Skip to main content

காஃப்காவின் கலக மானுடப் பூச்சிகள்

 




கடந்து சென்றபடியிருக்கும் கம்பிகளுக்குப் பின்னே

எதிலுமே நிலைக்க முடியாதவாறு அவன் பார்வை களைத்திருக்கிறது.

ஆயிரம் கம்பிகள் இருப்பது போல அவனுக்கு தோன்றுகிறது

கம்பிகளுக்கு அப்பால் உலகமே இல்லாததுப் போலவும்

-ரில்கே (சிறுத்தை கவிதையிலிருந்து)

 

ஒரு சிறுகிராமத்துக்கு வரும் சர்க்கஸின் பின்னணியில் எடுக்கப்பட்ட அரவிந்தனின்தம்புதிரைப்படத்தை சமீபத்தில் பார்த்தபோது, சர்க்கஸின் அனைத்து அங்கங்களையும் இணைக்கும் ஒரே சரடு வன்முறைதான் என்று தோன்றியது. சர்க்கஸ் மேலாளர், சர்க்கஸ் கலைஞர்கள், சர்க்கஸ் பார்வையாளர்கள், சர்க்கஸின் அத்தியாவசிய அம்சங்களான விலங்குகள் என எல்லாவற்றையும் அதுவே இணைக்கிறது. சர்க்கஸை வாய்பிளந்து பார்க்கும் சிறுவர்கள், யுவதிகள், இளம் மனைவிகள், நடுத்தர வயது ஆண்கள், உயர் வர்க்கத்தினர் முதலிய அனைவரின் கண்களும் சர்க்கஸின் ஒரு பகுதியாகவே நிகழ்கின்றன. படத்தில் சர்க்கஸின் முக்கிய அங்கமான குரங்குக்கு ஒப்பனைக்காரர் சட்டை போட்டு, முகத்தில் பௌடர் அப்பி, கண்மை பூசுவார். சர்க்கஸின் வன்சங்கிலியில் ஒப்புக்கொடுத்ததைப் போல, முகத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு குரங்கு அவ்வளவு அர்ப்பணிப்புடன் ஒத்துழைக்கிறது.

 

சர்க்கஸ் தொடர்பாகவே பிரான்ஸ் காஃப்காவின் பட்டினிக்கலைஞன் (https://premil1.blogspot.com/2018/10/31-1961.htmlசிறுகதையை மீண்டும் தேடிப்போய் படித்தபோது, ஒடுக்குவது, ஒடுக்கப்படுவது இரண்டுக்கும் நடுவே தாம்பத்யம் போன்ற அர்ப்பணிப்புமிக்க பிணைப்பு இருப்பதைத்தான் காஃப்காவும் தனது உருவகக்கதைகளின் வழியாக வலுவாக உரைத்தபடி இருக்கிறார் என்று தோன்றியது.

பார்வையாளர்களின் முன்னிலையில் கூண்டில் அடைப்பட்டு பட்டினி கிடப்பதையே ஒரு கலையாக, காட்சியாக நிகழ்த்துபவனை பற்றியது காப்காவின் கதை. சர்க்கஸுக்கான மவுசு 21-ம் நூற்றாண்டில் குறைந்துவிட்டதைப் போலவே, பட்டினிக் கலைஞர்களுக்கான மவுசும் ஏற்கெனவே குறைந்துவிட்ட காலகட்டத்தில் தனது பட்டினிக் கலையை நிலைநிறுத்தப் போராடும் நாயகன் சென்ற நூற்றாண்டையும் அதன் லட்சியங்கள், துறப்புகள், தியாகங்கள் ஆகியவற்றையும் நினைவுபடுத்துகிறான்.


