன்னிக்கு முன்னர் நடத்திய ஒத்திகையாக இருக்கலாம்.
பொதுவான இலக்கிய வாசகர்களாக அல்லாமல், ஆனால் பிரான்சிஸின் படைப்புகளை மட்டுமே படிக்கும் வெறிகொண்ட நிறைய வாசகர்கள், வாசகிகள் பிரான்சிஸ் அளவுக்கு சமகாலத்தில் யாருக்கும் இருப்பார்களா என்று தெரியவில்லை. கன்னி வழியாக ஒரு கிறிஸ்துவாக மாறிய பிரான்ஸிஸ் கிருபாவை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் கூடுதல் கிறிஸ்துவாக்கியது. நண்பர்கள் அனைவரது ஆசையால், அவர்களது விருப்பத்தை முன்னிட்டே, மிக வாதையுற்ற தனது கடைசி ஆண்டுகளை பிரான்சிஸ் வாழ்ந்து முடித்திருக்கிறான். நான் பிரான்சிஸைப் பார்க்கும்போது அவனுக்கு வாழ்வதற்கான விருப்பமோ, உந்துதலோ எதுவுமே இல்லை. இந்தப் பூமியில் தரித்திருப்பதற்கு நம்மிடம் இருக்கும் எல்லா மூலதனங்களையும் நப்பாசைகளையும் அவன் அடித்து விரட்டியிருந்தான். அவனை அச்சுறுத்திய மனப்படங்களிலிருந்து தப்பிக்க அவன் குடித்து குடித்து உடம்பைப் பலவீனமாக்கி மீண்டும் குடிக்கவே முடியாத நிலைக்கு ஆட்பட்டிருந்தான். ஆனால், மனவாதையை என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியாத திகைப்பு இருந்தது. சுற்றியுள்ளவர்கள் தான் உயிருடன் இருக்க விரும்புவதைப் பார்த்து அவன் கேலிச்சிரிப்பு சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். உங்கள் அன்பு வேண்டாம்; ஒரு புதிய கல்லீரல் இருந்தால் தேவலை என்றுதான் அவன் சொல்லியிருக்க வேண்டும். அவன் ஒரு நாவல் எழுதவேண்டும் என்ற ஆசையை எங்களிடம் பார்த்தபோது பகிர்ந்துகொண்டான்.
நம் வாழ்க்கையில் நடப்பதற்கு ஓரளவாவது நாம்தான் பொறுப்பு என்ற நம்பிக்கை பிரான்சிஸ் கிருபா போன்றவர்களின் முடிவில் ஆட்டம் காண்கிறது. துரதிர்ஷ்டம், தீமை, சிதைவு நோக்கி மூர்க்கமாகத் தள்ளும் விதியைப் போன்ற ஒன்றின் வேகத்தில் தப்பித்தவறி ஒருவன் சிக்கிக்கொண்டுவிட்டால், அவனுக்கு நிகழ்வதற்கு அவன் முற்றிலும் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா?
சொல்ல முடியவில்லை.
உடலில் ஒளியும் இருட்டும் மாறி மாறி நிகழும்போது உயிர் தரிக்கிறது. உடலுக்குள் அந்தகார இருட்டு நிரந்தரமாகச் சூழும்போது மரணம் ஏற்பட்டுவிடுகிறது போல.
நாம் இருக்கிறோம். ஏனென்றால் காரண, காரியங்கள் இருக்கின்றன.
Comments