சஜ்தாவில் குழந்தை - மதார்
தொழத் தெரியாத குழந்தை
தொழுகையாளிகளின்
வரிசையில்
நிற்கிறது
தக்பீர் கட்டுகிறது
சூரா ஓதுகிறது
கேட்பதைச் சொல்லி
செய்வதைப் பார்த்து
தொழுகை முடிந்து
உருகி அழும்
ஈமான் தாரியின் கண்ணீரை
அதற்கு நடிக்கத்
தெரியவில்லை.
-
அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில் (https://akazhonline.com/?p=8605) ‘சஜ்தாவில் குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது.
மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி பரவலாக கவனிக்கப் பெற்றது.
மதாரிடம் நான் சொன்ன அம்சங்களிலே சிறிய புதுமைகளையும் சிறிய சாதனைகளையும் படைத்துவிட்டு, தேங்கி நின்ற கவிஞர் முகுந்த் நாகராஜன் என்று, இதற்கு முன்பு சொல்ல முடியும். ஜான்சன் பேபி சோப், ஹக்கீஸ், ஃபேரக்ஸ், செரிலாக், க்ரேயான் பென்சில் டப்பாக்கள் போன்ற குழந்தைகள் உபயோகப் பொருட்களின் விளம்பரப் படங்கள், முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இடம்பெயர்த்துவிட்டன.
‘வெயில் பறந்தது’ தொகுதிக்குப் பிறகு மதார் அடைந்திருக்கும்
திருப்பம், வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் கவிதை ‘சஜ்தாவில் குழந்தை’, மதாரின் எளிமையிலிருந்து கிளைத்து உலகின் கனத்தை வரித்துள்ளது.
தொழத் தெரியாத குழந்தை, தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது
என்ற முதல் வரியிலேயே மௌனம் இறங்கிவிடுகிறது.
யுத்தம் தெரியாத குழந்தை, யுத்ததாரிகள் மோதும் களத்தில்
நிற்கிறது என்று இதை வெளியிலிருந்து பிரதிபலிக்கலாம்.
உலகம் வந்து சேர்ந்திருக்கும் உச்சபட்ச அறிவு, பகை மூர்க்கம்,
பிளவுவாதம், வெறுப்பின் யுத்த களத்தில் பரிதாபமாக இன்று நிற்பவர்கள் குழந்தைகள் தான்.
இந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தைதான் மதாரின் ‘சஜ்தாவில் குழந்தை’ கவிதையில் தொழுகையில் பங்கேற்கிறது.
இந்த உலகம் செய்யவேண்டியதையெல்லாம் செய்யத் தேவையில்லாத
குழந்தைகள், அதைத் திரும்பச் செய்வது போல பள்ளிவாசலில் எல்லாவற்றையும் செய்கிறது மதாரின்
குழந்தை.
தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் அழுகையை
மட்டும் அந்தக் குழந்தைக்கு நடிக்கத் தெரியவில்லை.
அழுகையை நடிக்கத் தெரியாத குழந்தையின் அந்த இயல்பு எனக்கு
இப்போது இன்று இக்காலகட்டத்தில் ஆறுதலாக இருக்கிறது.
ஏனெனில் எந்த நியாயமுமே இல்லாமல் குழந்தைகளை பெரியவர்கள்
உலகெங்கும் அழவைக்கும், அழித்தொழிக்கும் கையாலாகாத கொடுங்காலம் நம்முடையது.
மதாரின் கவிதையில் உள்ள குழந்தை, அழுகையைப் பாவனையாகக்கூடப்
பழக வேண்டாம் என்பதுதான் எனது இப்போதைய ஒரே பிரார்த்தனை.
மதாரின் புதிய கவிதை நூலான ‘மாயப்பாறை’ வரும் 18ஆம் தேதி வெளியீடு காணும் தருணத்தில் அவருக்கு என்னுடைய பிரியம் நிறைந்த வாழ்த்து.
Comments