விக்ரமாதித்யனின் நவபாஷாணத்தை வாசிக்க : https://akazhonline.com/?p=4303
கவிஞர் விக்ரமாதித்யனின் நவபாஷாணம் நீள்கவிதை, தமிழின் சிறந்த நவீன காவியங்களில் ஒன்று. விக்ரமாதித்யனின் நவபாஷாணம் குறித்த எனது கட்டுரைக்காக அதன் பின்னணி பற்றி அவரிடம் நேர்காணல் செய்தேன். அது இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
நவபாஷாணம் தொடர்பிலான எனது கட்டுரையை வாசிக்க : https://www.shankarwritings.com/2023/03/blog-post.html
உங்களது
நவபாஷாணம் எழுதியதற்கான தூண்டுதலைச் சொல்லுங்கள்?
முதல்
நான்கு கவிதைத் தொகுதிகள் வாயிலாக ஒரு சரளத்தையும் அதேவேளையில் ஒரு பழக்ககதியையும்
உணர்ந்த நேரத்தில் நகுலனும் மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமாரும் என்னை நெடுங்கவிதை ஒன்றை
முயற்சி செய்துபாருங்கள் என்று 1987-88 ஆண்டுப்பகுதியில் ஊக்கம் கொடுத்தனர். எதையும்
தானாக முயற்சி எடுத்துச் செய்ய விரும்பாத நான் அதெல்லாம் எனக்குச் சரிப்படாது என்று
தயங்கிக்கொண்டேதான் இருந்தேன்.
1989-ம்
ஆண்டு குற்றாலம் கவிதைப் பட்டறைக்குப் பிறகு எழுத்தாளர் கோணங்கியுடன் தேவிப்பட்டிணம்,
ராமநாதபுரத்தில் உள்ள திருஉத்திரகோசமங்கை ஆகிய தலங்களைப் போய்ப் பார்த்தோம். திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பத்தில் ‘உடையவ னே மன்னும்
உத்தரகோசமங்கைக்கரசே’ என்று மாணிக்கவாசகரால் பெருமைப்படுத்தப்பட்ட தலம் அது. தேவிப்பட்டிணத்தில்
கடல் உள்வாங்கி கோயிலுக்குள் கணுக்கால் அளவு அலையாக அடித்துக்கொண்டிருக்கும் நவபாஷாணத்தில்
செய்யப்பட்ட நவக்கிரக சன்னிதியிலேயே அதற்கான தலைப்பை நான் பெற்றேன். குற்றாலநாதருக்கு ஓயாத மண்டையிடி
சுக்குவென்னீர் குடித்தால் சொஸ்தப்படுமா என்று தொடங்கி தொடர்ந்து மூன்றுமாதங்கள் வெவ்வேறு
சூழல்களில் வரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்பார்த்தேன். அந்தச் சமயத்தில் குடியும்
கூடுதலாக இருந்தது. உக்கிரத்துக்கும் உணர்வெழுச்சிக்கும் போதையும் உதவியது. 1990-ம்
ஆண்டு பங்குனி, வைகாசி, சித்திரை மாதங்களில் முடித்துவைத்து யாரிடமும் காண்பிப்பதற்கு
கூச்சப்பட்டு கைப்பிரதியாகச் சென்னைக்குக் கொண்டுவந்தேன். சென்னையில் அப்போது அப்பா,
அம்மாவுடன் ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்தபோது தற்செயலாக கோணங்கி என்னைத் தேடிவந்தார்.
குளிக்கப்போகும்போது இதைப் பாருங்களேன் என்று சொல்லிவிட்டுப் போனேன். அண்ணாச்சி இதை
கல்குதிரையில் வெளியிட்டுவிடலாம் என்று சொன்னார். அது சரியாக வருமா? அவருக்குப்
பிடித்திருக்கிறதா? என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். கல்குதிரை இதழில் வெளியிட்டார். அந்தப் பிரதியை இன்னமும்
பத்திரமாக வைத்திருக்கிறேன்.
நவபாஷாணத்தின்
உள்ளடக்கம் தொடர்பாக ஏதாவது முன்திட்டம் இருந்ததா?
ஒரு
திட்டமும் கிடையாது. நவபாஷாணம் படைப்புக்கு நகுலன், ஆர். சிவக்குமார், கோணங்கி மூவரும்
மட்டுமே பொறுப்பு. பெரிய பக்திமானாகத் தெரியவராத கோணங்கி என்னை ஏன் அந்த தலங்களுக்குக்
கூட்டிப்போனார்? பேராசிரியர் சிவகுமாரும் நகுலனும் என்னை ஏன் இதை எழுதச் சொன்னார்கள்?
எனக்குத் தெரியாது. மர்மமாகவே இருக்கட்டுமே. எல்லாம் தன்போக்கில் நடந்தது. வாழ்க்கையும்
படைப்பும் தன்போக்கில்தானே நடக்கிறது.
Comments