Skip to main content

ஓவியர் நம்பூதிரி மறைந்தார்


மெட்ராஸ் கலை இயக்கம் உலகுக்கு வழங்கிய முதன்மையான ஓவியர்களில் ஒருவர் கருவாட்டு மனை வாசுதேவன் நம்பூதிரி ஆவார். கே. சி. எஸ் பணிக்கர் உருவாக்கிய சோழமண்டலம் ஓவியர் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தவர். தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளுக்கும் அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் அழியாத படிமங்களை அளித்தவை இவர் வரைந்த சித்திரங்கள். நம்பூதிரி என்ற கையெழுத்து ஒரு மலையாளியின் ஆழ்நினைவில் பதிந்த ஒன்றாக இன்றுவரை திகழ்கிறது.


தற்போது 96 வயதாகும் ஓவியர் நம்பூதிரிக்கும் மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் உள்ள உறவைச் சொல்கிறது ‘கந்தர்வன் - டூ லெஜண்ட்ஸ்’ என்ற பெயரில் அகில் சத்யன் உருவாக்கிய குறும் ஆவணப்படம்.

மோகன்லால் நடிகராகப் புகழ்பெறத் தொடங்கியதிலிருந்தே அவருடனான உறவையும் சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில் மோகன்லால் தன் வீட்டுக்கு வந்தபோது முதல் முறை சந்தித்ததையும் நினைவுகூர்கிறார் நம்பூதிரி. ஓவியத்தில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் முக்கியமான தருணங்களில் கோட்டுச் சித்திரங்களைக் கிறுக்குவதையும் பகிரும் மோகன்லால், நம்பூதிரியின் பல ஓவியங்களைப் பாதுகாத்து வருவதைச் சொல்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லகரியைப் படித்த தாக்கத்தில் அதில் வரும் ஒரு கவிதையை, நம்பூதிரியிடம் காட்டி ஓவியத்தை வரைந்து தரப் பணித்ததையும் இருவரும் நினைவுகூர்கின்றனர். நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் நம்பூதிரியால் அந்த ஓவியத்துக்கான உத்வேகத்தை அடையமுடியவில்லை. மோகன்லால் தன்னைக் கூப்பிட்டுத் தன்னைக் கேட்கவேயில்லை என்று கூறுகிறார் நம்பூதிரி. ஒரு ஓவியனுக்கு எப்போது தூண்டுதல் வருமோ அதுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற புரிதலை மோகன்லால் பகிர்ந்துகொள்கிறார். நம்பூதிரியின் பெண்கள் (நம்பூதிரியுடே ஸ்த்ரீகள்) ஓவிய நூலுக்கு மோகன்லால் முன்னுரையும் எழுதியிருக்கிறார்.



‘கந்தர்வன்’ என்ற ஆளுயர ஓவியத்தை முன்னிட்டு ஓவியர் நம்பூதிரியும் மோகன்லாலும் நம்பூதிரி இல்லத்தில் சந்திக்கும் நிகழ்வை ஒட்டித்தான் இந்த குறும் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மோகன்லால், நம்பூதிரியின் முன்னர் ஒரு குழந்தையைப் போல கிளர்ச்சி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். 

நம்பூதிரி, தோட்டத்து மரத்தைப் பார்த்தபடி ஒரு அறையின் நிலைப்படியில் நிற்கும் தோற்றம் ஓர் ஓவியத்தைப் போல ஒரு ஷாட்டில் பதிவாகியுள்ளது. அவரது ஓவியங்களின் ஞாபகம் வந்துபோகிறது. 

நம்பூதிரி வரைந்த கந்தர்வன் ஓவியமும் காண்பிக்கப்படுகிறது. இந்துப் புராணக் கதாபாத்திரமான காமதேவனிடமிருந்து உந்துதல் பெற்று இந்த ஓவியத்தை வரைவதற்குப் பணித்ததாக மோகன்லால் பகிர்கிறார்.  

சில ஓவியங்களால் மட்டுமே எனக்குப் பரிச்சயமாகியிருந்த நம்பூதிரியின் அக உலகத்தையும் மோகன்லாலின் இன்னொரு அம்சத்தையும் அளிக்கும் படம் இது. 

 ‘கந்தர்வன் - டூ லெஜண்ட்ஸ்’ ஆவணப்படத்தைப் பார்ப்பதற்கு

Comments