Skip to main content

எம் டி வாசுதேவன் நாயரின் விமலா, ஜானகிராமனின் யமுனா அல்ல, கல்பற்றா நாராயணனின் சுமித்ரா அல்ல


எம் டி வாசுதேவன் நாயர் 90 வயதைக் கடக்கிறார் இன்று என்ற செய்தியைப் படித்தபோது ஒரு புரியாத கிளர்ச்சி எனக்குள் எழுந்தது. அட்சரமாகக்கூடத் தெரியாத மொழியில் எழுதும் ஒருவனின் பிறந்த தினம் எனக்கு ஏன் இப்படி ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற விசாரணையும் தொடங்கியது.

மகாபாரதக் கதையில் அதுவரை ஈர்ப்பு ஏற்படுத்தியிராத கதாபாத்திரமான பீமனை ஒரு விளிம்புநிலைக் குரலாக, பிரமாண்டமான அளவில் எனக்குள் ‘இரண்டாம் இடம்’ நாவல் வழியாக நிலைநிறுத்தியவன் அவன் என்று எனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கவிதையின் மினிமலிஸ்ட் வெளிப்பாட்டை பரிபூர்ணமாகப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட மஞ்சு என்ற பெயரைப் போலவே புகைமூட்டமாக மறைந்துவிடும் மூடுபனியின் தன்மையிலேயே எழுதிய அந்தப் படைப்பை இன்று மீண்டும் படிக்கவேண்டுமென்று மனம் கேவியது.

எம் டி வியின் மிக அளவில் சிறிய நாவலான ‘மஞ்சு’-வை மனத்தின் முணுமுணுப்புகள் என்றே ஒருவர் சொல்லிவிட முடியும். ஆனால் அதைக் கடந்துவிட முடியாது என்பதே அதன் சாதனை.

ஒரு மலையில் ஏறுவதைப் போன்று சுயம் விசுவிசுக்கத்தான் இந்த நாவலைப்படிக்க முடியும். அல்லது அந்த விசுவிசுப்பு இருக்கும்போதுதான் இந்த நாவலை நாம் அடைவோம். சமீபத்தில் மறைந்துபோன மிலன் குந்தேரா சொல்லும் உணர்வை ஒப்பச் சொன்னால், இருப்பின் தாங்கமுடியாத இறகுச்சுமையை இறக்கமுடியாமல் கடக்கும் நாவல் இது.

மஞ்சுவின் நாயகியான விமலா, அவள் சந்திக்கும் எல்லாருடைய அனுபவங்களையும் தன்வழியிலோ தன் புறத்திலோ அதன் இயல்பிலேயே கடந்துவிட அனுமதிக்கிறாள், மேகத்தைப் போல, மூடுபனியைப் போலவே, பல துக்கங்களுடனேயே.

பூர்விக நிலமான கேரளத்திலிருந்து பெற்றோர்கள் காலத்திலேயே பிரிந்துவந்து, கோடை காலத்தில் மட்டுமே மகத்துவமும் வர்த்தகமும் கிடைக்கும் மலைவாசஸ்தலமாகிய நைனிடாலில் பள்ளி ஆசிரியராக விடுதியில் பழைய நினைவுகளுடன் வசிக்கும் மலையாளப் பெண்ணான விமலாவின் சிதறிப் பிரிந்துவிடக் கூடிய பஞ்சுப்பொதியான மேகம் போன்ற இருப்பைப் பிரதிபலிக்கக்கூடியவனாக வெள்ளைக்காரத் தந்தையின் புகைப்படத்தை வைத்து அவர் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறுவன் புத்து மட்டுமே கதையில் பிரகாசமாகத் தென்படுகிறான்.

மரணம் அளித்த கெடுவுடன் கடைசிப் பயணமாக, நைனிடாலில் விமலா தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து சேரும் சர்தார்ஜி, வெளியேறுபவன் உணரும் இலகுத்தன்மையை நமக்குக் காண்பிப்பவன். விமலாவிடம் அவனுக்கு இருக்கும் வாத்சல்யத்தை சுமையில்லாமல் பகிரமுடிகிறது. இறுகி மூடியிருக்கும் அவளை இழுத்துக்கொண்டு மலையேற முடிகிறது. மரணத்தின் நெடிய பள்ளத்தாக்கை எவ்வளவு இனிமையானது பாருங்கள் என்று அவன் சில பக்கங்களில் காண்பித்துவிட்டுப் போய்விடுகிறான். மரணம்தான் சர்தார்ஜியை அத்தனை உயரமான இடத்துக்கு அழைத்தும் வந்திருக்கிறது.

 சர்தார்ஜி போல நம்மால் ஏன் நடந்துகொள்ள முடியவில்லை? நாமும் வெளியேறுவதற்கு கெடு அளிக்கப்படாமல் இங்கே இருப்பவர்கள்தானே. 



எல்லா அனுபவமும் துளிர்த்து பூத்து காய்த்து பழுத்து உதிர்கிறது மஞ்சு நாவலில்.

பெண்மையை ஒரு மூடுபனியாகப் படரவிட்டிருக்கிறார் எம் டி வாசுதேவன் நாயர். உடலிலியாக இல்லாமல் பெண் என்ற தொலைவைத் தாண்டுபவளாக இருக்கிறாள் விமலா.

எதுவுமே பெரிதாக மாறாது என்கிறபோதும் இருப்பு அனுசரித்துக் கொண்டேயிருக்கும் ஏதோ ஒன்றுக்கான காத்திருத்தலை விமலா அனுமதிக்கிறாள். சிறுவன் புத்துவுக்கும் அவள் மாணவி ரஷ்மிக்கும் அதை அனுமதிப்பது போலவே எனக்கும் அனுமதிக்கிறாள்.

அப்போது விமலா பெண் என்ற நிலையையும் கடக்கிறாள்.

தி ஜானகிராமனின் யமுனா எனக்குப் பெண்தான்; ஒரு பிரகிருதிதான். கல்பற்றா நாராயணனின் சுமித்ராவோ தன் மரணம் வழியாக ஒரு இயற்கையாக எனக்கு ஆகிவிடுகிறாள். 

எம் டியின் விமலா, ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக அடையாளம் காணக்கூடியவளாக இருக்கிறாள் மூத்தும் திரைத்தும் நரைத்தும்.   

கவிதையென்னும் வடிவத்தில் ஈடுபடுபவனாக எம் டி வாசுதேவன் நாயரின் சாதனை எதுவென்றால் நான் மஞ்சுவையே சொல்வேன். 

ரீனா ஷாலினி மொழிபெயர்த்திருக்கும் மஞ்சுவில் சுகுமாரன் எழுதியிருக்கும் கட்டுரை வழியாகவே நான் முன்பு படித்த மஞ்சு நாவல் சி ஏ பாலனால் மொழிபெயர்க்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டேன். 

இருப்பின் புதிர்மூட்டத்தை ஒரு பூனையாக எங்கிருந்தோ கவனிக்கும் படைப்பு மஞ்சு. 

இருப்பின் தாங்க முடியாத இறகுச்சுமை போன்று வந்துசென்ற அனுபவ மேகங்கள் போன்ற புகைமூட்டத்தைத் தவிர அந்த நாவலின் நிறைதான் என்ன? ஆனால், அந்த நாவல் அந்தக் கதாநாயகிக்கு இருக்கும் இனிய ரணத்தை வாசகனுக்குள்ளும் எப்படி அத்தனைச் சிறிய வெளியில் கடத்திவிடுகிறது? 

Comments