மதுரை கோரிப்பாளையம் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின்
கீழே பெரும்பாலும் பழம்குப்பைகள், புதர்கள் சூழ்ந்த வெம்பரப்பாய் பெரும்பாலும் வைகை நதியை பகலிலும் இரவிலும் கனவுகாணும் மணல்பரப்பில்,
பரட்டையாய் சோனியாய் ஒரு மட்டக்குதிரை மேய்ந்து கொண்டிருப்பதை அந்தப் பாலத்தை பேருந்திலோ
நடந்தோ கடப்பவர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
தேசலாக,
கந்தலாக, தன் கம்பீரத்தை மறந்ததாகத் தெரியும் அந்த மட்டக்குதிரை, ஒரு தோல்வியைப் போல,
ஒரு வீழ்ச்சியைப் போல, ஒரு சிதிலத்தைப் போல, ஒரு சிதைவைப் போல வைகைப் பாலத்தின் கீழே
உள்ள மணல்பரப்பின் நடுவில் உள்ள மண்டபத்தை அச்சாக வைத்து மேய்ந்து கொண்டிருக்கிறது. அது எப்போது வந்து அங்கே இறங்கியதென்று தெரியவில்லை.
எங்கிருந்து
அந்தக் குதிரை இந்த இடத்துக்கு வருகிறது. திருவிளையாடற் புராணத்தின் காலத்திலிருந்து ஒரு குதிரை இப்படியாகி, கோரிப்பாளையத்திலிருக்கும் வைகை நதி செல்லும் வறண்ட பரப்புக்கு வருவது தொடர்ந்திருக்க வேண்டும்.
அப்படியென்றால்
ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்குக் கீழே எத்தனை குதிரைகள் இப்படி வந்திருக்கும். இப்போது
அந்தக் குதிரை மேய்ந்துகொண்டிருக்கிறதா என்று திருச்செந்தாழையிடமோ, ந. ஜயபாஸ்கரனிடமோதான்
கேட்க வேண்டும்.
ஆய்வறிஞர்
சுந்தர் காளியிடம் கேட்கலாம். மதுரையின் திருமுகமா சுயமுகமா அந்தக் குதிரை என்று பார்த்துச்
சொல்வார்.
அந்தக்
குதிரையைப் பற்றி நான் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். திருச்செந்தாழை அந்தக் குதிரையை
இன்றைய வைகையின் இன்றியமையாத நினைவாக எழுதிவிட்டார்.
ஆல்பர்ட்
விக்டர் பாலத்தை கவிஞரும் அறிஞருமான ஏ கே ராமானுஜனும் கடந்திருக்க வேண்டும். அவர் வைகையை
தனது கவிதையில் எழுதியிருக்கிறார். அவர் கவிதையில் அந்தக் குதிரைக்கு இடமில்லை. A RIVER என்ற பெயரில் அந்தக் கவிதை இணையத்தில் கிடைக்கிறது. இணைப்புக்கு : https://allpoetry.com/A-River
வறண்ட
வைகைதான் நவீன கவிஞனின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் வெள்ளம் வந்த வைகையையே பழம்புலவர்கள்
பாடியிருக்கிறார்கள் என்று ஏ கே ராமானுஜம் அந்தக் கவிதையில் குறிப்பிட்டு ஆச்சரியப்படுகிறார்.
ஒவ்வொரு
கோடையிலும் ஒரு துளியாக மணலில் வைகை காய்ந்துவிடுகிறது என்றுதான் தொடங்குகிறார். பெண்களின்
கேசச்சுருள்கள் சேர்ந்து மதகுகளை அடைத்துவிடுகிறதாம். ஈரப்பாறைகள் உறங்கும் முதலைகளைப்
போல, வறண்ட பாறைகள் ரோமம் மழிக்கப்பட்ட எருமைகளைப் போல சூரியனுக்குக் கீழே ஓய்வெடுக்கின்றன
என்கிறார்.
வெள்ளம்
வரும்போது அங்குலம் அங்குலமாக உயரும் வைகையையும் வைகை ஏறிய படிகளின் எண்ணிக்கையையும்
துல்லியமாகப் பேசுகிறார்களாம் மக்கள். மூன்று கிராமத்துக்குடில்களையும் ஒரு சூலுற்ற
பெண்ணையும் இரண்டு பசுக்களையும் இழுத்து வந்திருக்கிறது வைகை. கோபி மற்றும் பிருந்தா
பசுக்களின் பெயர்களாம்.
மூழ்கிய
சூலுற்ற பெண்ணையும் அவளது கருப்பைக்குள் இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாமென்று அனுமானிக்கும்
ராமானுஜம் பிறப்புக்காக அவை வெற்றுச் சுவர்களை மோதியிருக்கும் என்று கூறுகிறார். அந்தப்
பெண்ணைப் பற்றி எந்தக் கவிஞரும் பாடவில்லை என்று குறைப்படுகிறார்.
ஏன் ராமானுஜன், வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன சூலுற்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகளைக் கற்பனை செய்தார். அவற்றுக்கு மச்சமே கிடையாதாம். அவை இரண்டு வேறு வேறு வண்ணங்களில் அரையாடை வேறு அணிந்திருந்ததாம்.
வெள்ளம்
தொடர்புடைய கதைகளில் எல்லாம் ஏன் சூலுற்ற பெண் தொடர்புபடுகிறாள். தண்ணீரோடு சேரும்போது
பெண் ஏன் இன்னொரு சொரூபத்தைக் கொள்கிறாள்?
நாங்கள் வேறு வேறு என்று சொல்வதற்குத் தான் அந்தக் குழந்தைகளுக்கு இரண்டு நிற அரையாடை
தேவைப்பட்டிருக்கின்றன.
கருப்பையில்
உள்ள அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கவிஞன் ஏன் இரண்டு குட்டி உள்ளாடைகளை வேறு வேறு
நிறங்களில் இட்டு அழகுபார்த்தான்.
கவிஞர் ஆத்மாநாமை மன நலப்பிரச்சினைக்குத் தள்ளியதில் அவர் கடைசியாக நடத்திய தொழிலுக்கும் பங்குண்டு. அது குழந்தைகளுக்கு உடை தயாரித்து சந்தைப்படுத்தும் தொழில்.
Comments
Karikalan