Skip to main content

இனிமையே உன்னை எங்கே வைப்பேன்


ரொம்ப நாட்களுக்குப் பிறகு

சாயங்காலம்

என் மீது வெளியே படர்கிறது

மூடிய பூங்காவின் பெஞ்சுகள்

வீடுகளின் ஜன்னல்கள் சுவர்கள் கூரைகளில்

அது அது அவர் அவர்

நிறங்களை விரியத் திறந்து

தன் நிறமின்றிப் பொழிகிறது

சூரியனின் கடைசிப் பிரகாசம்.

தெருவில் வசிக்கும் சினேகித நாயை

ஒரு குட்டிப்பையன்

கழுத்தை இழுத்து வளைத்துக்

 கட்டிக்கொள்கிறான்

அந்த அன்பை அவனுக்கு

யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை

அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை

ஒவ்வொரு அடிவைக்கும் போதும்

ப்பீ ப்பீ ப்பீ எனக் குலவையிடும்

புதிய காலணிகளைக் கேட்டபடியே

மிகக் குட்டியான சிறுமி

அம்மாவுடன் சின்ன அண்ணனுடன்

தெருவின் ஓர் ஓரத்தை எடுத்துக்கொண்டு

எதையுமே ஆக்கிரமிக்காமல்

எட்டு வைத்து நடக்கிறாள்

அவளை நடுவே விட்டு

அவர்கள் நடக்கிறார்கள்

இந்தச் சூரியனை

இந்த வேளையை

எங்கே இறக்கிவைப்பேன்

இனிமையே உன்னை

தெருவிலும் விட முடியாது

வீட்டுக்கும் எடுத்துச் செல்ல இயலாது.

Comments