Skip to main content

மாணிக்கவாசகர், பட்டினத்தார், எம். வி. வெங்கட்ராம் எனத் தொடரும் அச்சத்தின் யாத்திரை



எம். வி. வெங்கட்ராம் ‘உயிரின் யாத்திரை’ என்ற நெடுங்கதை பற்றி வே. நி. சூர்யா தான் எனக்குச் சொன்னார். உடனே வாங்கிப் படித்துவிடுவதற்கான தூண்டுதலை சூர்யாவின் பேச்சு எனக்கு அளித்தது.

நித்யகன்னி, காதுகள் அளவுக்குச் செறிவான படைப்பு அல்ல ‘உயிரின் யாத்திரை’. ஆனால், எம். வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள் நாவல் நிகழும் உலகத்துக்கு மிக நெருக்கமானது ‘உயிரின் யாத்திரை’. பெண் என்னும் மாயையிலிருந்து விடுதலை அடைந்து, சதாசிவத்தை அடையும் மிகப் பழைய உள்ளடக்கத்தை, பழைய உள்ளடக்கம் என்று தெரிந்தே எம். வி. வெங்கட்ராம் தைரியமாக, காதுகள் நாவலைப் போலவே கையாண்டுள்ளார். இந்த அறிவு யுகத்துக்கு ஒவ்வாத கதை என்ற விமர்சனத்துக்கும் அவரே, அறிவுக்கு வரம்பு உண்டா? என்று பதிலையும் முன்னுரையில் சொல்லிவிடுகிறார். மறுபிறவி, கடவுள்களின் லீலைகள், அற்புதங்கள் எல்லாம் நடக்கின்றன ‘உயிரின் யாத்திரை’யில்.  

 காதுகள் அளவு விபரீத, பயங்கரத் தன்மை இந்த நாவலில் கிடையாது. ஆனந்த விகடன், அமுதசுரபியில் புழங்கிய அக்காலத்து மொழிதான் என்றாலும், படிப்பதற்கு சுவாரசியமானது.  

காதுகள் நாவலின் நாயகன் மகாலிங்கத்துக்கு நேர்ந்ததை, அவனது நம்பிக்கைகளை எல்லாம் வாசகன் கருதாவிட்டாலும், அவனது துயரங்கள் நமக்கு வசீகரமாகவே உள்ளது. ‘உயிரின் யாத்திரை’ நாவலையும் அப்படி விறுவிறுவென்று படித்துவிடலாம்.  

ராஜா, ராணி என்ற தம்பதிக்கும் சதாசிவம், லீலா தம்பதிக்கும் இடையிலான உறவுதான் இந்தக் கதை. இருகுடும்பத்துக்கும் முன்ஜென்ம பந்தம் ஒன்று உள்ளது. அந்த உறவின் கடனை சதாசிவம், இந்த ஜென்மத்தில் ராஜா வசிக்கும் கும்பகோணத்துக்கு வந்து தீர்க்கிறார்.

சதாசிவத்தின் மனைவி லீலா, ராஜாவின் முன்ஜென்மத்தில் அவனைப் பிரிந்த காதலி. இந்த ஜென்மத்தில் காமத்தின் பெருமாயையால் ராஜாவை ஆட்கொள்ள விரும்பும் மோகினி.

காமவிழைவை ஊட்டி லீலையின் பாதையில் அழைக்கும் லீலாவைத் தாண்டி சதாசிவத்தை ராஜா அடையும் இக்கதையை, யோகத்தின் கதையாக திருமூலரின் பொருத்தமான பாடல்களை மேற்கோளாக இட்டு எழுதியுள்ளார் எம். வி. வெங்கட்ராம்.

‘உயிரின் யாத்திரை’யை நம்ப வேண்டியதில்லை. ஆனால் படிக்கலாம். மாணிக்க வாசகரிலிருந்து, பட்டினத்தார், வள்ளலார் வரை தொடர்ந்து பெண்ணும், பெண்ணின் பாலுறுப்பும், அவளது பாலுறவு விழைவும் எவ்வளவு படுத்தியெடுத்திருக்கிறது. அதை எதிர்கொள்ளவும் கடக்கவும் எவ்வளவு சாதகங்கள், சூத்திரங்கள் இங்கே செலவாகியிருக்கின்றன என்பதை எண்ணும்போது வேடிக்கையாக இருக்கிறது.

சதாசிவம் இருக்கும் அறையின் கதவைத் திறக்க விடாமல் ராஜாவை அப்படித்தான் லீலா, முதலில் மயக்குகிறாள். அதில் ராஜா அடைபடாமல் போக, கோரமுகம் காட்டி அச்சுறுத்துகிறாள்.

மதம், கலை, காவியம் தொடங்கி சந்தை வரை பெண்ணுறுப்பு ஒருவகையில் பிரமாண்டப்படுத்தப்படுகிறது; அல்லது வெறுக்கப்படுகிறது; அல்லது கடப்பதற்கு முயலப்படுகிறது.

‘வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்’ என்று மார்புயர்த்தி ஏன் அஞ்சவேண்டும்?

என்ன செய்கிறாள் அவள். அவளுடைய விருப்பம் ஏன் இப்படி காலம்காலமாக எல்லாப் பண்பாடுகளிலும் படுத்தியெடுக்கிறது அவனை.

ஆம், அது உயிரின் யாத்திரைதான். சாகும் கல்வியை அடையும்போது, சாகாக் கல்வி கிடைத்துவிடக்கூடும்தான்.    

Comments