தனது காட்சிகளுக்கு மவுசு குறைந்த நிலையில் பொருட்காட்சியின் மூலையில் இரும்புக்கூண்டுக்குத் தள்ளப்பட்ட பட்டினிக் கலைஞனுக்கும் பார்வையாளர்களுக்கும் உள்ள உறவு வினோதமானது. உண்ணாவிரதத்தையே தனது கலைத்திறனாகக் கொண்டவனைப் பெரும்பாலான பார்வையாளர்கள் நம்புவதில்லை. இரவில் பட்டினிக் கலைஞன் ஏதாவது சாப்பிட்டு ஏமாற்றுகிறானா என்பதைக் கண்காணிக்க தீவட்டிக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனாலும் தனது கலையைக் கூர்மைப்படுத்தி பட்டினி கிடக்கும் நாட்களை அதிகப்படுத்துவதன் மூலம் தனது கலையை நிரூபிக்கவும் தயாராக இருக்கிறான் பட்டினிக் கலைஞன். ஒருவகையில் பட்டினி அத்தியாவசியமானதாகவும், உணவு ஆடம்பரமானதாகவும் மாறுகிறது. தியாகமும் துறவும், ஆடம்பரங்களாகவும் நம்பத்தகாத பொருட்களாகவும் மாறிவிட்ட எதார்த்தத்தில் பட்டினிக் கலைஞனின் கூண்டு காலியாகிவிடுகிறது.

 


காஃப்கா பட்டினிக்கலைஞனை மகத்துவப்படுத்தவில்லை; அவனை இழிநகை செய்கிறார் என்றே நான் உணர்கிறேன். காஃப்காவின் பட்டினிக் கலைஞன் காந்தியையும், உண்ணாவிரதம் இருந்து மறைந்துபோன திலீபனையும் ஏனோ ஞாபகப்படுத்துகிறான். பார்வையாளர்களுக்கும் காட்சி நிர்வாகிகளுக்கும் பட்டினிக் கலைஞன் ஏற்படுத்திய தார்மீக இக்கட்டினையே காந்தியும் தன்னை சுற்றியிருந்தவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்துத்வ சக்திகளுக்கு மட்டுமின்றி நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமென்றிருந்த நேரு போன்றவர்களுக்கும் காந்தியின் துறவு இருப்பு உறுத்தலாகவே இருந்ததை சமூக உளவியலாளர் ஆஷிஸ் நந்தி குறிப்பிடுவதை இங்கே பரிசீலிக்க வேண்டும். மகத்துவமான உயிர் இருப்பாக இருந்தாலும் அந்தக்கூண்டு ஒரு காலத் திருப்பத்தில் காலியாக வேண்டும். ஒரு புதிய விலங்கு அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.


 பட்டினிக் கலைஞனைப் புனிதப்படுத்தவோ, அனுதாபத்துக்குரியவனாக ஆக்குவதோ காஃப்காவின் நோக்கம் அல்ல. விசாரணை நாவலின் நாயகன்யோசப் தொடங்கி பட்டினிக் கலைஞன் வரை தன் கதாபாத்திரங்கள் மேல் காஃப்காவும் பெரிதாக இரக்கம் இல்லை. உருமாற்றத்தில் பூச்சியாகி வீட்டின் அறைக்குள் சிக்கிக்கொண்ட கிரிகர் சாம்சாவின் நிலை அபூர்வமாக அனுதாபத்துக்குரியது. அவன் ஒரு துயர நாயகன். விற்பனைப் பிரதிநிதியாக தினசரி வேலைக்குப் போவதைத் தவிர வேறெந்தக் குற்றத்தையும் செய்யாதவன். தந்தையால் புறக்கணிக்கப்பட்டு தங்கை மற்றும் அம்மாவின் கழிவிரக்கத்துக்கு ஆளாகுபவன். ஆனால் பிறர் அப்படியல்ல.

