Skip to main content

இளங்கோ கிருஷ்ணனும் ஆனந்தும் சந்திக்கும் அகாலம்


 'பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்' தொகுதியை ஒப்பிடும்போது, எண்ணிக்கை அடிப்படையிலேயே வெளிப்படையாக வளமையையும், வெளிப்பாட்டில் சிருஷ்டிகரத்தை சிந்திவிட்டுப் போய்விடாத சரளத்தையும் கொண்டிருக்கும் புதிய தொகுதியான இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' -ஐப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். அகம் - புறம், அந்தரங்கம் - பொது, தனியியல்- அரசியல், உடல் - மனம் என்று எதிரெதிரான திசையில் புதுக்கவிதையில் சென்று கொண்டிருந்த குதிரைகள், நவீன கவிதையில் நேர்த்தியாகப் பூட்டப்பட்டு, கவிதையின் முழுமையான செல்நெறியில் இயல்பாகப் பயணிப்பதைப் பார்க்கமுடிகிறது. இதற்குத்தான் எத்தனை ரத்தமும் பலிகளும் இங்கே தேவைப்பட்டிருக்கின்றன. இளங்கோவில் கலாப்ரியாவும் யவனிகா ஸ்ரீராமும் ஒரு மரபாக, ஒரு சாயலாகத் தெரிகிறார்கள். வீடு, வெளியைப் பிரிக்கும் சுவர்களை, நிலைகளை உடைத்துப் போட்டு அமர்ந்திருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன். கரோனா ஊரடங்கின் பெயரால் மக்கள் மீது, குறிப்பாக வறிய மக்கள் மீது ஏவப்பட்ட அரச கொடுங்கோன்மைக்கான வன்மையான எதிர்வினை இந்த தொகுப்பில் 'பசியின் கதை' கவிதைத் தொடர் ஆகியுள்ளன.

'பசியின் கதை' கவிதைகளைக் கடந்து, 'மரணத்தின் பாடல்கள்' வரிசையைப் படித்துக் கொண்டிருந்தபோது, ‘உதிர்தல்' என்ற கவிதை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

உதிர்தல்

இவ்வளவு பெரிய பூமியில்

ஒரு பூ உதிர்ந்து

என்ன ஆகிவிடப் போகிறது

நண்பா என்றான்

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில்

இந்தப் பூமியே

உதிர்ந்தாலும் ஒன்றும்

ஆகிவிடாது நண்பா என்கிறான்.

இதைப் படித்தவுடன், இதே ரீதியில் ஆனந்தின் கவிதை ஒன்று இருக்கிறதென்று தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்துக்கு ஒரு தசாப்தம் முன்னால் எழுதப்பட்ட ஆனந்தின் கவிதைப் பண்பும், இளங்கோ கிருஷ்ணன் போன்றவர் எழுதும் கவிதையின் பண்பும், தற்செயலாக ஒரு பேருந்து நிறுத்தத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பே முன்பு இருந்தது இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், 21-ம் நூற்றாண்டின் முதல்பகுதியில் இளங்கோ கிருஷ்ணனும் ஆனந்தும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியில் சிந்திக்கும் சாத்தியம் நிகழ்ந்துள்ளது. 

இளங்கோ கிருஷ்ணன் 'உதிர்தல்' கவிதையை எழுதும்போது ஆனந்தின் அகாலம் கவிதையின் ஞாபகத்துடன் எழுதினாரா என்று தெரியவில்லை. 

ஆனந்தின் 'அகாலம்' கவிதை இது.    

 ஒரு இலை உதிர்வதால்

மரத்துக்கு ஒன்றுமில்லை


ஒரு மரம் படுவதால்

பூமிக்கு ஒன்றுமில்லை


ஒரு பூமி அழிவதால் 

பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை


ஒரு பிரபஞ்சம்

போவதால்

எனக்கு ஒன்றுமில்லை. 


இரண்டு கவிதைகளிலும் விட்டேத்தித்தன்மை இருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் உதிர்தல் என்னும் செயலில் மட்டுமே நம் கவனத்தைக் குவிக்கிறார். ஆனந்தோ, உதிர்தலும் அழிவதும் எங்கே உரைக்கப்படுகிறதென்பதை நோக்கி விரலை நீட்டுகிறார். ஆனந்திடம் இருந்த தன்னிலை, இளங்கோவிடம் படர்க்கை ஆகியுள்ளது.     

Comments