Skip to main content

அபியின் 'சொல்லாதிருத்தலும் எளிது'


தெரியாமல் ஒன்றைச் சொல்வது மட்டுமல்ல; தெரியும் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லை; சொல்வதற்குத் தேவையுமில்லை என்பது மிகவும் தாமதமாகப் புரிய ஆரம்பித்திருக்கும் தருணத்தில் அபியின் 'சொல்லாதிருத்தலும் எளிது' கவிதை அந்தப் புரிதலை வலுப்படுத்துகிறது. 

முதலில் கமழ்வது எல்லாவற்றுக்கும் முடிவில் ஒரு விதி இருக்கிறது. பழக்கத்தின் ஊழலில், பிரமிள் சொல்வது போல இருண்ட மனத்தின் அனுஷ்டானத்தில் சொல் உருவாக்கும் கமழ்ச்சி நிறைந்த எதார்த்தம், திருமணம் முடிந்த மண்டபத்தில், அடுத்த நாள் விருந்துக்கூடத்திலிருந்து வரும் காடியேறிப் புளித்த உணவு நெடியைப் போல ஆகிவிடுவதுதான் அந்த நியதி. சொல் உருவாக்கும் எதார்த்தம் தானே மெய்மை என்ற தோற்றத்தை, மயக்கத்தைக் கொண்டிருக்கிறது. சொல் உருவாக்கும் எதார்த்தத்தைத் திரும்பப் பெறவும் முடியாது. இப்படித்தான் சொல், நிச்சயத்தினாலான மலட்டுத்தன்மையைத் தவிர்க்க முடியாமல் இந்த உலகத்தில் உருவாக்கிவிடுகிறது, அழிக்கவே இயலாத வேதனைகளின் அணுக்கழிவுகளைப் போல. சொல்லப்படும் போது, சொல்லப்படாதது எல்லாம் தமது உருவங்கள், உடைகளை இழந்து நிழல்களாகின்றன. சொல்லப்படும் போது அங்கே முட்டுச்சந்தையும், அடுத்து வாழச் சாத்தியமில்லாத மரணத்தையும் எதிர்கொள்கிறோம். எதையும் அழுத்திச் சொல்லும்போது அதில் பொய்யும் சேர்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.     

சொல் வெறும் சொல் அல்ல. சொல் உருவாக்கும் படங்கள் வெறும் படங்கள் அல்ல. தன் உடல் குழந்தைக்குப் பரிச்சயம் ஆகும்போது பிதுக்கிப் பிதுக்கி விளையாடும் குறியும் அல்ல சொல். 

சொல்லின்மையிலிருந்து பிறந்து சொல்லின் குறி பற்றிப் பெரியவராகும் குழந்தைகளுக்கு, சொல்லாத இன்மைக்கும், குறியைப் பற்றாமல் திரும்பத் தெரிந்திருக்கிறதா. அங்கேதான் சொல்லும் சொல்லாததுவும் மகத்துவம் அடைகிறது. குழந்தை கிருஷ்ணன் தனது வளர்ப்பு அன்னைக்கு சொல்லாத பிரபஞ்சத்தைத் தான் வாயைத் திறந்து காண்பிக்கிறது.

எதைச் சொல்லும்போதும் சொல்லாதது இல்லாததாகிவிடக்கூடாது என்று சொல்கிறார் கவிஞர் ஆனந்த். இருப்பது வேறு சொல்வது வேறு என்று இன்னும் தெளிவாகச் சொல்கிறார் ஆனந்த்.

சொல்வதைத் தான் இருப்பென்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் கூப்பாடுகள் நெரிக்கும் உலகில், இருப்பின் வெறும் நிழல் சொல் என்கிறார் ஆனந்த், 'சொல்வதும் நிழலும்' நீள்கவிதையில்.

சொல்வதில் நிழல் ஏற்படுகிறது; அதனால் சொல்லும்போது கவனம் இருக்க வேண்டும் என்கிறார்.

அபியின் ஒட்டுமொத்தக் கவிதைகளிலும் சொல்லாமல் சொல்வதின் அமைதியையும் அழகையும் நிகழ்த்தவே விரும்புகிறார் என்பதை 'சொல்லாதிருத்தலும் எளிது' கவிதை வழியாக உறுதிப்படுத்திக் கொள்கிறேன். சின்னச் சின்ன கற்பூர வில்லைகள் போல அபியின் கவிதைகள் சின்ன சின்ன வார்த்தைகளாக, வாசகனுக்குச் சொல்லப்பட்ட பிறகு பதங்கமாகிவிடுகின்றன. உருவே இல்லாமல் போகும் பொருளுக்கு நிழல் எப்படி இருக்கும். அபி அப்படித்தான் இருப்பின் மிக நுட்பமான சுகந்தத்தை காற்று நாவில் படர்த்தும் இனிப்பை மட்டுமே உருவாக்க விரும்புகிறார் போல.

சொல்லின், சொல்லுதலின் அத்தனை கல்யாணக் குணங்களையும் இந்தக் கவிதையில் பிடிக்கிறார் அபி.

தீமையை வெளிப்படுத்தும் சொற்களை விட, நல்லெண்ணம் கொண்ட சொற்கள்தான் இரவு கூட தாண்ட முடியாத யுகம் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் நற்பண்பும் நேசத்துக்குமுரிய அருட்தந்தை ஜோசிமாவின் உடல் அப்படித்தான் எல்லா நம்பிக்கைகளையும் ஏமாற்றி மோசமாக நாறத்தொடங்குகிறது. 

சொற்களின் துர்நாற்றத்தை அனுபவித்த அபிதான், சொல்லாதிருத்தலும் எளிது என்ற இந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டும். சொல்லே இருப்பென்று இருப்பவர்களுக்கு இது புரியுமா?

அதுபுரிய வெகுதூரம் போகவேண்டும். 

 

சொல்லாதிருத்தலும் எளிது


சொல்வதற்கென்று ஒன்று

சொல்லும்போது கமழும்

சிலநாள் கழித்து,

தெருவில் போவோரைப்

பரட்டையாய் வழிமறிக்கும்


சொல்லும்போது தனித்திருக்கும்

சிலநாள் கழித்து,

அழுக்குக் கூந்தல் மூட்டைகளுடன்

உட்கார்ந்திருக்கும்


சொல்லாதிருந்ததற்கும்

சொன்னதற்கும்

இடைவெளியில்

புல்வளர்ந்து

பூமியை மூடும்


தொடர்ச்சியாய்

பேசவராது


ஆயினும் 

பனியிரவில்


ஏதோ உந்துதலில்

ஊர்நெடுகப் புலம்பி உறங்கும்


எப்பொழுதும்

எதன் ஓரத்திலும் நின்று

ஒட்டுக் கேட்கும்


கூர்ந்துவிழும்

பார்வைகளை நழுவி

திடுக்கிட

இல்லாததாகும்


பேசப்படுவதில் சிக்காமல் பின்னல்களைப்

போட்டுவிட்டுப் போகும்


சொல்வதற்கென்று ஒன்று

சொல்லுதல் யார்க்கும் எளிது

சொல்லாதிருத்தலும் எளிது    


Comments