பிடிவாதமாய் உணவே உட்கொள்ளாமல் கூண்டுக்குள் உடல் மெலிந்து சிறுத்துக்கொண்டே வரும் பட்டினிக் கலைஞன் நம்மை அசௌகரியப்படுத்துகிறான். அவனது இருப்பு, உறுத்துவதாக மாறிவிடுவதால் பார்வையாளர்கள் இல்லாமல் போய் மூலைக்குத் தள்ளப்படுகிறான். காஃப்காவிடம் மகிழ்ச்சியும் தண்டனையும் கலையும் ஒன்றாக மாறுகின்றன. விசாரணை நாவலில் ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றத்துக்கு செல்லும்போது தன்னை தொந்தரவுபடுத்தும் குழந்தைகளைச் சமாளிக்க அடுத்த வாரம் மிட்டாய்கள் கொண்டுவர வேண்டுமென்றுயோசப் முடிவெடுக்கிறான். அல்லது நல்ல பிரம்பை எடுத்துவர வேண்டுமென்கிறான். மகிழ்ச்சிப்படுத்துவதற்கும் தண்டனை கொடுப்பதற்கும் காஃப்காவிடம் எங்கோ எல்லைக்கோடு மயங்கிவிடுகிறது.

காஃப்கா தன் கதைகளில் வாசகனின் காட்சிக்கோணத்தை அவர் நினைக்கும் இடங்களிலெல்லாம் மாற்றுகிறார். அவருடைய உற்றுப்பார்க்கும் கண்களை வாசகனிடமும் கோருகிறார். காஃப்காவின்கிராமத்து மருத்துவர்கதையில் மருத்துவரைச் சுமந்து வந்த வண்டிக்குதிரை சில சமயம் ஜன்னல் பக்கமிருந்து கனைக்கிறது. சில நேரம் அறைக்கு மேலே மூச்சுவிடுகிறது. நினைத்தவுடன் வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்து வண்டியை இழுத்துவந்துவிடுகிறது. விசாரணையிலும்யோசப் தனது தரப்பை வாதிடுவதற்காக வழக்கறிஞரைத் தேடிச் செல்லும்போதும் இதே நெருக்கத்தில்தான் வழக்கறிஞரின் வீட்டில் கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. மெழுகுவர்த்தி ஒளியின் நெருக்கத்தில்தான் அவர்கள் தெரியத்தொடங்குகின்றனர். எல்லா கதாபாத்திரங்களும் சுற்றிச் சத்தமின்றி ஒளிந்திருக்கின்றன. காஃப்கா ஒளியேற்றும்போது அவை தோற்றம் தரும்.

 சித்திரவதை நெருக்கத்தில் காஃப்கா நிகழ்ச்சிகளையும் கதாபாத்திரங்களையும் சரசத்தின் பாவனையில் வைத்திருக்கிறார். பார்வையாளருக்கும் காட்சிப்பொருளாக இருப்பவனுக்கும் பிணைப்பு குறையும்போது வன்முறையும் குறைந்துவிடுகிறதுகதையின் முடிவில் கூண்டு ஒருநாள் காலியாகிவிடுகிறது. அந்தக் கூண்டை நமது நூற்றாண்டை ஞாபகப்படுத்தும் இளம் சிறுத்தை இடம்பெயர்க்கிறது. சுதந்திரமும் வேட்கையும் மட்டுமேயான தாடைகளைக் கொண்டிருக்கும் சிறுத்தை அது.

கதையில் கடைசியில் வந்து சேரும் சிறுத்தை பட்டினி கலைஞனிலிருந்து வேறுபட்டது. இன்மையைக் காட்சியாக்கிய அந்தக் கூண்டில் அந்த இளம் சிறுத்தை அபரிமிதத்தில் உறுமிக்கொண்டிருக்கிறது. பட்டினிக் கலைஞனின் தியாகத்தால் சோர்வு அப்பியிருந்த அந்தக் கூண்டிலுள்ள சிறுத்தைக்கு பசிக்கும்போதெல்லாம் இறைச்சி வருகிறது. அதன் சுதந்திரம் அதன் தாடைகளுக்குள் தான் எங்கோ இருப்பதாக காஃப்கா கூறுகிறார். இப்போது கொடூரம் கூண்டுக்கு உள்ளும் புறமும் இடம்மாறுகிறது. பார்வையாளர்கள் அச்சத்தோடுதான் காண்கிறார்கள்.

