Skip to main content

பல் பொம்மை போதும் ஐயா




சந்தையில் ஒரு சேவையையோ, ஒரு பொருளின் விற்பனை இங்கு நடக்கிறது என்பதையோ குறிப்பிடுவதற்கு, அந்தப் பொருளின்  உருவத்தையோ சித்திரத்தையோ கேலியாக்கியோ எல்லார் கண்ணில் படவும் விளம்பரமாக வைப்பது எந்தக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கும். எழுத்தும் படிப்பும் பரவலாகாத சமூகங்களில் மக்களை ஈர்ப்பதற்கு இந்த உருவங்கள் உதவியிருக்க வேண்டும்.

மருத்துவர்கள் இப்படியாக தங்கள் விளம்பரத்தை, பல்லிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். திருநெல்வேலி கிழக்கு ரதவீதியில், பல் மருத்துவமனையை நிறுவியிருந்த மருத்துவர் சென்னின் க்ளீனிக்கின் முன்னால், பெரிய பல்லின் உருவம் ஒன்று விளக்கொளியில், சங்கிலி பூதத்தார் சிலையைத் தாண்டினாலே தெரியத் தொடங்கிவிடும். பல்லின் உருவங்களைப் பெரிதாக மருத்துவர்கள் வைப்பது, உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்திருக்க வேண்டும். குவெண்டின் டொரண்டினோ இயக்கிய ஜாங்கோ அன் செயின்ட் படத்தில், கருப்பின அடிமைகளுக்கு விடுதலை அளிப்பவராகவும், அரசாங்கம் தேடும் குற்றவாளிகளைப் பரிசுப் பணத்துக்காகக் கொல்லும் பவுண்டி ஹண்டராகவும் வரும் கிறிஸ்டோபர் வால்ட்ஸ், தனது குதிரை வண்டியின் அடையாளமாக ஸ்பிரிங்கில் ஆடும் பல்லின் உருவத்தையே வைத்துக் கொண்டு வருவார். அந்தப் பல்தான் அவரது பணத்தை வைக்கும் பெட்டியும் கூட.

 பல்வேறு வகையான சித்திரச் சாத்தியங்களுக்கு இடம்கொடுப்பதாகவும் பல் இருக்கிறது. அதில் கண்களை வரையமுடியும், மூக்கு, வாய் எல்லாம் போடமுடியும். டூத் பிரஸ் விளம்பரங்களில் பல் நடனமெல்லாம் ஆடுகிறது. 

என்னுடைய ஞாபகத்திலேயே சந்தைகளிலும் மார்க்கெட்களிலும் பிரமாண்ட பனியன் வெளியில் பறக்க, வாடிக்கையாளர்களை அழைக்கும் துணிக்கடைகளைப் பார்த்திருக்கிறேன். செருப்புக் கடைகளில் இன்னும் பெரிய செருப்புத் தட்டிகள் நடைமுறையில் இருக்கின்றன. 

திருநெல்வேலி டவுண் போஸ் மார்க்கெட்டில் மூக்குப்பொடி கடை ஒன்றில், வருடத்தில் ஒரு பருவத்தில், ஒரு ஆள் சைஸ் பொம்மை உட்கார்ந்து உரலில் பட்டணம் பொடியை உலக்கையால் அசைத்து அரைத்துக் கொண்டிருக்கும்.. தேரோட்டத்தை ஒட்டியோ தசராவை ஒட்டியா என்று ஞாபகமில்லை. 

இந்த உருவங்களும் சித்திரங்களும் வழக்கொழிவதும், திரும்ப வேறு ஏதோ ஒருவகையில் மீண்டும் புழக்கத்துக்குள் வருவதும் ஒரு சுற்றுதான் போல. 

அலைபேசி வந்தபிறகு, காட்சி வழி ஊடகங்கள் வலுப்பெற்ற பிறகு, மொழி ரீதியான தொடர்பில் நாம் உருவாக்கிய புதுமையான வடிவங்கள் எல்லாம் ஒரு எல்லையைத் தொட்டுவிட்டது போலத்தான் தெரிகிறது. 

எமோஜிக்கள், மீம்கள், வீடியோக்களே போதுமென்ற அளவில் பக்கம் பக்கமாக எழுதுவது வியர்த்தம் என்று உலகம் முழுவதும் உணரப்படும் காலம் இது. குறிப்பாக உண்மை கொண்டு மறுக்கமுடியாது வலுவாக பொய் செய்திகளையே முதலீடாகக் கொண்டு சர்வாதிகார ஆசையை நோக்கி ஒரு அரசு நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில், அச்சு ஊடகத்துக்கு வேகம் வேகமாக இறுதிவிடை, தொழில்நுட்ப மாற்றம் என்ற பெயரால்தான் கொடுக்கப்பட்டு வருகிறது.

பல் மருத்துவத்தைத் தெரிவிக்க ஒரு பல்லின் வடிவமோ, பொம்மையோ இருந்தால் போதுமென்ற பாமரர்களின் ஊடகம்சார் விவேகத்துக்கு மேல், மற்ற சிந்தனைகளெல்லாம்  மாற்றங்களெல்லாம் வீண்தான் போல.

வாழைப்பழக் குடியரசு போல மாறிவரும் ஒரு இடத்தில், சிந்திப்பதற்கான விவாதிப்பதற்கான உரிமைகளைக் கேட்பதற்கான ஊடகமாக, சென்ற நூற்றாண்டில் உச்சம் கண்ட ஒரு எழுத்தை அழிப்பதுதானே அவசியமானது.  

பல் பொம்மை மட்டும் சந்தையில் இருந்தால் போதும்தானே.          

Comments