எம். கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்த்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆன்டன் செகாவ் கதைகள் தொகுப்பில் உள்ள 'சம்பவம்' கதையைப் படிக்கும்போது, குழந்தைகள் உலகத்துக்கும் பெரியவர்கள் உலகத்துக்கும் நடுவிலிருக்கும் சுவரை எனக்குத் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. குழந்தைகள் தங்கள் உலகத்தில் இருந்து சுலபம் என்று கருதும் எதுவும் பெரியவர்கள் உலகத்தில் சுலபம் அல்ல. பெரியவர்களிடம் உள்ள அளவுக்கு தரவுகள் குழந்தைகளிடம் இல்லை. எப்போதும் குறைவான தரவுகளிலிருந்தே குழந்தைகள் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி முடிவெடுத்துச் செய்யும் காரியம் முடிவில் அபத்தமாகும்போது பெரியவர்கள் முன்னால் அவர்கள் அவமானப்பட்டும் நிற்க வேண்டியிருக்கிறது. அந்தக் குழந்தைகள் மிகுந்த நல்லெண்ணத்தில்தான் புதிதாகப் பிறந்த அந்தப் பூனைக்குட்டிகளுக்கு தாங்கள் சாப்பிடும் உணவிலிருந்து மீதத்தை எடுத்துக்கொண்டு போய் வைக்கின்றனர். ஆனால், தாய் பூனையின் தாய்ப்பாலைத் தவிர அந்தக் குட்டிகளுக்கு அப்போது வேறு எந்த உணவும் தேவையாக இருக்கவில்லை. தனித்தனி அட்டைப்பெட்டிகளில் இரண்டு வீடுகளைச் செய்து அதில் குட்டிகளை வைக்கிறார்கள். தாய்ப்பூனை வந்து அந்தக் குட்டிகளை எடுத்துச் சென்று, தனி வீடுகள் தேவையற்றது இப்போது என்று அந்தக் குழந்தைகளை ஏமாற்றி விடுகிறது. குழந்தைகள், அந்த இரண்டு பூனைக்குட்டிகளுக்கும் தங்களைப் போல அப்பா வேண்டும் என்று கருதித்தான், மாமா கொண்டுவரும் வளர்ப்பு நாய் நீரோவை, பூனைக்குட்டிகளுக்கு அப்பாவாக, பாதுகாவலர் ஆக நியமிக்கின்றனர். அந்த நாயோ, பிஞ்சுக்குட்டிகளை வாழைப்பழம் போல முழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறது.
எனது எட்டாம் வகுப்பு கோடை விடுமுறையில் குறுக்குத்துறை ஆற்றுக்குச் செல்லும் வழியில் நான்கு சக்கர வண்டியில் பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்த போது, ஒரு சர்பத் கடை போட்டால் என்ன என்று யோசனை எனக்குத் தோன்றியது. அருணகிரி திரையரங்கம் அப்போது வரவில்லை. திருப்பணி முக்கைத் தாண்டினால் வலதுபக்கம் இருக்கும் வண்டிக்கடையைத் தாண்டி, ரயில்வே கிராசிங் வரை பெரிய பெரிய மருத மரங்களின் நிழலடி எங்கள் வியாபாரத் திட்டத்துக்கு வசீகர இடமாய் தெரிந்தது. எங்கள் வீட்டில் உபயோகப்படாமல் இருந்த ரோஜா பூக்கள் படமிட்ட மைக்கா தகடு ஒட்டப்பட்ட மர டீப்பாய் ஒன்று இருந்தது. திட்டமிட்ட இரண்டு நாட்களிலேயே தெர்மகோல் ஐஸ் டப்பா ஒன்றையும் நன்னாரி சர்பத் குப்பிகள் இரண்டும் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் வாங்கிக்கொண்டோம். என் அம்மா, வீட்டில் உள்ள கண்ணாடி கிளாஸ்களில் நான்கைக் கொடுத்தார்கள். ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக் கொண்டோம். எலுமிச்சை, கத்தி, ஐஸ்கட்டி எல்லாமே தயார். எலுமிச்சை நெருக்கியை வைத்திருந்தோமாவென்று ஞாபகமில்லை. அடுத்த நாள் காலை என் அப்பாவும் அம்மாவும் வேலைக்குக் கிளம்பியவுடன், ஒரு குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி, பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு, நானும் பிரபுவும் தூக்க முடியாமல் மர டீப்பாயைத் தூக்கி, சிட்டி ஸ்கூலுக்கு சற்று முன்னால் கொண்டுபோய் வைத்து, வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினோம். நான் சொன்ன எல்லா யோசனைகளுக்கும் கூட பிரபு இருப்பான். சர்பத் கடை யோசனையிலும் மரத்தடியில் என்னுடன் நின்றுகொண்டிருந்தான்.
