Skip to main content

மலைச்சாமியின் ‘அத்துவான வெயில்’


சென்னையின் வெயில் வேறு; தெற்கத்திப் பகுதியில் குறிப்பாக வெங்கரிசல் என்று சொல்லப்படும் பகுதியில் அடிக்கும் வெயில் வேறு. 

இருப்பைப் பதங்கமாக்கிவிடக் கூடிய வெயில் அது. அதனால்தான் கரிசல் எழுத்தாளர்களின் படைப்புகளில் வெயில் என்பது தொடர் படிமமாக உள்ளது. கவிஞர் தேவதச்சன் அந்த வெயிலின் உச்சிப்பொழுதை மத் தியானம் என்று அதன் கனம் துலங்க நீட்டுகிறார். அந்தப் பொழுதைத் தான் அவர் அத்துவான வேளையாக மாற்றுவிடுகிறார். சுயம்புலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன் முதல் கைலாஷ் சிவன் வரை வர்ணிக்கும் வெயில் தனித்த வெயில். மார்க்வெஸின் மக்காந்தோவில் அடிக்கும் வெயிலைப் போல, தனி நிலப்பரப்பாக, ஒரு அகப்பரப்பாக தனியாக அந்த வெயில் தனிக்குணரூபத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.

 ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ கவிதைத் தொகுதியில் மலைச்சாமியின் ‘வெயில்’ இப்படி அடிக்கிறது. உயிர்கள், வஸ்துக்களைத் தொடும் அதேவேளையில் தொடாமலும் அந்த அத்துவான வெயில் மயக்கி அடித்துக் கொண்டே இருக்கிறது அங்கு.


எது நிறம்

வெயில் வெளுப்போ நெருப்போ

சொல்லழிந்த

மத்யானம்

வாழையடி வாழைத் தோப்பில்

நிழலும்

அடியும்

அகங்களித்து வளர்ந்த கீற்றுகளும்

எனக்

காட்சிரூபம் காணும் வேளை

முட்டிற்று

மோதிற்று

வெளியெங்கும் கோடிட்டுக்

கீறிற்று வெயில்

ஒருதலை பொருட்டாகுமா

பார்வையைப் பணிக்கையில்

பார்க்கும் பொருளெல்லாம்

பளிச்சென்று மறைகையில்

தூரம்தானோ

வயல்வெளியோ

படுகுழியோ

தாண்டி மேய்ந்தன செம்மறிகள்

யூகத்தில்

ஒரு யூகத்தில்தான்

பறந்தன பறவையினங்கள்

நீள்சதுரச் சுற்றுக்குள் நீர்த்தேக்கம்

நிகழுலகு காட்டுகளையில்

வெளுப்பில்

எரிப்பில்

அதன் முகமும்

நிர்மூலமாகுகையில்

மௌனம் அடையாது

அலைந்ததொரு குறை

பாலை

பயிரினம்

ஈரம்பாலித்த பாறை

மத்யானம் எனும்போது எவ்வளவு கார்வை அதில், மத்யானம் எனும்போது எவ்வளவு நிறை அதில்.   

நிகழுலகின் முகமும் நிர்மூலமாகும் வெயிலில், எந்தக் குறை அடங்காமல் அலைகிறது.

அந்தக் குறைதான் கரிசலை உயிர்ப்பிக்கும் ஆற்றலோ. அந்தக் குறைதான் வெயிலைத் தீயாகப் பிடித்து வெளிவந்துகொண்டிருக்கும் படைப்புகளோ.


Comments