Skip to main content

பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டை


காக்காய் முள் சீனிக்கற்கள் நறநறக்கும்

பாறைக்காட்டில்

வீற்றுள்ளது மோனத்தின் கோட்டை

அயர்ந்தது எத்தனை நூற்றாண்டென்று

தெரியாமல்

சிலைகளென பின்கால்களில் பிருஷ்டம் தொட்டு

முன்னங்கால்களைத் தண்டமாய் தரையில் பதித்து

கோட்டையின் ஆறுதிசைகளில் அமர்ந்து

காவல் காக்கும் பூனைகள்

இரவில் முக்கோண முகம் கொண்ட

ஆந்தைகளாகி விடுவதாய்

கேள்வி


மோனத்தின் கோட்டை இருக்கும் கதைகள் கேட்டு

குரோதத்தின் குதிரைகளில்

வீரர்கள் வருகிறார்கள்

பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு


அதிகாமத்தின் ரத்தக்காட்டேரியொன்று

முகமூடியால் கோரைப்பல்லை மறைத்துக் கொண்டு

முதல் வகுப்பு பயணச்சீட்டெடுத்து

ரயில் ஏறியுள்ளதாம்

பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு



நீள் அங்கிகள் அணிந்து

இடையில் வாளோடு பயணிக்கும்

துன்மார்க்கத்தைத் தவிர வேறொன்றறியாத

சூனியக்காரக் குரங்குகளின் படை

பெயரிடப்படுவதற்கு முன்னாலிருந்த

இருட்டும் கல்லும் சேர்ந்து

மரணக்குளிரைப் பொதித்து வைத்திருக்கும்

வனத்தின் ஆற்றைக் கடந்துவிட்டதாம்

பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு


ஆதி வன்மத்தின் மழைத்துளி பட்டு

எரிமலைக் குழம்பின் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த

டினோசார் தனது வாலைச் சுழற்றி

தீவாந்திரங்கள் தாண்டி

குணமூட்டும் ஒரு குளிகை தேடி

இந்த நிலத்தில் கால்வைத்துள்ளது

பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு


அறுதிசைகளிலும் உறைந்தது போல் இருந்த பூனைகள்

கண்களைத் திறந்து பார்த்தன

காத்த கோட்டை இல்லை

யுகங்களாக நீண்ட தனிமையிலிருந்து

அச்சானியம் தோன்றி நடுங்கிச் சிலிர்த்து

விழித்து வெறித்தது கோட்டை

அங்கே காவல் காத்த பூனைகள் இல்லை

பூனைகளும் கோட்டையும் சுற்றிப் பார்த்தபோது

தான்தோன்றியாய் விரிந்திருந்த வெளி

இல்லை


குரோதத்தின் குதிரைகள் நெருங்கிவிட்டன

முகமூடி இட்ட அதிகாமத்தின் ரத்தக்காட்டேரி

கடைசி நிலையத்தில் இறங்கிவிட்டது

சூனியக்குரங்குகளின் ஆர்ப்பாட்டம் கேட்கத் தொடங்கிவிட்டது

ஆதிவன்மம் பிறப்பித்த டினோசாரின் முதல் அடியில்

எல்லாம் நடுங்குகின்றன.


Comments