தமிழ் நவீன கவிதையின் இயல்பில், அதை விசேஷம் என்ற அர்த்தத்திலேயே சொல்கிறேன், சிறந்த கவிகள் தமிழ்த் தன்மையுடன், உலகளாவிய உணர்வுநிலையைத் தொடுபவர்களாகப் பெரும்பாலும் இருக்கிறார்கள். நகுலன், பிரமிள், அபி, தேவதச்சன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா என வேறு வேறு தளங்கள், உள்ளடக்கங்களைச் சேர்ந்தவர்களும் பிரத்யேகமாக தமிழ்த்தன்மையைக் கொண்டிருப்பவர்கள்தான். சுந்தர ராமசாமி, ஒருமுறை பிரமிளைப் பற்றி தனிப்பட்ட பேச்சில், தமிழ் மனம் என்ற ஒன்றை அவரிடத்தில் பார்க்கமுடிகிறது என்று சொன்னார். அவர் சொன்ன குணத்தை எனக்குத் தாமதமாக இப்போது அடையாளம் காணமுடிகிறது. இந்தப் பின்னணியில் மராத்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கவிஞரான அருண் கொலாட்கரின் கவிதைகளைப் படித்து, சில கவிதைகளை மொழிபெயர்க்கவும் முயற்சித்தபோதும், சுகுமாரன் மொழிபெயர்ப்பில் மலையாளக் கவிஞர் பி. ரவிக்குமாரின் நசிகேதன் நீள்கவிதையைப் படித்தபோதும் அவர்களிடம் அவர்கள் புழங்கும் மொழி, பிராந்தியப் பண்பு தாண்டியும் ஓர் இந்தியத் தன்மை இருப்பதாக கருதினேன்; கருதுகிறேன். அருண் கொலாட்கர் மும்பை என்ற பெருநகரத்தைப் பற்றிப் பேசும்போதும் நாசிக்கின் அருகில் உள்ள குக்கிராமத்தின் சித்திரத்தை உருவாக்கும்போதும் அது இந்தியாவின் எந்த திசையில் இருக்கும் பெருநகரத்தையும் மூலையில் இருக்கும் குக்கிராமத்தையும் பிரதிபலிக்கவே செய்கிறது.
தமிழில் அந்த இந்தியத் தன்மை, பிரக்ஞைப்பூர்வமான தீர்மானம் இன்றியே கவிஞர்களால் தவிர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது. வாராணசி உள்ளிட்ட சுகுமாரன் எழுதிய சில கவிதைகளில் இந்தியத் தன்மை உள்ளது என்று எம். யுவனிடம் சொன்னேன். உள்ளடக்கத்தை வைத்து அப்படிச் சொல்லலாம்; ஆனால், வெளியீட்டு முறையில் அவர் தமிழ் கவிஞர் என்று சொன்னார். அத்துடன் வெளியீடும் உள்ளடக்கமும் கவிதையைப் பொறுத்தவரை பிரித்துப் பார்க்க முடியாதவை என்பதையும் வலுவாக நினைவுபடுத்தினார்.
தத்துவத்தையும் இந்தியப் புராணிகத்தையும் சரளமாக ஊடாட விட்டு இளங்கோ கிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘வியனுலகு வதியும் பெருமலர்’ கவிதைகளில் இந்தியத் தன்மை தொடர்பிலான மூட்டமான பதில் எனக்குக் கிடைக்கிறது. வைதீகத்தின் செயலிழக்க வைக்கும் தன்மையில் அல்ல; இளங்கோவிடம் நான் காண்பது, அவைதீகத்தின், 'துன்மார்க்க மூர்க்கமும்' துடியும் கொண்ட சக்திகளின் ஆற்றல் இறங்கிய இந்தியத் தன்மை. புத்தரும் யமனும் நசிகேதனும் இயல்பாக உரையாடும் இடத்தை அவரது ‘மரணத்தின் பாடல்கள்’ கவிதை வரிசையில் பார்த்தேன். தினசரி போய் தேநீர் சாப்பிடும் டீக்கடையில் உள்ளவர்களிடம் ‘லைக்’ வாங்கும் ‘அவசரநிலை’ கவிதைகளும் இந்த வரிசையில் நிகழ்ந்துள்ளன. தினசரித் தன்மைக்குள் மூழ்கும்போது ஏற்படும் சிறிய விபத்துகள்தான்.