ரில்கே தன் சிறுத்தையை மேலும் பாடுகிறான்,

 

இடுங்கிய வளையங்களில் அவன்

மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறான்

அவனுடைய ஆற்றல் வாய்ந்த அடியெடுப்புகளின் மெல்லசைவு

ஒரு மகத்தான உயிர் விருப்பம்

முடங்கிப்போன

ஒரு மையத்தைச் சுற்றி ஆடும் சடங்கு போலிருக்கிறது

- ரில்கே

காஃப்காவின்குள்ளநரிகளும் அராபியர்களும்உருவகக் கதையையும் இதே வரிசையில் வைத்து உரையாடலாம். “நாங்கள் பரிதாபத்துக்குரிய விலங்குகள், எங்களிடமிருப்பதெல்லாம் தாடைகள் மட்டுமே. நல்லதோ கெட்டதோ எதைச் செய்ய நினைத்தாலும் ஒரு ஜோடி தாடைகளைத் தவிர வேறொன்றும் எங்களிடம் இல்லைஎன்று அந்த குள்ளநரிகள் உரைக்கின்றன. தற்போது உலகமே மௌனித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அவலமான இஸ்ரேல்ஹமாஸ் யுத்தத்தின் பின்னணியில் இந்தக் கதை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

கதையில், அரேபியர்களிடம் அச்சத்துடனும் அடிமைத்தனத்துடனும் அதேவேளையில் மகத்தான வெறுப்புடனும் இருக்கும் குள்ளநரிகள் தலைமுறை தலைமுறையாக ஒரு ஐரோப்பிய மீட்பனின் வருகைக்காக காத்திருக்கின்றன. அந்த குள்ளநரிகளின் பிரதிநிதி, பாலைவனத்தில் அரேபியர்களின் கூடாரம் அருகே உறங்கும் ஐரோப்பியனைப் பார்த்துப் பிரலாபிக்கும் கதைதான்குள்ளநரிகளும் அராபியர்களும்.

யூதர்களுக்கு அராபியர்கள் மீது இருக்கும் பழைய வன்மங்களை, வெறுப்புகளை அந்தக் குள்ளநரிகள் ஐரோப்பியனிடம் பகிர்கின்றன. அரேபியர்கள் சுத்தம் இல்லாதவர்கள். ஆடுகளைக் கழுத்தை அறுத்துக் கொல்பவர்கள் என்று சொல்லி, “தூய்மைதான் தூய்மைதான் தூய்மையைத் தவிர வேறெதுவும் தேவையில்லைஎன்று அந்தக் குள்ளநரிகள் கதறும்போது, சுத்தம், அசுத்தம் ஆகியவற்றின் மேல் கட்டப்பட்ட இந்திய சாதியடுக்கின் எதார்த்தமும் நமக்குக் காட்சியாகிறது. அராபியர்களின் கழுத்துகளை அறுக்க ஒரு துருப்பிடித்த தையல் கத்திரியையும் அந்தக் குள்ளநரிகள் ஐரோப்பியனுக்குப் பரிசாகக் கொடுக்கின்றன. அருகிலிருந்த கூடாரத்திலிருந்து அராபியர் ஒருவர் வந்து தனது சவுக்கைச் சொடுக்கியதும் அத்தனை குள்ளநரிகளும் ஒதுங்கி பலவீனமான குவியலைப் போல வேலியமைத்து நிற்கின்றன

அந்த அராபியர் பேசத் தொடங்குகிறார்.

