Skip to main content

சத்யா எப்படி உருவானான் - ராம் கோபால் வர்மா



ஐதராபாத்திலிருந்து மும்பைக்கு முதல் முறை வந்தபோது ரயிலிலிருந்து பார்த்த தாராவி சேரி என் கண்களைவிட்டு அகலவேயில்லை. அது ஒற்றைக்கூரை போல் நீண்டு இருந்தது. அங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதே அதிசயமாக இருந்தது. ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாக போய்கொண்டிருக்கும் பாதையில் தண்டவாளத்தில் இருந்து மூன்றடி இடைவெளியில் சின்னஞ்சிறு குழந்தைகள் தவழ்ந்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற விஷயங்கள்தான் மும்பை என்ற நகரத்தின் இயல்பு என்னவென்பதை எனக்குப் புரியவைத்தன. ரங்கீலா திரைப்படத்தை எடுக்கத்தொடங்கியதிலிருந்தே மும்பையின் பொதுவான சூழ்நிலை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.


அவ்வப்போது நிழல் உலகம்(அண்டர்வேர்ல்ட்) என்ற பதம் எனது காதுகளில் விழும். செய்தித்தாள்களில் எழுதப்படுவதிலிருந்து அந்தப்பதம் தாவூத் இப்ராகிம் மற்றும் இன்னபிறரைக் குறிக்கிறது என்று தெரிந்திருந்தது. ஆனால் நிழல்உலகம் என்பது என்னவாக இருக்கும் என்பதை நான் யோசித்துப்பார்த்தது இல்லை. ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தபோது, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ ஒரு கோஷ்டியினரால் பிரபலம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான் அத்தகவல். அந்த இறந்துபோன பிரபலத்துக்கு காலை ஏழு மணிக்கு தொலைபேசி செய்ததாகவும், பின்பு வெளியே போய் யாரோ ஒரு நண்பரை சந்திக்கப்போனபோது 8.30 மணிக்கு கொலையாகிவிட்டதாகவும் கூறினார் தயாரிப்பாளர்.

இதுபோன்ற அசாதரணமான மரணங்கள் நடக்கும்போது அதற்குமுன்புள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நுணுக்கமாக நினைவுகூறும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. அந்த தயாரிப்பாளர் தனது நண்பரின் மரணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் அதை சினிமாவாக யோசிக்கத்தொடங்கினேன். சுடப்பட்டு இறந்துபோக இருக்கும் நபர் ஏழுமணிக்கு எழுகிறார். அவரைக் கொலை செய்யப்போகும் கொலையாளி எத்தனை மணிக்கு எழுவார்? ஒருவரைச் சுட்டுக்கொல்வதற்காக வெளியே போகவேண்டியிருப்பதால், அக்கொலையாளி தனது அம்மாவிடம் காலையிலேயே எழுப்பச் சொல்வானா? கொலைக்கு முன்போ கொலைக்கு பின்போ அவன் காலை உணவு எடுத்தானா? என்று யோசனை விரிந்துகொண்டே இருந்தது. கொல்லும் நபர், கொல்லப்படும் நபர் ஆகியோர் கடக்கும் கணங்கள் இடைவெட்டாக எனது தலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதுபோன்ற நபர்கள் கொல்லப்படும்போதோ அல்லது யாரையாவது  கொல்லும்போதோதான் நாம் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம். அதற்கு இடையில் அவர்கள் என்ன செய்கின்றனர்?

 சத்யா திரைப்படம் உருவானதற்கு அடிப்படையில் வந்த முதல் யோசனை இதுவே.

இதைத் தொடர்ந்த மனநிலையில் இருக்கும்போதுதான் டைம்ஸ் ஆப் இந்தியாவில் கருப்புத்துணியால் முகம் போர்த்தப்பட்ட கைது செய்யப்பட்ட தாதாக்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். பாலிவுட் திரைப்படங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல அவர்களின் உடல்மொழி இல்லவே இல்லை. அவர்கள் மிகச் சாதாரண நபர்களைப் போல இருந்தனர். சாலையில் நடந்துபோகும் சாதாரண ஒரு ஆள் தாதாவாக இருக்கலாம். அடுத்த வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபன் கூட தாதாவாக இருக்கலாம்.

