Skip to main content

நகுலனை இரண்டாவது முறை சந்தித்த போது


அந்தரத்தில் பறந்ததொரு

பறவை

ஒரு முறை பார்த்த பின்னர்

இருமுறை கண்டேன்

என்று சொல்வதுண்டா?

                     - நகுலன்


நகுலனை இருமுறைதான் நான் பார்த்திருக்கிறேன். மூன்று முறை பார்த்ததாக மனம் சொல்லச் சொல்கிறது. நகுலனின் விஷயத்தில் அந்தப் பிறழ்ச்சி அழகானதும்கூட. 

மனிதன் ஒரு சாராம்சம், அவனது அத்தனை செயல்களுக்கும் அவனே பொறுப்பு என்ற நவீனத்துவ நம்பிக்கைகளைக் குலைத்துப்போட்டவர் அவர். மனிதனை ஒரு வகையில் இயற்கையின் மங்கிய சாயலாக, சலித்து உதிர்ந்து விரையும் பிராணிகள், பறவைகளாக அதன் வழியே நிழல்கள் பிரதிபலித்துச் செல்லும் நகல்களின் நினைவு ஆறாகப் புத்தகங்களையும் எழுத்துப்பிரதிகளையும் கூடக் கலைத்துப் போட்டு விடுவித்தவர் அவர்தான்.

வெளியில் உள்ள பொதுவாழ்வு கோரும் செயலுக்கு எதிராக இயங்கும் மனம், செயல் அற்ற பாவத்தில் நகுலனின் படைப்பில் தோற்றம் அளிக்கிறது. சுரீரெனும் விபரீத அழகுடன், காமத்தின் உயிர்த்தன்மை பரபரக்க இந்த உலகம் ஏற்கெனவே இறந்துவிட்டதை அறிவிக்கும் படைப்புகள் அவை. இந்தக் கோணத்திலிருந்துதான் செயல் என்பதன் மீதும் வெற்றி என்பதன் மீதும் அவை தம் பெரும் கண்டனத்தை எழுதிச்சென்றுள்ளன.

வாழ்வு என்ற செயல்ரூபத்தை அவர் முழுமையாக குருக்ஷேத்திரமாகவே கண்டு அச்சப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் குருக்ஷேத்திர யுத்தம் தொடங்குவதற்கு முன்பே அதன் எல்லையில் முதலில் தயார் ஆவது மயானங்கள் தான்.

நகுலனைப் போதத்துடன் படிக்கத் தொடங்கியது 'நினைவுப்பாதை' மூலம்தான். அந்த அனுபவத்தை நான் இப்போது உருப்படுத்த முயல்கிறேன். கோயம்புத்தூரில் ஒரு இலக்கியக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது அதன் கடைசிப் பக்கங்களைப் படித்து முடித்தேன். நவீனன் மனநோய் விடுதியில் இருக்கும்போது நடக்கும் மனப்பித்தின் உக்கிரமான பேச்சுகளால் ஆன பகுதி அது.

எப்போதும் பதற்றத்துக்குக் கொந்தளித்த நிலையில் இருக்கும் என் மனம் ஓர் அனாதை நிலையை உணர்ந்த தருணம் அது. இதேபோன்ற அநாதை நிலைகள், ஏற்கெனவே பலமுறை நான் உணர்ந்தவைதான். ஆனால் மனம் என்ற ஒன்று உள்ள அனைவரின் நிலையும் இதுதான் என்று 'நினைவுப்பாதை' நாவல்தான் எனக்கு முதலில் புலப்படுத்தியது. நான் அழவில்லை. ஆனால் நான் கனத்துப்போய் உணர்ந்தேன். அப்போது இருபக்கமும் பெருமரங்களின் நிழலில் பேருந்து நண்பகலில் சென்று கொண்டிருக்கும் காட்சியும் சாலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த வெயில் காட்சியும் இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது.

அதற்குப் பின்பான ஒரு தருணத்தில் சுந்தர ராமசாமியைச் சென்னையில் உள்ள ஓட்டல் பாம்குரோவின் அறையில் தளவாயுடன் சந்தித்தபோது 'நினைவுப்பாதை' குறித்து உவகையுடன் தர்க்க ஒழுங்கின்றி, எனது கண்டுபிடிப்பு என்பதுபோல் படபடவென்று பேசினேன். அவர் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

'இப்படி அவரைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறீர்கள். ஆனால் அவர் பற்றிப் பொருட்படுத்தும்படியாக மலையாளத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு கட்டுரை கூடத் தமிழில் இல்லை' என்று கோபமாகக் குறிப்பிட்டார். எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் என்ன உணர்த்த வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை.

