Skip to main content

அலறலில் சாவு …வாழ்க்கையில் குழந்தை



காஸா நிலத்திட்டில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களைக் கிட்டத்தட்ட நெருக்கி அழித்துவிடும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்புநாடுகளின் மூர்க்கம், அந்த அவலத்தின் மீதான உலக நாடுகளின் தாங்க முடியாத பாராமை இரண்டும் குற்றவுணர்வை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் சென்ற நூற்றாண்டில் யூதர்கள், பெரும் இன அழிப்புக்குள்ளான பின்னணியைப் பேசும் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் உள்ள சிக்கலான சமகால உறவைப் பேசும் மூனிக் திரைப்படத்தையும் மீண்டும் பார்த்தேன்.

நாஜி கட்சியின் உறுப்பினராகவும், போர் சார்ந்து உருவாகும் வர்த்தகத்தில் கொழிக்கும் வியாபாரியாக ஆஸ்கர் ஷின்ட்லர் நமக்கு அறிமுகமானாலும், ரத்தத்தின் நிறம் கொண்ட சிவப்பு மேலங்கியுடன் வதைமுகாம்களுக்குக் கொண்டுபோகப்படும் யூதர்களின் மத்தியில் அலையும் ஒரு குட்டிச்சிறுமியைப் பார்த்த பின்னரே, தன்னால் முடிந்தளவுக்கு யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம், ஒட்டுமொத்த மானுட குலத்தையும் காப்பாற்ற இயலக்கூடிய மகத்தான காரியத்துக்கு உந்துதலைப் பெறுகிறார்.

சென்ற நூற்றாண்டில் இத்தனை வாதைகளை அனுபவித்த யூத இனத்தினர்  சேர்ந்து உருவாக்கிய தேசமான இஸ்ரேலின் அரசு, பாலஸ்தீன மக்களின் மேல் கொடூரமான துயரங்களை பல தசாப்தங்களாக ஏன் ஏவிவிட வேண்டும் என்ற குழப்பமான கேள்விகள் எழுகின்றன. 

ஷின்ட்லர்ஸ் லிஸ்டைவிட மூனிக் திரைப்படம் இன்னும் சிக்கலானது. அனைத்து வன்முறைகளையும் தாண்டி, ஆஸ்கர் ஷிண்ட்லரை மகத்தான காரியத்தை ஆற்றும் நாயகன் ஆக்கிவிடுகிறார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். மூனிக்கிலோ இஸ்ரேல் உளவுப்படையைச் சேர்ந்தவர்கள், முழுக்க அரசின் சார்பு நிலையுள்ளவர்களாக பாலஸ்தீனப் போராளிகளைக் கொல்ல கிட்டத்தட்ட கூலிப்படையைப் போல அனுப்பும் படையை வழிநடத்தும் ஆவ்னர் காஃப்மேன் படிப்படியாக தன் காரியத்தின் தார்மிக பலத்தை இழந்து அவநம்பிக்கைக்கும் குழப்பத்துக்கும் கடைசியில் போகும் கதை இது. ஸ்பீல்பெர்க் தனது இளம்பருவ ஆசையான ஜேம்ஸ் பாண்ட் வரிசைத் திரைப்படமொன்றை இயக்கும் ஆசையையும் இதில் நிறைவேற்றியிருக்கிறார். பின்னர் ஜேம்ஸ் பாண்ட்டாக ஆன டேனியல் க்ரீக் இதில் துணைக்கதாபாத்திரமாக வருகிறார்.

ஒட்டுமொத்தமாக கருப்புவெள்ளையில் எடுக்கப்பட்ட ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படத்தில் சிவப்பு நிற மேலங்கியுடன் பயங்கரங்களுக்கும் கோரங்களுக்கும் நடுவே நாதியற்ற ரோஜாவாக அலையும் அந்தச் சிறுமியை யுத்தத்துக்கு எதிரான சமாதானத்தின் மாபெரும் குறியீடாக ஸ்பீல்பெர்க் படைத்திருக்கிறார். சினிமா என்ற வடிவம் உருவாக்கிய மாபெரும் காட்சிகளில் ஒன்று.

ஆஸ்விட்சுக்குள் மூட்டை முடிச்சுகள் போல நெருக்கி ரயில்பெட்டிகளில் கொண்டு போகப்படும் பெண்கள் குழந்தைகளுக்கு முதலில் முடிவெட்டப்படுகிறது. அதற்குப்பிறகு அவர்கள் உடைகள் பறிமுதல் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்படுகின்றனர்.

அடுத்ததாக கொத்துக் கொத்தாக அவர்கள் ஒரு மாபெரும் ஹாலுக்குள் செலுத்தப்பட்டு அடைக்கப்படுகின்றனர். மரணம் எங்கிருந்துவரும் என்று தெரியாமல் மேலே பார்த்து ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு நிற்கின்றனர். அப்போது மின்சாரத் துண்டிப்பு தற்செயலாக ஏற்படுகிறது. வெளிச்சம் போனவுடன் அங்கே சாவு சூழ்ந்ததுபோல எல்லாரும் கூடி அழுகின்றனர்.

வெளிச்சம் சில நொடிகளில் வருகிறது. மேலேயுள்ள ஷவர் குழாய்களிலிருந்து தண்ணீர் வந்து அவர்கள் தேகத்தின் மேல்படும்வரை அங்கே சாவு மட்டுமே சூழ்ந்திருப்பதைப் பார்க்கிறோம்.

புற்றுநோய் வார்டிலும், பிரசவத்தின் போது தாய்மார்கள் படும் வலியையும் பார்ப்பவர்களுக்கு கடவுள் இருப்பு சார்ந்த நம்பிக்கை கேள்விக்குள்ளாகிவிடும் என்று சொன்ன மூளை நரம்பியலாளர் விளையனூர் ராமச்சந்திரன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

 வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் நடுவில் ரோஜாநிற மேலங்கியுடன் குட்டிச்சிறுமி அலைந்துகொண்டிருக்கிறாள். அவளும் பின்னால் பனி அள்ளும் வண்டியில் கூளமாகப் போவதை ஆஸ்கர் ஷிண்ட்லர் பார்க்கிறான்.

ழாக் ப்ரெவரின் கவிதை ஒன்று சாவுக்கு அருகில் குழந்தையை வைத்து இப்படிப் பார்க்கிறது.


முதல் நாள்


அலமாரியில் வெண்ணிற விரிப்புகள்

கட்டிலில் சிவப்பு விரிப்புகள்

தன் தாயில் ஒரு குழந்தை

அதன் தாய் பிரசவ வலியில்

தந்தை 

வராந்தாவில்

வராந்தா

வீட்டில்

வீடு

நகரத்தில்

நகரம்

இரவில்

அலறலில் சாவு

வாழ்க்கையில்

குழந்தை. 

ஆதி நாளுக்கு முன்னர் இத்தனை விபரீதங்கள் இருந்திருக்குமா. அதற்குப் பிறகுதான் குழந்தை இங்கே ஜனிக்குமா? 


Comments