Skip to main content

நகுலனின் ‘ஒரு நாள்’குலனின் உலகத்தில் தனியான கதை என்று சொல்லத்தகுந்ததும், தமிழ் சிறுகதைப் பரப்புக்கு வெளியே இன்னமும் புதியதாகத் தொனிக்கும் சிறுகதை ‘ஒரு நாள்’. சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து, 1959’ இதழில் வெளிவந்திருந்தாலும் திரும்பத் திரும்பச் சொல்லி தேர்ந்த வாசகர்களைப் படிக்கத்தூண்டும் சிறந்த சிறுகதைகள் பட்டியலிலோ, விமர்சகர்களின் குறிப்புகளிலோ கூட இந்தச் சிறுகதை இடம்பெறவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நகுலனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் விமர்சகருமான ப. கிருஷ்ணசாமி இந்தக் கதை பற்றி ‘நகுலன் கதைகள்’ தொகுப்பின் முன்னுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்காவிட்டால் நானும் இந்தக் கதையை அடைந்திருக்க மாட்டேன்.

சராசரி அன்றாடத்தின் நெடிய விவரங்கள், சத்தான கதை அம்சம், தெளிவான துவக்கம், முடிவு என சம்பிரதாயச் சிறுகதை ‘உலகியலில்’ வேர்கொண்ட கதை ‘ஒரு நாள்’. ராமகிருஷ்ண பரமஹம்சரின் உலகியல் பார்வையை அவரது ஒரு நாள் வாழ்க்கையிலிருந்து விண்டுகாட்டும் ‘வித்தியாசமான’ கதையும் கூட. பிரம்ம சமாஜ காலத்திய கல்கத்தாவும், தட்சிணேச்வரமும், ராமகிருஷ்ண பரமஹம்சருடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள், மாணவர்கள், பிரம்ம சமாஜிகள் வெறும் பெயர்களாக இல்லாமல் அவர்களது சுபாவங்களோடு நமது கண்களுக்கு முன்னால் உலவும் கதை இது. ஆன்மிகத் தளத்தில் இருந்தவர் என்று சொல்லப்பட்டாலும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உலகியல் விவேகம் எத்தனை கூர்மையானது என்பதைச் சொல்லும் கதைதான் ‘ஒரு நாள்’. நகுலனின் உலகியல் ஆழத்தையும் சொல்லிவிடும் இந்தக் கதையின் வழியாகத் தான் ‘நவீனன்’ பிறப்பதாக நான் நினைக்கிறேன். நகுலனின் நாவல்களில் வரும் தவிர்க்க இயலாத நவீனனின் குணங்களை பகுத்தறிவதற்கும் ‘ஒரு நாள்’ உதவக்கூடும்.

ஈஸ்வர ஸ்மரணையிலேயே பரமஹம்சர் இருந்தாலும் அவர் வைத்திருக்கும் ஆசிரமம் இந்த நிலத்தில்தானே உள்ளது; அவரைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எண்ணப்போக்குகள், லட்சியங்களைக் கொண்ட மக்களும் அங்கு வருவது சகஜம்தானே. அப்படித்தான் அங்கே கொழுத்த பணக்காரர்களான யதுநாத மல்லிக்கும் மதுரபாபுவும் தோட்டி குஞ்சனும் பொழுதைப் போக்கவும் கஷ்டங்களைச் சொல்லி சாந்தி பெறவும் ராமகிருஷ்ணரிடத்தில் வந்துபோகிறார்கள். பரம ஏழையான தோதாபுரியும், தன் மகன் நவீனனுக்கு ஆசிரமத்துக்கு வரும் பணக்காரர் யாரிடமாவது உபகாரத்தை எதிர்பார்த்து பரமஹம்சரின் ஆசிரமத்துக்கு நப்பாசையுடன் சேவை என்ற பெயரில் வந்துபோகத் தொடங்குகிறார். அந்த நப்பாசை அவரிடம் வலுத்து அவரைக் கலவரப்படுத்தும் எண்ணமாக மாறி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில்தான் இந்த ‘ஒரு நாள்’ நிகழ்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசிரமத்துக்கு வரும் தோதாபுரி, கோடீஸ்வரர் ராய் மஹாசயரிடம் தன் மகனுக்கு படிப்புக்காகப் பண உதவி கேட்டு, பரமஹம்சரை அவர் வீட்டுக்கு அழைத்துப் போகிறார். மூன்று ஆண்டுகள் ஆசிரமத்துக்கு வந்தும் தோதாபுரி கற்றுக்கொள்ளாத ஒன்றை ராய் மஹாசயர் கற்றுக்கொடுக்கப் போவதை அறிந்து பரமஹம்சரும் மௌனமாக தோதாபுரியுடன் செல்கிறார். ஆன்மிகம், சம்பிரதாயக் கல்வி இரண்டிலும் நம்பிக்கையில்லாத ராய் மஹாசயர், தனது அனுபவம் கற்றுக்கொடுத்த விவேகத்திலிருந்து ஒரு பாடத்தை தோதாபுரிக்கு அளிக்கிறார். தோதாபுரியின் மகன் நவீனன், அடுத்தநாள் காளிகோயில் அர்ச்சனாகிவிடுகிறான் என்ற தகவலுடன் கதை முடிகிறது.