ஆனால், நகுலனைப் பற்றிய காத்திரமான கட்டுரைகளைக் கொண்ட கல்குதிரை நகுலன் சிறப்பிதழ் வந்திருந்தது. அசோகமித்திரன் தொடங்கி எம் டி முத்துக்குமாரசாமி, கோணங்கி வரை நகுலனின் படைப்புகளை முன்னிறுத்தி எழுதிய ஆக்கங்கள் இருந்தன. சுந்தர ராமசாமிக்கு அதைப் 'பார்க்க' முடிந்திருக்கவில்லை. அப்படி இதுவரை நகுலனைப் 'பார்க்க' முடியாத விமர்சகர்களும் படைப்பாளிகளும் உண்டு. 

உங்கள் கண்களில் என் முகம் ஏன் பட்டுப் பட்டு பட்டுத் தெறிக்க வேண்டும் என்று எழுதியவர்தானே நகுலன். 

கடந்த மூன்று வருடங்களில் நகுலனின் படைப்புகளைச் சாட்சிபூர்வமாகத் தொடரும் எனது கவிதைகளின் மீது அவர் நிழல் படர்ந்துள்ளது. அவர் இறந்துபோன செய்தி வந்து பத்து நாட்கள் இருக்கலாம். மதுரையில் என் அலுவலக விடுதி அறையில் ஒரு காலி நோட்டுக்கு முன் ஒரு சாயங்காலம் செயலற்று அமர்ந்திருந்தேன். நகுலன் என்னுள் ஊடுருவிய உணர்வு ஏற்பட்டது. அவரது மொழியில் இருந்து, அவர் சாயலில் என்னால் ஒரு கவிதை எழுதப்பட்டது. அந்தக் கவிதைதான் 'சொற்புணர்ச்சி'. இந்தக் கவிதையை எழுதும்போது என் உடல் ஒரு பஞ்சு நிலையை எட்டியிருந்தது. என் எளிய எழுத்துச் செயலில் மிகவும் நினைவுகூரத்தக்க மாயமான நிகழ்வு என்று அதை எனக்கு நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் சில இடங்களில், அவர் எழுத்தின் சப்த ஞாபகங்கள் பிரக்ஞையுடன் இடம்பெற்றுள்ளன. 

நகுலனை இரண்டாம் தடவை பார்க்கும்போது அவரது முழுமையான படைப்புகளையும் நான் வாசித்திருந்தேன். அவர் படைப்புகளின் வினோத ஒளித்தன்மையுள்ள நடுச்சாமப் பொழுதில் நானும் கவிஞர் விக்கிரமாதித்யனும் கடும் மழையை அழைத்துக்கொண்டு தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவர் வீட்டில் வந்து இறங்கினோம். கதவைத் தட்டினோம். அந்த இரவிலும் ஜன்னல் வழியாக விக்கிரமாதித்யனைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கதவைத் திறந்தார். இது இயல்புதான் என்பது போல் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. அவரது அறையில் உள்ள பல்புஒளி வீட்டைச் சுற்றி நனைந்து கொண்டிருக்கும் வாழைமர இலைகளின் மேல் எண்ணெய் போல் வழிந்தோட, இலைகள் தடதடவென்று துடிக்கும் சப்தத்தில், நகுலன் கிளாஸ்களை எடுத்து வந்தார். நாங்கள் மிச்சமிருக்கும் ரம்மை அவருடன் பகிர்ந்துகொண்டு குடிக்கத் தொடங்கினோம். அந்த இரவு ஈரத்தால் ஆனது.

நீக்கமற விரிந்திருக்கும் மரண போதத்தின் நிச்சயப் பின்னணியில் இலையின் பச்சையும் கிளியின் பச்சையும் கன்னிமையின் ஒளிப்பச்சையும் உயிர்த்துடிப்புடன் நகுலன் வழியாகச் சொல்ல முயற்சிப்பதை நாம் கேட்கவேண்டும்.

Comments