திரைப்பட உலகம் சாராத என நண்பன் ஒருவன் ஒரு சம்பவத்தைச் சொன்னான். அவன் ஓசிவராவில் 14 ஆவது மாடியில் வசிக்கிறான். அவன் வசிக்கும் தளத்திற்கு மேலே வசிப்பவனை லிப்டில் போகும்போது பார்த்து புன்னகைத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அளவுக்கு பழக்கம் இருந்துள்ளது . ஒருநாள் கர்நாடகாவில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக போலீசால் கைதுசெய்யப்பட்டு அவன் அழைத்துப் போகப்பட்டதாக எனது நண்பனின் மனைவி அவனிடம் தெரிவித்திருக்கிறாள்.

என் நண்பன் என்னிடம் அதைப்பற்றி பேசும்போது, " நமக்கு பக்கத்துவீட்டிலேயே பத்து ஆண்டுகள் கூட வசிக்கலாம். ஆனால் அந்த நபர் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்க அதிக வாய்ப்பு உண்டு" என்றான். அப்போதுதான் சத்யாவுக்கான கருவைப் பிடித்தேன். ஊர்மிளாவின் பக்கத்துவீட்டில்தான் சத்யா வசிப்பான். ஆனால் சத்யாவின் பின்னணி தெரியாமலேயே ஊர்மிளா அவனுடன் காதல் வைத்திருப்பார்.
ஒருநாள் அஜித் தேவானி என்ற நபரைச் சந்தித்தேன். அவர் நடிகை மந்தாகினியின் முன்னாள் செயலாளர். அவருக்கு சில தாதாக்களுடன் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு தாதாவுடன் ஏற்பட்ட நேரடி அனுபவம் பற்றிக் கூறினார். அந்த தாதாவின் சகோதரனும் ஒரு தாதா தான். அவரை போலீசார் கொன்றுவிட்டிருந்தனர். அப்போதுதான் அஜித், இந்த தாதாவை சந்திக்கப் போயிருக்கிறார். தனது சொல்பேச்சைக் கேட்காததால் தான் தனது சகோதரன் கொலையாக நேர்ந்தது என திட்டி தனது சகோதரனின் சடலத்தை தாக்கியிருக்கிறார் அந்த தாதா. அந்த செய்தி என்னை உலுக்கியது. ஒரு சடலத்தை அடிப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. தனது அதிகாரத்தால் சகோதரனைக் காப்பாற்ற இயலவில்லை என்ற ஆற்றாமையில் சடலத்தை அந்த மனிதன் தாக்குகிறான். அந்த இயல்பைத்தான் நான் பிகு மாத்ரேயின் கதாபாத்திரத்தில் ஏற்றினேன்.



சந்தரின் மரணத்துக்கு பிகு மாத்ரே இப்படித்தான் எதிர்வினை புரிகிறான்.
நாம் சமூக மனிதர்கள். நாம் குட்மார்னிங், ஹவ் ஆர் யு? என்று சம்பிரதாயமாகப் பேசுகிறோம். நாம் நாகரிக மனிதர்கள். ஆனால் சமூக விரோத சக்திகள் தங்களுக்கென்று சட்டதிட்டங்களை வைத்துள்ளனர்.. சமூக விதிகள் மற்றும் அமைப்புகளுக்கு அவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். அவன் நாற்காலியில் உட்காரும் விதம், சிரிக்கும்விதம், பொது நடத்தை அனைத்திலும் கடூரம் இருக்கும். வீட்டுப்பூனைக்கும் காட்டுப்பூனைக்கு இடையிலுள்ள வித்தியாசம் அது. பிகு மாத்ரே காட்டுப்பூனை போன்றவன். பிகுமாத்ரே பள்ளிக்குப் போனால் நிச்சயம் கடைசி பெஞ்ச்வாசிகளில் ஒருவனாகத் தான் இருந்திருப்பான். அவன் தனது படிப்புகளை தீவிரமாக கருதியிருக்க மாட்டான். ஆசிரியரின் எந்த அறிவுரையையும் கேட்டிருக்கவே மாட்டான்.