விமோசனம் வெளியிலிருந்து வருவதல்ல என்பதுதான் இந்தக் கதையின் செய்தியென்று விமர்சகர் ப. கிருஷ்ணசாமி விண்டுவிடுகிறார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் அவரது அமுதமொழிகளைப் படித்தவர்களுக்கும் அவரது சுபாவம் பற்றியிருக்கும் கற்பனையை மேம்படுத்துவதுதான் இந்தக் கதையின் முக்கியமான வெற்றி என்று கருதுகிறேன். உலகியலுக்கு வெளியே ஆசிரமத்தில் இருந்தாலும், உலகை நிராகரித்தவர் என்றாலும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உலகியல் விவேகத்தை நோக்கிய பிரமிப்பை வாசகர்களிடம் வெற்றிகரமாக இந்தச் சிறுகதை ஏற்படுத்திவிடுகிறது. உலகியல் மேல் ஒரு மதிப்பையும் இந்தச் சிறுகதை, கோடீஸ்வரர் ராய் மகாசயர் வழியாக ஏற்படுத்தி விடுகிறது. ஒரு புள்ளியில் துறவி பரமஹம்சரையும் ராய் மகாசயரையும் இணைத்து அடையாளம் காட்டுகிறார் நகுலன்.

நனவுக்கும் நிஷ்டை நிலைக்கும் இடையே செயலுக்கும் செயலின்மைக்கும் இடையே இகத்துக்கும் பரத்துக்கும் இடையில்முயங்கி ஊடாடிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சித்திரத்தை மிகத் துல்லியமாகவே நகுலன் இந்தக் கதையில் எழுப்பிவிடுகிறார். தூலத்துக்கும் அரூபத்துக்கும் இடையில் அநாயசமாக பாயமுடிகிற நகுலனின் மொழி சுபாவத்துக்கு பரமஹம்சர் நயமான இரையாக இக்கதையில் மாறியுள்ளார். தோதாபுரி அதைரியப்பட்டு ஏமாறப் போகிற சந்தர்ப்பம் இது என்று தெரிந்துதான், பரமஹம்சர் அவரிடம், ’உங்கள் டப்பியில் போதிய பொடி இருக்கிறதா?’ என்று கேட்கிறார். நிதர்சனம் தெரிந்தாலும் எளியவரான தோதாபுரியுடன் வேகாத வெயிலில் ஒற்றை மேல்துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு அழைத்தவுடன் மறுபேச்சு பேசாமல் துணைக்குப் போகிறார்.

‘ஒரு நாள்’ கதையின் நடுவில் அடிப்படை வேட்கைகளில் ஒன்றான காமார்த்தம், தாசி ரோஜாமணி மூலமாக விசாரிக்கப்படுகிறது. அது பேசப்படும் இடத்தில் பரமஹம்சர் பாதி மூடிய கண்களுடன் பலகை போல அமர்ந்திருக்கிறார். நகுலனின் முத்திரையான சுரீர் உணர்வு ஏற்படும் இடம் அது. இங்கு தோதாபுரி அடைந்த அனுபவத்திலிருந்துதான் நவீனன் காளி கோயிலில் அர்ச்சகர் ஆகும் சம்பவம் எதிரொலியாக நிகழ்கிறது.

இங்கிருந்தும் நகுலனின் நவீனன் பிறந்திருக்க வேண்டும்.

000

நகுலனின் ‘ஒரு நாள்’ சிறுகதையில் பெயராக வரும் ராணி ராஸமணி, கல்கத்தா நவீனமடைந்த சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்திரம். மீனவர்கள் கங்கையில் மீன்பிடிப்பதற்கு வெள்ளையர்கள் வரிவிதித்த நிலையில், ஒரு பிரமாண்டமான இரும்புச் சங்கிலியை நதிக்குக் குறுக்கே போட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமையை மீட்டவர் இவர். அந்தச் சங்கிலி இன்னமும் அவர் கட்டிய படித்துறைகளில் ஒன்றில்  ராணி ராஸமணியின் நினைவுடன் மினுங்கிக் கொண்டிருக்கிறது. சூத்திரரான ராணி ராஸமணி தட்சிணேஸ்வரத்தில் காளிகோயிலைக் கட்டியபோது, பிராமணர்கள் யாரும் பூசை செய்ய முன்வராத நிலையில் அர்ச்சகராகப் பொறுப்பேற்றவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற ராமகிருஷ்ண பரமஹம்சர்.

அந்த வகையில் ‘ஒரு நாள்’ சரித்திர அம்சம் கொண்ட கதையும் ஆகிறது.   


கல்கத்தாவுக்கு நான் எனது மகளுடன் சென்றிருந்தபோது, காலை நடையில் அமர்ந்திருந்த ராணி ராஸமணியின் பெயரிலான படித்துறையில் இரும்புச் சங்கிலி புகைப்படத்தை எடுத்து அதைப் பத்திரமாகவும் வைத்திருந்தேன்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் விவேகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவரது சீடரான விவேகானந்தரின் லட்சியமும், உத்வேகமும் பெரும் பாதகங்களை அகத்திலும் புறத்திலும் கொண்டுவந்திருக்கும் சூழலில் ராமகிருஷ்ண பரமஹம்சரை நோக்கிக் கவனத்தைக் குவிக்க வேண்டும் கதை இது.

நகுலனின் இடமும் அங்கிருந்தே தொடங்கியிருப்பது ஆச்சரியம்தான்.


Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக