Skip to main content

எஞ்சிய நஞ்சை ருத்திரனுக்கு அளிக்கிறார் இளங்கோ. அதுதானே நியாயமும்

 


பாம்பு, பூனை, மரணம் இந்த மூன்றும் கவிதைக்குள் தென்பட்டாலே போதும், கவிதை துடியோ, வசீகரமோ கொண்டுவிடும். இந்த மூன்றையும் தொட்டும் செய்யுள்களாகிப் போகும் வசவச கவிதைகளையும் துரதிர்ஷ்டமாகப் பார்க்க நேர்கிறது. மரணத்தை அவ்வளவு எளிதாக, கலையாக இருந்தாலும் புனைவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே எனது தரப்பு. மரணம் சார்ந்த அச்சமோ, பொது சமூகத்தில் உள்ள விலக்கம், அமங்கல உணர்விலிருந்து இதைச் சொல்லவில்லை. சகலத்தையும் விட மரணத்தை மிகவும் பொறுப்பாக அணுகவேண்டியிருக்கிறது; சிவதனுஷை எடுப்பதைப் போல; சிறுவர்கள் எடுத்தால் தலையில் கூட விழுந்துவிடலாம். இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் உள்ள துடி மற்றும் சரள அம்சத்தில் விலக்க இயலாமல் மரணத்தின் போக்குவரத்து உள்ளது. மரணபோதத்தின் போதை ஏறிய இந்தக் கவிதைகளோ பிறப்பின் உக்கிர ஆற்றலைக் கொண்டிருப்பதுதான் இதன் விசேஷ அம்சம். 

 கலாப்ரியா வழியாக, ‘இன்னும் கிளிகள்' கவிதையில் உணரமுடியும் 'சாவின் நெடி' வாயிலாக வன்முறையும் துடியும் தமிழ் புதுக்கவிதைக்குக் கிடைக்கிறது.

இன்னும் கிளிகள்


பாகவதர் கிராப்பும்

வெற்றிலைச் சிரிப்புமாய்

அமர்ந்திருக்கிற,

கடுக்கண் தெறிக்க

ஆனால் நிதானமாய்

கழுத்தறுக்கிற

கசாப்புக் காரன்-

கொத்துக் கறிக்கென

யிருக்கிற

அரிந்து பழகின

கிழவன்-

இவர்களில் யார்;

அல்லது அழுதபடியே பால் குடிக்கிற

பேன் பார்க்க விடாமல் முரண்டுகிற

பிள்ளையை முலையிலிருந்து

பிடுங்கி - அடித்துக்

கொல்கிற

ரோட்டோரத்துக் காரி-

யார்

பாம்புகளை இரண்டாய்

மடித்து

நிதானமாய் அரியப் போவது.


புடலங்காயை எடுப்பது போல எடுத்து, கால்களுக்கு நடுவே இருக்கும் அரிவாள்மனையில் பாம்பை அரியும் ரோட்டோரப் பெண்ணின் காட்சி இன்றும் அளிக்கும் உணர்வு வன்மையானது.

யவனிகா ஸ்ரீராமிடமும் இந்த வன்முறையின் உள்ளடக்கம் உண்டு. ஆனால், அது புறாக்களின் முணுமுணுப்பை ஒப்ப, பெண்களின் அந்தரங்கப் பேச்சைப் போல, இரவுக்குறி போல, ஆழ்ந்த உறக்கத்துக்கு முன்னால் எழும் பிரமைகளைப் போலச் சொல்லப்படும். 

கிரணம் காவியம் வழியாக அந்த வன்முறையின் நீட்சியாக, சற்றே செய்பொருளைப் போலத் தோன்றினாலும், நீள்கவிதையில் ரமேஷ்-ப்ரேம் அதைத் தொடர்கிறார்கள். இளங்கோ கிருஷ்ணனின் தீவினைப் பூ கவிதைத் தொடரிலும், பள்ளிகொண்டேஸ்வரம் கவிதைகளையும் இதன் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். தீவினைப் பூ வரிசையில் தான், மரணத்தின் அரவம் உச்சகதியை எட்டுகிறது. காமமும், தற்சிதைவும், சாவுமாய் வசீகர வண்ணங்களாக மாறிப் பூத்த, பெருநகர் குப்பை மேடுகளில், எல்லாரும் புறக்கணித்த பூக்களைப் போலப் பூத்துக்கிடக்கின்றன இந்தத் தீவினைப் பூக்கள்.