அராபியர்கள் இருக்கும்வரை கழுத்தை அறுக்கும் இந்தக் கத்திரி பாலைவனம் முழுக்க அலைந்துகொண்டே இருக்கும். காலத்தின் முடிவு வரை. எந்த ஐரோப்பியன் வந்தாலும் அந்தக் கத்திரி ஒரு மகத்தான காரியத்துக்காக அவனுக்கு வழங்கப்படும். இந்தக் குள்ளநரிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஐரோப்பியரும் அந்த திருப்பணியைச் செய்வதற்காவே விதிக்கப்பட்டவர். இந்த விலங்குகளுக்கு இது ஒரு வேடிக்கையான நம்பிக்கை. இவர்கள் முட்டாள்கள். முழு முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் அவற்றை நேசிக்கிறோம். அவை எங்களது விசுவாச நாய்கள்.” என்கிறார்.

பாலைவனத்தில் காலத்தின் முடிவு வரையிலும் அராபியர்கள் இருக்கும் வரையிலும் அந்த துருப்பிடித்த கத்திரி அலையும்என்று இந்தக் கதையில் வரும் வாக்கியம் இந்த நாட்களில் தரிசனம் போலத் தொனிக்கிறது. வரலாற்றின் பெயராலும், புராணிகங்களின் பெயராலும் அந்த துருப்பிடித்த கத்தி, ஒரு இனத்தையே இந்தியாவில் மதவாத அரசியலின் பெயரால் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இறந்த ஒட்டகம் ஒன்றை வெறுப்பின் வடிவமான அந்தக் குள்ளநரிகளுக்கு அராபியர் உணவாக இடும்போது, ஒட்டுமொத்தக் கோபத்தையும் மறந்து ஒட்டகத்தின் இறைச்சியை ஒருகை பார்க்க குள்ளநரிகள் கூடுகின்றன.

இங்கேயும் சவுக்கை சொடுக்குபவனும் ஒடுங்கும் உயிர்களும் ஒரு தாம்பத்யப் பிணைப்பில் இருக்கின்றன. ஒட்டி உண்பவர் யார் என்றும் ஆதாரமாக இருப்பவர் யார் என்றும் மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு சார்பு நிலையில் ஒடுக்குவதும் ஒடுங்குவதும் ரொங்கிவிடுகின்றன. ஆனால் ஒடுக்கப்படும் குள்ளநரிகளிடம் இருக்கும் புகார், ஒடுக்கும் நிலையில் உள்ள அராபியர்களிடம் இல்லை. சவுக்கு சொடுக்கும்போதெல்லாம்மயக்கமும் பிரக்ஞையற்ற நிலையும்தான் குள்ளநரிகளைச் செலுத்துகின்றன. அவை வெறுத்தாலும் அற்புதமான உயிர்கள்தான் இல்லையா என்கிறான் அராபியன்.

இதையொட்டி, நீட்சேயின் உருவகக் கதையொன்றை காஃப்காவின் விமர்சகரான வால்டர் ஹெர்பர்ட் சோகல் நினைவூட்டுகிறார். பருந்துகளால் வேட்டையாடப்படும் ஆட்டுக்குட்டிகள், பருந்துகள் மிகத் தீமையானவை எனும் புகாரோடு இருக்கின்றன. ஆனால் அவற்றை வேட்டையாடிச் சாப்பிடும் பருந்துகளோ ஆட்டுக்குட்டிகள் மிகவும் அருமையான உயிர்கள்; பஞ்சு போன்ற மாமிசத்தைக் கொண்டவை. நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்கவைக்கும் இனிய உயிர்கள் என்று சொல்கின்றன.

காஃப்காவின் இன்னொரு கதையில் பிணந்தின்னிக் கழுகு, ஒருவன் பாதத்தைக் கொத்திக் கொண்டே இருக்கிறது. ஷூ, சாக்ஸைத் தாண்டி, கால்சராயையும் தாண்டி பாதத்தையும் குதறத்தொடங்குகிறது. கொத்துபவன் செயலற்று இருக்கிறான். ஒரு கோமான் அவனைக் கடக்கும்போதுஏன் இந்த பிணந்தின்னிக் கழுகிடம் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறார்.தான் வேறு வழியின்றி மாட்டிக்கொண்டதாகவும், முதலில் பிணந்தின்னிக் கழுகின் கழுத்தைக்கூட நெரிக்க முயன்றதாகவும், ஆனால், இந்த உயிர்கள் மிகவும் வலிமையானவை என்று சொல்பவன், தனது காலை தியாகம் செய்வதற்குத் தயாராகிவிட்டதாகவும் கூறுகிறான்.

