Skip to main content

எனது புதிய நூல் 'நான் பிறந்த கவிதை' முன்னுரை - என் கவிதைக்கான மூல உருவகம் நோக்கி


பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம். அத்துடன் குறிப்பிட்ட கவிதை, கவிஞர் சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்வதாகவும் திட்டமிருந்தது. குறுந்தொகை கவிதை பற்றி முதல் கட்டுரையை எழுதி முடித்திருந்த நிலையில், நண்பர் சி. மோகன், பாதித்த கவிதையைப் பற்றி எழுதுவதை விட, பாதித்த கவிதைகளை வாசித்தபோது இருந்த மனநிலையையும் மூட்டத்தையும் சூழலையும் சென்று பார்த்து, மொழிக்குள் இழுத்துவர முடிந்தால் வித்தியாசமானதாக அமையும் என்று குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு தலையீட்டை நிகழ்த்தினார். தலைப்பில் ‘நான் பிறந்த கவிதை’யை ‘நான் பிறந்த க-வி-தை’ என்று மாற்றியவர் கவிஞர் தேவதச்சன். சி. மோகன் சொன்ன அடிப்படையை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதப்பட்டன. குறுந்தொகையிலிருந்து இத்தொடரை அம்ருதா மாத இதழில் பெருந்தொற்றுக்குச் சற்று முன்னர் தொடங்கினேன். 

இரண்டாவது அலைக்குப் பிறகு முடித்தேன். நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் என்னை முழுமையாக சிலகாலம் ஆட்கொண்டிருந்த கவிஞர்கள், கவிதைகளையே ‘நான் பிறந்த க-வி-தை’ தொடரில் எழுதவேண்டுமென்று நினைத்திருந்த நிலையில் எட்டு கட்டுரைகளோடு முடிப்பதே நேர்மையானதாகப்படுகிறது.சற்று நீட்டினாலும் பொய் தோன்றிவிடும். 

முதல் தொகுதிக்கு முந்தைய கவிதை தொடர்பான ஒரு மூல உருவகத்தை உருவாக்கியவர்களை மட்டுமே பிரித்தெடுப்பது சவாலாக  இருந்த அதேவேளையில் தன்கதியிலேயே அடுத்தடுத்த கட்டுரைகள் நிகழ்ந்தன.

நவீன இலக்கியம் அறிமுகமான கல்லூரிப் பருவத்திலேயே சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆசிரியர்கள் நேரடியாக எனக்கு அறிமுகமாகிவிட்ட நிலையில் கவிஞராக பசுவய்யா என்ற சுந்தர ராமசாமி ஆரம்ப நிலையிலும் என்னைப் பாதிக்கவில்லை என்பது இந்தக் கட்டுரைகளை எழுதும்போதுதான் தெரிந்தது.ஞானக்கூத்தனின் ‘மீண்டும் அவர்கள்’ கவிதைத் தொகுதியைப் படித்தும் அந்தக் காலகட்டத்தில் அவர் என்னுள் தீவிரமான சலனங்களை ஏற்படுத்தவில்லை.

பிற்காலத்திய ஞானக்கூத்தனின் ‘பென்சில் படங்கள்’ தொகுதிக்குப் பிறகுதான் அவர் கவிதைகள் என்னிடம் செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கின. மதிப்புக்குரிய கவிதைஆசிரியர்களாகவும் நண்பர்களாகவும்இருந்தஎம். யுவன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களும் ‘நான் பிறந்த க-வி-தை’யில் இல்லை. காலச்சுவடு காலாண்டிதழில் இரண்டு பக்கங்களில் வந்த கவிதைகள், தன் புகைப்படம் வழியாக என்னில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஈழக்கவிஞரும், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவருமான நட்சத்திரன் செவ்விந்தியன் பற்றிய ஒரு கட்டுரை இருக்கிறது. அவரை நான் இதுவரை நேரில் பார்க்கும் வாய்ப்பே வரவில்லை. ஆனால், அவரது கவிதைகளை வாசித்தபோது அவருடன் கண்ட அடையாளமும் உயிர்ப்பும் அதிகம். கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகிய கவிஞர்கள் செலுத்திய தாக்கம் எனக்கு பரிச்சயமான ஊர், பண்பாடு சார்ந்ததாகவும் இருந்திருக்கும் என்பதை தற்போது உணரமுடிகிறது.

இந்தச் சிறிய நூல் மதுரை நண்பர் வரதனுக்கு சமர்ப்பணம். நண்பர் சாம்ராஜ் வாயிலாக அறிமுகமாகி, நான் தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தையும் உயிர்ப்பையும் கொடுத்து வருபவர் அவர். வலைப்பூவாக இருந்த எனது தளத்தை, இணையப்பக்கமாக ஆக்கி, அதுதான் எனது எப்போதைக்குமான எழுத்துத்தளம் என்று காட்டியவர். ‘நான் பிறந்த க-வி-தை’ தொடராக அம்ருதாவில் வெளிவந்ததற்குக் காரணம் நண்பன் தளவாய் சுந்தரம். என்னை அவன் போகும் இடத்துக்கும், அவனை நான் போகும் இடத்துக்கும் அழைத்துக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போய்க் கொண்டே இருக்கிறோம். வலிய இடம், எளிய இடம் என்றில்லாமல் அப்படிப் போய்க்கொண்டே இருக்கும் எங்கள் உறவின் பயணம் கனிந்து பரிணமித்துள்ளது. அவனுக்கு நன்றியெல்லாம் அவசியமேயில்லை. என் பொய்கள் உண்மைகளை பாசாங்குகள் நேர்மைகளைத் தெரிந்து கலந்து கிடப்பவன். எனது அனுபவங்கள், தாக்கங்கள் எல்லாவற்றுடனும் அவனும் இருக்கிறான். 

இந்த நூல் வெளிவருவதற்குக் காரணமான வேரல் புக்ஸின் அம்பிகாவிடமும் லார்க் பாஸ்கரனிடமும் என்னை ஆற்றுப்படுத்தியவர் யவனிகா ஸ்ரீராம். அவனுக்கும் எனது நன்றி.

Comments