‘கோயம்பேடு அல்லது கலாப்ரியா வரையாத ஓர் ஓவியம்' என்ற கவிதையினூடாக, கலாப்ரியா ஏறி ஊருக்குத் திரும்புவதற்காக ஏறிய தீவினை சூழ்ந்த பேருந்து நிலையத்தில் வந்து காலரூபனாய் நிற்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.


வாழை மட்டையைப் படீர் படீர் என

தரையில் அடித்துக்கொண்டு போகும் சிறுவர்களை

வெளியே எட்டிப் பார்த்துவிட்டு

மீண்டும் உள்ளே இறங்கிக்கொள்ளும்

சாக்கடைப் பெருச்சாளி

உஷ் எனப் பெருமூச்சு விட்டு நிற்கும் பேருந்திலிருந்து

இருபத்தொன்றாம் நூற்றாண்டு எல்லாம் இறங்கிக்கங்க

என்று நடத்துனர் குரல் கொடுக்க

சடவாய் இறங்கி நிற்கிறான் காலரூபன். 

  

வாழை மட்டையை அடிக்கும் சிறுவர்களையும், தனித்து விடப்பட்ட இரவொன்றில் தெருவோரக் கோயிலின் கல் முற்றத்தில் தலைமீது விழும் குழல்விளக்கின் வெளிச்சத்தை உடைத்து இருளாக்கும் வெறியுடன் வாழைமட்டையை பிய்ய பிய்ய அடித்துக் கொண்டிருக்கும் பைத்தியம் ஒருவனைப் பார்த்த காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. 

வாழை மட்டையை அடித்துக் கொண்டு போகும் சிறுவர்கள் எங்கே போவார்கள்? 

தத்துவமும் தத்துவமின்மையும் அறிவும் கலையும் வரலாறும் அன்றாட எதார்த்தமும் இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளில் மோதுகின்றன; புணர்கின்றன; குழந்தை பெற்று வெற்றிகரமாகக் குடித்தனமும் நடத்துகின்றன. அந்த சாத்தியம் தான் 'பள்ளிகொண்டேஸ்வரம்'. பிரமிளின் 'தெற்குவாசல்' நெடுங்கவிதையை ஞாபகப்படுத்தக்கூடியது. பிரமிள் எழுதிய சிறந்த வானம்பாடித் தன்மையிலான கவிதை ஒன்றையும் ஞாபகப்படுத்தியது.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்லிவிட்டு காரில் ஏறப்போன கிருஷ்ணனுக்கு விழுந்தது கல்லடி என்ற கவிதை அது.

இளங்கோ கிருஷ்ணனின் 'பள்ளிகொண்டேஸ்வரம்' கவிதையில் 

கார் கதவைத் திறந்துவிட்டு கேட்கிறான் புத்தன்

போலாமா மேடம்.

என்று முடிகிறது. 


பள்ளிகொண்டேஸ்வரம் கவிதையில் இங்கேயுள்ள தத்துவங்களை தெருவில் போட்டு எரித்து நர்த்தனமிடும் இளங்கோவைப் பார்க்கிறேன். புராணிகமும் வரலாறும் தத்துவமும் பிரித்தறியாமல் முயங்கிய ஒரு வெளி எதார்த்தம்  'பள்ளிகொண்டேஸ்வரம்' கவிதையில் பிரதிபலிக்கப்படுகிறது.  

மாறாதவை என்று பெருமையுடன் சொல்வதெல்லாம் எரியத்தான் வேண்டும். எரியவேண்டியவை எல்லாம் எரியத்தான் வேண்டும்.   


எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன போதிச்சத்துவர்களே

காண்பவையும் காண்பவனும் காண்பதுவும்

எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன

பெருகுகிறது ஆலகாலம்

ஆளுக்கு ஒரு மிடறு

முதல் மிடறு ஆசிவகனுக்கு

அடுத்து ஒன்று புத்தனுக்கு

பிறகு ஒன்று ஷ்யாமளனுக்கு

எஞ்சியது ருத்திரனுக்கு.


இன்னும் தீவிரமாய் ஏற்றத்தாழ்வுகளும், அநீதியும், புராணிகத்தின் பெயரில் புதுப்பிக்கப்பட்ட கொடுங்கோன்மையும் பெருகும் தேசத்தில் மரணம் தானே பெரும்பாலான மக்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை அளிப்பதாக இருக்கிறது. 

அப்படியானால் எஞ்சிய நஞ்சை ருத்திரனுக்கு அளிப்பதுதானே நியாயமும்.

Comments