நான் போரிவல்லியில் உள்ள பீர்விடுதி ஒன்றுக்கு, லொகேஷன் பார்க்கப் போகும்போது போயிருந்தேன். அங்கே ஒரு முன்னாள் தாதாவைச் சந்திக்க நேரிட்டது. அவனது நடத்தை மற்றும் பாவனையால் என்னை ரொம்பவும் அசௌகரியப்படுத்தினான். பிறகு அந்த இடத்திற்கு நான் படப்பிடிப்புக்குப் போனபோது அவன் என்னிடம் மிகவும் நட்பார்த்தமாக வேறாக நடந்துகொண்டான். நான் அவனைப் பற்றி ஒரு படிமம் வைத்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதற்கு பொருந்துமாறு இதற்கு முந்தைய சந்திப்பில் அவன் தன்னைக் காட்ட முயன்றிருக்கிறான் என்பது தெரிந்தது. இதேபோல பல பிரபலங்களும் நடந்துகொள்வதை கவனித்திருக்கிறேன். யாரோ ஒருவர் தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணுகிறார்கள் என்பதை உணர்ந்துவிட்டால் அவர்களது உடல்பாவம் மாறிவிடும். ஏனென்றால் அவர்கள் நடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதைத்தான் இந்த தாதாவும் என்னிடம் செய்தான். நீங்கள் பாவனை செய்யத்தொடங்கினால் அது வெகுநேரம் நிற்காது. அந்த கதாபாத்திரத்தைத்தான் கல்லு மாமாவாக மாற்றினேன். பில்டர் ஒருவர் தன்னைப் பார்க்க வரும்போது கல்லு மாமா தான் பெரிய தாதா போல பாவனை செய்வார். ஆனால் உண்மையில் கல்லூ மாமா தாதாக்களின் கோஷ்டியில் இருக்கும் ஒரு கோமாளி. அது சிறிதுநேரம் கழித்தே அனைவருக்கும் தெரியவரும்.

பராசால் என்றொரு இடத்தில் அருண் காவ்லி கோஷ்டியில் இருந்த ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. அவரைப்பற்றி என்னிடம் பூதாகரமாக சொல்லியிருந்தனர். ஆனால் அவரை நான் பார்த்தபோது அவர் மிகவும் இனிய இயல்புள்ளவராக இருந்தார். பேசும் ஒவ்வொரு வாக்கியத்திலும் அருண் காவ்லியின் பெயரை உச்சரித்தார். அவரின் இருப்பு, காவ்லியைச் சுற்றியே இருந்தது. அவருக்கென்று தனியடையாளம் இல்லை. அவரிடமிருந்துதான் சந்தரின் கதாபாத்திரத்தை எடுத்தேன். சத்யா படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்துக்கும் நிஜமனிதர்களின் சாயல் உண்டு.
ஆனால் கதை நாயகனின் கதாபாத்திரம் தான் எனது மூளையில் தெளிவில்லாமலேயே இருந்தது. படப்பிடிப்பு தொடங்கியபிறகும் குழப்பமே தொடர்ந்தது. அவன் தலையில் குற்றத்தின் இயல்பு லேசாக  இருந்ததா? அல்லது சாதாரண இயல்புள்ள ஒருவனின் வாழ்க்கையில் அப்படி நேர்கிறதா? என்பதே அக்குழப்பம்.

இந்த வகையில் ஒரு திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்று முடிவுசெய்தவுடன் என்னை சந்திக்க திரைக்கதை எழுத்தாளராக அனுராக் காஸ்யப் வந்தார். நான் அவரைச் சேர்த்துக் கொண்டேன். அவர் சவுரவ் சுக்லாவை அழைத்துவைத்துக் கொண்டார். நாங்கள் நிறைய பேசினோம். ஆனால் எதுவும் தெளிவாக இல்லை. இப்படியாக படப்பிடிப்பின் முதல்நாளின் போது எங்கள் கையில் திரைக்கதை இல்லை. நான் உள்ளுணர்விலேயே படத்தைத் தொடங்கினேன். நாங்கள் நட்சத்திர நடிகர்களைப் பயன்படுத்தாததால், எல்லா நேரமும் நடிகர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தரும் சூழல் இருந்தது.

