Skip to main content

நகுலனின் நூற்றாண்டில் எனது இன்னொரு புத்தகம் - நினைவின் குற்றவாளி


ஒரு எழுத்தாளனின் ஆக்கங்களாக, அவனது தொனியில் ஈடுபட்டு பிரதிபலித்து திரும்பத் திரும்ப மனத்தில் புறத்தில் புத்தகங்களில் போய் சரிபார்த்துக் கொண்டு ஆளுமையில் அவரைப் புதுக்கிக் கொண்டு நான் அதிக காலம் செலவழித்திருப்பது நகுலனுடன். பொருள் பொதிந்த ஒரு குடித்தனமாகவே நகுலனின் எழுத்துக்களுடன் இருபதாண்டுகளைக் கடந்த இந்த உறவைப் பார்க்கிறேன்.

1997-ம் ஆண்டுவாக்கில் சுந்தர ராமசாமி அப்போது பாம்பன்விளையில் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பெ. அய்யனாருடன் வலியத் தொற்றிக் கொண்டு நானும் தளவாய் சுந்தரமும் சண்முக சுந்தரமும் திருவனந்தபுரத்தில் உள்ள நகுலன் வீட்டுக்குச் சென்றதிலிருந்து அந்த உறவு தொடங்கியது. அவரைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியது 2004-க்குப் பிறகு. கிட்டத்தட்ட சிறியதாகவும் பெரியதாகவும் நகுலன் தொடர்பிலான எனது கட்டுரைகள், குறிப்புகளை 17 ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறேன்.

நகுலன் எழுத்துகள் குறித்த எனது டைரி இது. நகுலனை நான் தொடர்ந்து வரைந்துவைத்துக் கொண்ட சித்திரங்களின் கையேடு என்றும் சொல்லலாம். ஷ்ரோடிங்கரின் பூனை உள்ளடக்கத்தையே ஒரு பேச்சில் அளித்து எழுதவும் சொன்னவர் கவிஞர் தேவதச்சன். ‘இல்லாமல் இருப்பதன் இனிமை’ கட்டுரை தொடர்பில் பேசி பில் பிரைசனின் உதாரணத்தை அளித்தவர் கவிஞர் ஆசை. இது புத்தகமாக வெளிவருவதற்கான நம்பிக்கையையும் ஆலோசனையையும் தந்தவர் கவிஞர் வே நி சூர்யா. கூறியது கூறலைத் தவிர்த்து எடிட்டிங்கிலும் உதவினார். கைப்பிரதியைப் படித்துத் தங்களது பிரதிபலிப்புகளைச் சொன்னவர்கள் இன்பா, சரோஜா, சுஜா.

இசைசார்ந்த கூடுதல் கவனத்தையும், அது அகத்தில் ஏற்படுத்தும் லயம், குணம் பற்றிய போதத்தையும் எனக்கு, பழகிய குறுகிய காலத்தில் உருவாக்கியவர் மிஷ்கின். ஏ. எம். ராஜா, கே. வி. மகாதேவன் முதல் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், சோபின், ஆர்வோ பாட், என்னியோமோரிகான் வரை அவரது நூலக அறையில் தான் மேலும் கூர்மையானார்கள். மது மூலம் தற்காலிக மரணங்களை அனுபவிக்கும் சௌகரியம் எனக்கு ஒருகட்டத்தில் சாத்தியமில்லாமல் போன உடல்- மன நிலையில், இசையே வசதிப்படும் போதையாக மாறியுள்ளது. நிகழ்ச்சிகளை, அனுபவங்களை, நபர்களை, அழகை, கோரத்தை, இன்ப - துன்பங்களை, அன்பை, அன்பற்றதை, ஒட்டுமொத்தமாக உணரும் அனாதைத்தனத்தை, மிக அண்மையிலும், அதேவேளையில் தூரத்திலும், பார்க்கும் தன்மை கொண்டது இசை. இதை, எனக்கு உணர்த்தியவர் மிஷ்கின். இந்த நூலை வெளியிடும்போது கோணங்கியை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். அவர்தான் எமது தலைமுறைக்கு நகுலனை, கல்குதிரை சிறப்பிதழின் வழியாகப் புதுப்பித்துத் தந்தவர். 

சாம்ராஜ் வழியாக அறிமுகமாகி, எனது வேளச்சேரி இருப்பின் ஒரு பகுதியாக உள்ள விஜயராகவனுக்கு இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். இந்தப் புத்தகத்தை வெளியிடும் வேரல் புக்ஸின் அம்பிகாவுக்கும் லார்க் பாஸ்கரனுக்கு எனது நன்றி.

நகுலனின் ஆளுமை, பேச்சு, சிரிப்பு, அசைவுகள் ஆகியவை எப்படி இருக்கும் என்பதை ஆவணப்படுத்திய நண்பர்  தி. பாண்டியராஜனின் ஆவணப்படமான ‘நினைவுப்பாதையில் மஞ்சள் பூனை’ படைப்பும் நகுலனின் நூற்றாண்டு வேளையில், வெகுகால முயற்சிக்குப் பிறகு வந்துள்ள நிலையில், அதிலிருந்து கத்தரிக்கப்பட்ட அருமையான நகுலனின் புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தின் அட்டையை அலங்கரிப்பது ஒரு நிறைவைத் தருகிறது.

நகுலன் நூற்றாண்டையொட்டி  ‘அருவம் உருவம்’ தொகுப்பு நூலைத் தொடர்ந்து அவருக்கு எனது இரண்டாவது படையல் இது.  

Comments

சுப்ரமணி, சிவகாசி said…
மகிழ்ச்சி மற்றும் அன்பு ஷங்கர்