இந்தியாவை இணைக்கும் வெவ்வேறு சாலைகள் அகத்திலும் புறத்திலும் இங்கே இன்னமும் உள்ளன. வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பெயரில் பக்கவாட்டு இருட்டைக் காணாமல், விழுங்கிய கிராமங்களை, சிதைத்த குடியானவர்களின் உடல்களைக் காணாமல், நீளும் சாலைகள் இந்தியாவை இணைக்கின்றன. சுயத்தின் அச்சம் சுயத்தின் வெறுப்பு சுயத்தின் ஆற்றமுடியாத புண்ணை அதிலிருந்து வரும் வலியை புண்பட்ட பண்பாடாக மாற்றி, இறந்தகால மகத்துவத்துக்கும் இறந்தகாலத்தில் நடந்த இழப்புகளுக்கும் இன்று பழிதீர்க்க புறப்பட்டவர்களின் சாலையும் உண்டு. அரசியல், வரலாறு என்ற பெயரில் அந்தச் சாலை வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பெயரில் நீளும் தேசிய நெடுஞ்சாலையோடு தலைநகரத்தில் இணைகின்றன. கலை, இலக்கியம், பண்பாட்டு வெளிகளிலும், அந்த அரதப்பழசான ஆறாத சனாதன ரணத்தின் குரல்கள், தமிழ் சூழலிலும் ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில் ‘மதம் அரசியலின் குறுவாள் கலையோ மதத்தின் குறுவாள்’ என்று கவிதை வழியாக ஒலிக்கும் இளங்கோவின் குரல் அத்தியாவசியமானது.
தரம்பால் போன்ற பெரும் அறிஞரையே இந்தப் புண்பட்ட பண்பாட்டின் வலி, பாபர் மசூதி இடிப்பு நியாயமானதென்றும், காயப்பட்ட பண்பாடு கொடுக்கும் வலியை அனுபவிக்கும் இந்துக்களுக்கு அது வலி நிவாரணி என்றும் சொல்ல வைத்த சாலை அது. அந்தக் காயம்பட்ட பண்பாட்டின் வலிதான் இன்று பிற அடையாளங்கள் அனைத்தையும் அகற்றி, பிற அடையாளங்களைச் சேர்ந்த மக்களையும் சேர்த்து அச்சுறுத்தி கொடுங்கோன்மை அரசாக மாறி அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் ஒரு இந்து ஆலயத்தைச் சுற்றி காலம் காலமாக வாழ்ந்துவந்த இஸ்லாமியக் குடும்பங்களைக் கூட அரசே வெளியேற்றும் தீயூழ் காலம் இது. அந்தப் புண்பட்ட பண்பாட்டின் வலி தீரவே போவதில்லை.
இந்த இரண்டு சாலைகளையும் தாண்டி ஒரு சாலை உள்ளது. பஞ்சம், பிரிவினை , கலவரம் முதல் பெருந்தொற்று வரை குடியானவர்களும் தொழிலாளர்களும் உணவு தேடி, வீட்டைத் தேடி, கிராமத்திலிருந்து பிழைப்புக்காகவென்று நகரத்தை நோக்கி வரலாற்றுக் காலமாக பசியோடு நடந்துசெல்லும், அவசர அவசரமாய் வேலைகளை வாங்கிவிட்டு, அவலமாய் துரத்தி அனுப்பப்படும் வரலாற்று கால சாலை ஒன்றும் இந்தியாவை இணைக்கிறது. அந்த நீண்ட சாலையில் யுகம் யுகமாக நடந்து செல்பவர்களோடு இனம்கண்டு இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கும் கவிதை வரிசை ‘பசியின் கதை’. தாது வருஷப் பஞ்சம், வங்கப் பஞ்சத்திலிருந்து சென்ற ஆண்டு, நான்கு மணிநேர இடைவெளியில் நகரத்திலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டது வரையிலான பசியின் கதையை, யாருமே பொருட்படுத்தாத அனாதை இரவில் சோர்ந்து படுத்து, ஓடும் ரயில் ஏறி உலர்ந்த ரொட்டிகளும் மாமிசமும் கலந்து இறந்துபோன, ஒரு பசியிலிருந்து இன்னொரு பசிக்கு ஊர்ந்துகொண்டிருக்கும் அந்தச் சாலையின் கதையை, வலியின் நிறையோடு எழுதியுள்ளார் இளங்கோ கிருஷ்ணன். ‘பசியின் கதை’ துப்பாக்கியின் வேகத்தில் சொல்லப்படுகிறது. ‘பசியின் கதை’ முதல் கவிதையில் ஒரு புதிரின் சொடுக்கல் உள்ளது. ‘வயிறுகள்’ கவிதை சமத்காரமானது.
‘தீயூழின் பாட்டு’ கவிதையில் அந்தச் சாலை அளக்கப்படுகிறது.
முந்நூற்று அறுபது மைல் கண்ணீர்
முந்நூற்று அறுபது மைல் வியர்வை
முந்நூற்று அறுபது மைல் ரத்தம்
முந்நூற்று அறுபது மைல் பசி
யாருமற்ற நெடுஞ்சாலைகள்
கரும்பாம்புகளாய் புரண்டு படுக்கின்றன
என்றபடி இந்தியாவின் மெய்யான, காவியச் சாயல் சிறிதும் இல்லாத சாலை ஒன்றை அடையாளம் காட்டி வந்து நின்றிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன். ‘பசியின் கதை’ கவிதைகளைப் படிப்பது பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் சில சிறந்த கவிதைகளைப் படித்த அனுபவத்துக்கு ஒப்பானதாக இருந்தது.
பசியின் கதை கவிதைகளில் வள்ளலாரும் கார்ல் மார்க்ஸும் இயல்பாக இணைகிறார்கள்.
Comments