யம கதை, பயணம், அன்னை இட்ட தீ, யம கதை 2 ஆகிய கவிதைகளைப் படித்தபோது அட்டகாசம் அட்டகாசம் என்று உணர்ந்தேன்.
சுந்தர ராமசாமியின் ‘குரங்குகள்’ சிறுகதையில் வரும் குரங்குகளின் சாயலில் முதலில் விஷமமாகத் தோன்றி ஆழமான வலியைக் கிளர்த்தும் கவிதை ‘யம கதை’. தமிழ் கவிதை உருவாக்கிய மிக உக்கிரமும் விபரீதமுமான காட்சிகளில் ஒன்று இந்தக் கவிதை.
யம கதை
யமன் சொன்னது:
வெறிகொண்ட ஆண் மந்தி
பலாக்காய்களைப் பிய்த்தெறிகிறது.
சடசடவென குளத்தில் இறங்கி
நீர்ப் பாம்புகளைப் பிடித்து
படார் படாரெனத் தரையில் அறைந்து கொல்கிறது
மரக்கிளைகளை முறித்து
புலிக்குறளைகள் மீது வீசுகிறது
மண்வாரித் தூற்றி அரற்றுகிறது
அதோ
அங்கு ஒரு குட்டிக் குரங்கு
நீலம்பாரித்து
வாய்ப்பிளந்து மரித்திருக்கிறது
நசிகேத !
உடலின் ஒவ்வொரு செல்லும் மனமாய் உணரப்படுவதுதான் நவீனகவிதை, புதுக்கவிதையிலிருந்து அடைந்த மாற்றம் என்பதை திரும்ப உறுதிப்படுத்தும் கவிதை ‘பயணம்’. ஆமாம், நான் இங்கு செல்கிறேன் அங்கு செல்கிறேனெனச் சொல்லலாம். நான் எங்கு சென்றாலும் டிக் டிக் டிக்கென உடல் குழி நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது, பார்க்கிறேன் இளங்கோ.
‘அன்னை இட்ட தீ’ கவிதையில் அம்மாவின் தூய வேண்டுதலை இரக்கமில்லாமல், புனிதமோ, அச்சமோ இல்லாமல் கவிதை ஆக்கியிருக்கிறார்.
அன்னை இட்ட தீ!
எங்காவது போய் சா
என அன்னை
கோபத்தில்
சொன்ன நாளில்
இறந்துபோனது குழந்தை
அச்சோ
அது வெறும் சொல்தானே
பொய்க் கோபம்
என்றாள்
சொன்ன கணத்தில்
மனதாரச் சொன்னாய் அல்லவா
என்றது ஒரு குரல்
அவளிடம் சொல் இல்லை
அத்தனை
வாழ்த்துகள் கொஞ்சல்கள்
இருக்க இதுவா பலிக்க வேண்டும்
என்றாள்
சொன்னது பலிக்கவில்லை
பலிக்க வேண்டியதைச்
சொன்னாய் தாயே
நிகழ்ந்தாக வேண்டிய
காலத்தின் தூயக் காத்திருப்பின்
முன்
அத்தனை தூய வேண்டுதல்
யார் தடுக்க இயலும் அதை
நமது விருப்பங்கள், வேண்டுதல் எல்லாவற்றிலும் தூய விருப்பம், தூய வேண்டுதல் என்பதை நம்மால் பகுத்தறிய இயல்கிறதா? அதனால்தானே இத்தனை கோயில்கள், இத்தனை கருத்தியல்கள், இத்தனை பிரார்த்தனைகள், இத்தனை போராட்டங்கள்.
‘யம கதை 2’ கவிதை மந்திரவாதியின் வாக்கு போல உச்சாடனம் போல, அறிக்கை போலத் தொனிக்கிறது. இங்கே புத்தன்தான் யமன் போலப் பேசுகிறானோ என்று எனக்குத் தோன்றுகிறது. புத்தரின் கடுகு கதை ஞாபகத்துக்கு வருகிறது.
மரணமும் எமனும் ஆற்றின் கரையில் உள்ள மணலைப் போல எண்ணமுடியாதவர்களாகப் பெருகும் நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டுகிறார் இளங்கோ இந்தக் கவிதையில்.
ஒரு எல்லையை அபாரமாகக் கடக்கிறீர்கள் இளங்கோ. வாழ்த்துகள்.
Comments