ஒரு எழுத்தாளனின் ஆக்கங்களாக , அவனது தொனியில் ஈடுபட்டு பிரதிபலித்து திரும்பத் திரும்ப மனத்தில் புறத்தில் புத்தகங்களில் போய் சரிபார்த்துக் கொண்டு ஆளுமையில் அவரைப் புதுக்கிக் கொண்டு நான் அதிக காலம் செலவழித்திருப்பது நகுலனுடன். பொருள் பொதிந்த ஒரு குடித்தனமாகவே நகுலனின் எழுத்துக்களுடன் இருபதாண்டுகளைக் கடந்த இந்த உறவைப் பார்க்கிறேன். 1997- ம் ஆண்டுவாக்கில் சுந்தர ராமசாமி அப்போது பாம்பன்விளையில் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு , பெ. அய்யனாருடன் வலியத் தொற்றிக் கொண்டு நானும் தளவாய் சுந்தரமும் சண்முக சுந்தரமும் திருவனந்தபுரத்தில் உள்ள நகுலன் வீட்டுக்குச் சென்றதிலிருந்து அந்த உறவு தொடங்கியது. அவரைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியது 2004- க்குப் பிறகு. கிட்டத்தட்ட சிறியதாகவும் பெரியதாகவும் நகுலன் தொடர்பிலான எனது கட்டுரைகள் , குறிப்புகளை 17 ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறேன். நகுலன் எழுத்துகள் குறித்த எனது டைரி இது. நகுலனை நான் தொடர்ந்து வரைந்துவைத்துக் கொண்ட சித்திரங்களின் கையேடு என்றும் சொல்லலாம். ஷ்ரோடிங்கரின் பூனை உள்ளடக்கத்தையே ஒரு பேச்சில் அளித்து எழு...