சத்யாவிடம் ஒருவன் வந்து மாமூல் கேட்கவரும் காட்சியை முதலில் எடுத்தோம். சத்யா அவன்மீது கத்தியைப் பாய்ச்சுகிறான். சத்யா கத்தியால் தாக்கியவுடன் அந்த காட்சியை முடித்துவிடவேண்டும் என்று எனக்கு எண்ணம். அந்த தாதாவாக நடித்தவர் சுஷாந்த். எனக்கு சுஷாந்தை அதற்குமுன்பு பரிச்சயமில்லை. ஏதோ ஒரு துணைநடிகன் என்று நினைத்திருந்தேன். ஆனால் சுஷாந்த், நல்ல நடிகனாக இருந்ததால் அந்த காட்சியை மேம்படுத்தி சத்யா தாக்கும்போது, நான் கட் என்று கத்துவதற்கு முன்பே அவர் ஓலமிடத் தொடங்கினார். அவரது கத்தல் என்னை உலுக்கியது. நான் அவரது ஓலத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் கட் சொல்வதற்கு மறந்துபோய் நின்றேன். சத்யா எப்படி இருக்கவேண்டும் என்பது அப்போதுதான் எனது மனதில் உறுதியானது. ஒரு காட்சியை எடுக்கும்போது அனைத்து இயக்குனர்களுக்கும் ஒரு மனப்போக்கு இருக்கும். இங்கே தொடங்கவேண்டும் இந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பார்கள். அதற்கு முன்பு என்ன நடந்தது. அதற்குப்பின்பு என்ன நடக்கப்போகிறது என்பதைச் சொல்லும்ரீதியில் இப்படம் உருவாக்கப்படவேண்டும் என்று தோன்றியது. நான் அந்த முதல் காட்சிக்குப் பின்னர் நடிகர்களை கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டேன். எழுதிய உரையாடலை யாரும் பின்தொடரவேண்டாம் என்று நடிகர்களுக்கு கூறப்பட்டது. அதனால் பெரும்பாலான நேரங்களில் அந்தக்காட்சியின் சாராம்சம் மட்டும் கூறப்படும். அது தொடர்ந்து நடிகர்களால் மேம்படுத்தப்படும். நான் அதை எடிட்டிங்கில் கட்டுப்படுத்திவிடுவேன். அப்படித்தான் சத்யா சென்றது.

சுஷாந்தின் எதிர்பாராத ஓலம்தான், சத்யா திரைப்படத்தை மாற்றியது என்பதை நான் குறிப்பிடவேண்டும். அவர் அப்படி ஓலமிடவில்லையென்றாலோ, நான் அதை தடுத்திருந்தாலோ சத்யா இப்படியாக வெளிவந்திருக்காது.

சத்யா படத்தில் கதாபாத்திரங்களை பொறுத்த மட்டில் மட்டுமே நான் தெளிவுடன் இருந்தேன். மற்ற பாத்திரங்களை ஒப்பிடும்போது சத்யாவின் கதாபாத்திரம் குழப்பமானது. ஒரு காட்சியில் ஈவிரக்கமற்று ஒருவனை கொல்கிறான். ஜக்குவை கொன்ற பிறகு பிகுமா மாத்ரேவைப் பார்த்து சங்கடத்துடன் சிரிக்கிறான். பிகுமாத்ரி மனைவியுடன் சண்டையிடும்போது சத்யா பிணம்போல அவர்களை வெறித்துப் பார்கிகறான். ஏன் அப்படி நடந்துகொள்கிறான்? நான் அப்படி செய்யச் சொன்னேன். இதனால் தான் சத்யாவாக நடித்த சக்ரவர்த்தியின் நடிப்பில் கடைசிவரை சத்யாவின் நடிப்பு சீரானதாக அமையவில்லை.  இத்திரைப்படத்துக்காக நான் ஏராளமான விவரங்களை காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் சேகரித்தேன். என்னால் அவை அத்தனையையும் ஒரு படத்தில் கோர்க்க முடியவில்லை. தாவூத் இப்ராகிமின் ஆரம்ப நாட்களில் உதவியாளராக அவரிடம் பணிசெய்த ஒருவரை சந்தித்தேன். அவர் நிழல் உலகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. " தாவூத்துக்கும் சோட்டா ராஜனுக்குமான சண்டையில் நிறையபேர் இறந்து போயுள்ளனர். அவர்களும் ஒருவரை ஒருவர் கொல்வதற்காக வெகுகாலம் அலைந்துள்ளனர்.



ஆனால் இன்னமும் தாவூத் இப்ராகிம், சோட்டாராஜனை போனில் கூப்பிட்டால், சிகரெட்டை கீழே போட்டுவிட்டு சொல்லுங்க பாய் என்பார். அந்த அளவுக்கு தாவூத் மேல் சோட்டா ராஜனுக்கு மரியாதை உண்டு. அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தார்கள். ஏனென்றால் அவர்கள் மிகவும் அன்பு வைத்திருந்தார்கள்". அவரது இக்குறிப்பு என்னை மிகவும் நெகிழ்த்தியது. அதை மையமாக வைத்துதான் கம்பெனி திரைப்படம் உருவானது..



Comments