இந்தக் கதையில் கழுகால் தாக்கப்படுபவனுக்கு வலியின் வேதனையை விட அதைப்பற்றி முறையிடுவதில் ஈடுபாடு இருப்பதான உணர்வை ஏற்படுத்துகிறார், காஃப்கா. அந்தக் கதையின் இறுதியில் ரத்தத்தில் அமிழும்வரை அதுதான் அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது போல. இந்த உயிர்கள் வலிமையானவை என்று அவன் கோமானிடம் முறையிடும்போது நம்மையும் நமது வலி, வாதைகளையும் பிணைத்திருப்பது எது என்று கேள்வி வருகிறது. நீட்சே பருந்துகளால் வேட்டையாடப்படும் ஆட்டுக்குட்டிகளை முன்வைத்து, நாம் புகார் சொல்வதில் விருப்பத்துடன் இருப்பதாக கூறுகிறார். அதை பூச்சிகளின் நிலை என்கிறார். இறந்துபோவது போல நடித்து சிறிதுநேரம் கழித்து பறந்துபோக முயலும் பூச்சிகள் போன்றதே நமது நிலை என மேலும் நீட்டிக்கிறார். இங்கே கலக மானிடப் பூச்சிகள் என்ற பாரதியின் விவரிப்பு அறைகிறது.

இப்படி சித்திரவதைக்கு உன்னை உட்படுத்துவதில் உனக்கு வேடிக்கை இருக்கிறதா என்று அந்த கோமான் கேட்கும் கேள்வியில் நீட்சேவையே காண முடிகிறது. ஒரு தோட்டாவில் இந்த கழுகை முடித்துவிடலாம் என்கிறார் அக்கோமான். அவனும் அப்படியா என்று துப்பாக்கியைக் கொண்டுவருவதாகச் சொன்ன கோமானுக்காக காத்திருக்கிறான். குள்ளநரிகளும் ஒரு மீட்பருக்காக காத்திருக்கின்றன; யுத்தத்தின் தவிப்பு பாலைவனத்தில் அலைந்துகொண்டே இருக்கிறது. சிறுத்தைக்கும் அவ்வப்போது எதுவோ ஞாபகம் வருகிறது என்கிறார் ரில்கே.

சில நேரங்களில் அவன் விழிப்பாவைகளின் திரை

மெல்ல உயர்கிறது. ஓரு காட்சி உள்நுழைகிறது.

அவனுடைய இறுகிய அசைவொடுங்கிய தசைநார்களின் ஊடே

இதயத்துள் செல்கிறது.பிறகு தொலைந்துவிடுகிறது

காஃப்கா மிகத் தீவிரமான முகத்துடன் இன்றும் உண்மையை பேசுவதால் நமக்குச் சிரிப்பாக வருகிறது.அவர் சில காலங்களில் நகைச்சுவை எழுத்தாளராக ஆகவும் வாய்ப்பு உள்ளது.

(கிராமத்து மருத்துவர் கதையை சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார். குள்ளநரிகளும் அராபியர்களும் கதையை எஸ். வி. ராஜதுரை . கீதா மொழிபெயர்த்திருக்கிறார்கள். பட்டினிக் கலைஞன் கதையை சி. சு. செல்லப்பா மொழிபெயர்த்திருக்கிறார். பிணந்தின்னி கழுகு கதையை சா. தேவதாஸ் மொழிபெயர்த்திருக்கிறார்.)

(நன்றி : அகழ் இணைய இதழ்)

Comments