சர்பத் சாரத்தை கிளாசில் கால் பகுதி ஸ்பூனில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை இட்டு, எலுமிச்சையைப் பிழிந்து ஸ்பூன் கண்ணாடியில் கிலுகிலுக்க சர்பத்தைப் போடும் முறை எனக்கு இனிமையான காரியமாகவும் எளிமையானதாகவும் தெரிந்தது. அதுதான் முதல் காரணம்.
ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள்தான் இருக்கும். வண்டியில் பெட்டிக்கடை நடத்தும் கடைக்காரர் எங்களை நோக்கி வந்தார். நாங்கள் தண்ணீர் குடத்தையும் மர டீப்பாயையும் இரண்டு தவணையாக, தடுக்கித் தடுக்கிக் கொண்டுவரும்போதே அவர் எங்களைப் பார்த்தார். நான் அதைக் கண்டுகொள்ளவில்லை.
வந்து எங்கள் முன்னால் நின்று, எங்கள் சுருக்கமான ஏற்பாடுகளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, பத்து நிமிடத்தில் இடத்தைக் காலி செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் மொத்த கடையையும் வயலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என்றும் அச்சுறுத்திவிட்டுப் போய்விட்டார்.
நாங்கள் இப்படியான ஒரு சிக்கல் வரும் என்பதைக் கற்பனையே செய்யவில்லை. ஆனால், அவர் கொடுத்திருந்த அச்சுறுத்தல் எங்களிடம் வேலை செய்தது. உடனடியாக ஒரு குடம் தண்ணீரை, திரும்பத் தூக்க வேண்டிய சிரமம் எதற்கு என்ற நிலையில் கொட்டிவிட்டு, விட்டால் போதும் என்று தோன்றியதுபோல, அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டுக்குப் போய் ஏறக்கட்டி விட்டு, பிரபுவுடன் அவன் வீட்டுக்குப் போய்விட்டேன். சர்பத் பாட்டிலையும் பனிக்கட்டிப் பெட்டியையும் மட்டும் எடுத்துப் போய் பிரபு வீட்டில் அடுத்த நாள் வரை சர்பத் போட்டுக் குடித்துக் கொண்டே இருந்தோம்.
பிரபு வீட்டில் லட்சுமி ஆச்சியிடம் முந்தின தினமே நாங்கள் சர்பத் விற்கப் போகும் திட்டத்தைச் சொல்லியிருந்ததால், முகத்தில் கேலியுடன் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய கதையைக் கேட்டாள், உங்கள் லட்சணம் இதுதானா என்பது போல. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்னரே அதை மற்றவர்களிடம் பேசிப் பெரிய கற்பனைகளை ஏற்படுத்திவிடுவதைப் போலவே சர்பத் வியாபாரத்தைப் பற்றியும் விலாவாரியாக எல்லாரிடமும் விவரித்திருந்தோம். அடுத்த சில வாரங்களுக்கு நாங்கள் சர்பத் விற்கச் சென்று சில நிமிடங்களிலேயே பிடறி தெறிக்க பின்வாங்கிய கதை பத்து வீடுகளிலாவது பேசப்பட்டிருக்கும்.
பொருள் இருந்தால் மட்டும் ஒரு சந்தைக்குள் புகமுடியாது என்ற அடிப்படைப் பாடம் குழந்தைகள் இரண்டு பேருக்கு கிடைத்த முதல் கதை இது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் லக்ஷ்மி மணிவண்ணன் ஒரு கட்டுரையில், ஒரு மார்க்கெட்டில் ஒரு பெண்ணோ, ஆணோ தொழில் செய்வதற்கு எத்தனை கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாததுமான தடைகளைக் கடக்க வேண்டுமென்று எழுதியிருப்பார்.
சாதி, பாலின ரீதியான பிரச்சினைகள், அங்குள்ள மரபு, புழங்கும் இயல்புகள் என எத்தனை விஷயங்கள் பெரியவர்களின் உலகத்தில் இருக்கின்றன?
அந்தப் பெட்டிக்கடைக்காரன் உங்களைப் போய் ஒரு போட்டியாய் பார்த்திருக்கிறானே என்று என் அம்மா சொன்னாள்.
அது எனக்கு இன்னமும் ஆச்சிரியம்தான்.
ஆன்டன் செகாவின் 'சம்பவம்' சிறுகதையைப் படித்தபோது, மேலெழுந்து வந்த ஞாபகம் இது.
Comments