Skip to main content

சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே – என் புத்தக அட்டையின் கதை


‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை, எனது தனித்தொகுதியான ‘ஞாபக சீதா’வில் இடம்பெற்றது. 

மிக குறுகிய காலமே என்னை ஆட்கொண்டு, அந்த நாட்களை பொன்னில் சுடரேற்றி, சீக்கிரமே பிரிந்து சென்ற ஒருத்திக்கு, பிரிந்ததின் நினைவுப் பரிசாக, அதற்கு முன்னர் சில ஆண்டுகள் நான் சேகரித்திருந்த பொருட்களை, ஒரு கண்ணாடிக் குடுவையில் இட்டு அளித்தேன்.

நான் சேகரித்த கடல் சிப்பிகள், துங்கபத்ராவிலிருந்து கொண்டுவந்த கூழாங்கற்கள், திருநெல்வேலி கோயில் வாசலில் வாங்கிய சோளிகள், குட்டி பொம்மைகள் என அந்தக் குடுவையில் போட்டு அவளது பிறந்த தினம் தொடங்கும் நள்ளிரவில் பரிசளித்தேன்.

இதை ஒரு கவிதையாக எழுதுங்கள் என்று எனக்கு அக்காலத்தில் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் யோசனை கூறினார்.

அதன் விளைவே 'சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே' கவிதை. அவள் என்னிடமிருந்து தொலைந்து போய் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தொகுதிக்கு ஒரு தலைப்பை வைப்பதற்கு ஆலோசித்தபோது, ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ தலைப்பு பொருத்தமாகப் பட்டது.

இந்த தலைப்புக்காக அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு யோசித்தபோது, அவள் என்னை விட்டு நீங்கியபிறகு நான் சேர்த்த பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி புகைப்படமாக எடுக்கலாம் என்று தோன்றியது தற்செயல்தான்.

அந்தமானுக்கு நண்பர் சுப்ரமணியனின் அழைப்பின் பேரில் சென்றபோது சேர்த்த பவளப்பாறைகள்,கிளிஞ்சல்கள், காலை நடையில் சேகரித்த கிரிக்கெட் பந்துகள், சிங்கப்பூர் நண்பர்களான இன்பாவும் சுஜாவும் அளித்த பொம்மைகள், கவிஞர் இசை எனக்கு நினைவுப் பரிசாகத் தந்த மான் சிலை, எனது மகள் வினு பவித்ரா பள்ளிப்படிப்பில் பயன்படுத்திய வஸ்துகள் எல்லாமும் எனது சேகரத்தில் இருந்தன.

என் அப்பா கடந்த மே மாதம் 26ஆம் தேதி இறந்தபின்னர், திருநெல்வேலி வீட்டை காலிசெய்தபோது அவரது அப்பாவும் எனது தாத்தாவுமான சங்கரன் பிள்ளை எனது 13 வயதில் பரிசாக அளித்த 2 கொலு பொம்மைகள், ஒரு அட்டைப்பெட்டியில் கிடைத்ததை ஒரு ஆசிர்வாதமாகவே கருதி சென்னைக்கு எடுத்து வந்தேன். சரஸ்வதி, பால பருவத்திலிருக்கும் கிருஷ்ணன் பொம்மை அவை.

என்னைப் பிரிந்து போனவள் எனக்கு ஸ்தூலமாக எந்தப் பொம்மையையும் பரிசாக அளிக்கவில்லை. அவள் அளித்த பரிசு இந்த அட்டைப்படத்தில் அடங்கும் அளவு சிறிய பொருளும் அல்ல.

எனக்கு இன்னும் பொம்மைகளோடு இடைவெளி இல்லை. இணக்கமும் குறையவில்லை. பந்துகளைப் பார்க்கும்போதெல்லாம் விளையாட்டை அவை தேக்கிவைத்து அழைப்பதாகவே நான் உணர்கிறேன்.

அதனால் எனது உள்ளடக்கத்தோடு சம்பந்தப்பட்ட இந்த வஸ்துகளைச் சேர்த்து வைத்து அட்டைப்படம் செய்யலாம் என்று எனது நண்பரும் ஓவிய, புகைப்படக் கலைஞருமான நோயல் கார்க்கியை அணுகினேன். அவர் எனது சேகரங்களை வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்தார்.

நான் அந்தப் புகைப்படத்தையும் எனது மகள் வினு பவித்ரா விளையாடிய ஒரு நாய் பொம்மை புகைப்படத்தையும் மாமல்லபுரத்தில் நான் எடுத்த ஒரு இறந்த குட்டி மீனின் புகைப்படத்தையும் வடிவமைப்பாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணனிடம் அனுப்பினேன். ஒரு புகைப்படத்தை அட்டைப்படமாக்குவது தனது பாணியல்ல என்று முதலில் கூறினார்.


சந்தோஷ் நாராயணனிடம் இதையெல்லாம் பாருங்கள். உங்களுக்கு மனம் ஒப்பவில்லையெனில் நீங்கள் தனியாக ஒரு அட்டை செய்யுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் எனது பொம்மைகளை வைத்தே அவர் அபூர்வமான ஒரு அட்டைப்படத்தை உருவாக்கிவிட்டார். சந்தோஷ்க்கு எனது நன்றி.


96 கவிதைகள் அடங்கிய எனது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.

எல்லாருக்கும் சலாம்…எல்லாவற்றுக்கும் சலாம்...

இந்த 96 கவிதைகள் குறித்து…

எனது முதல் நல்ல கவிதையான ‘சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் நாங்கள்’ கவிதையை எழுதி 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. நவீன கவிதை என்ற வடிவத்தை அனிச்சையாக 19 வயதில் தேர்ந்து, இன்னும் அதன் வசீகரம், சுழிப்பு, உள்ளடக்க மாறுதல்கள், குண-மொழிப் பரிணாமத்தில் தீராமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கு வயது 50. இந்தப் பின்னணியில் எனக்கும், எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் தொடர்ந்து எனது கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்கும் வாசகருக்கும், அந்தத் தருணத்தைத் தேக்கிவைப்பதற்கான முயற்சியே, இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பு.

என்னை நானே ஊக்கப்படுத்தியபடி மேற்கொள்ளும் இந்த முயற்சியில் நண்பரும், கவிஞருமான வே.நி. சூர்யா இணைந்து இக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துத் தந்துள்ளார். ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ எனத் தலைப்பிட்டிருக்கிறேன். இந்தத் தலைப்பே என் கவிதைகளைப் பற்றிய, எனது உலகத்தைப் பற்றிய ஒரு பிரகடனம்தான். இந்தத் தொகுப்பிலுள்ள 96 கவிதைகளினூடாக, அவ்வப்போதைய என்னுடைய அல்லல்கள், அலைக்கழித்த கேள்விகள், தாக்கம் செலுத்திய இலக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள், மோஸ்தர்கள், அறைகள், வீடுகள், நிலக்காட்சிகள், அதன்மேல் படிந்திருந்த மூட்டங்கள் என அனைத்தையும் மறுபடி மறுபடி பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது. எவ்வளவு ஒளியை, எவ்வளவு இருட்டை இந்தக் கவிதைகள் கடந்திருக்கின்றன? பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

கவிஞன், எழுதுபவன் எனும் அடையாளங்களைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களையும் பொருளற்றவையாகவும் மதிப்பற்றவையாகவும் கொண்டதற்குக் கிடைத்த வெகுமதி என்றே எனது இந்த இருப்பைக் கருதுகிறேன். இது திட்டமிட்டது அன்று; என் சாமர்த்தியமும் அன்று. சில பொம்மைகள் உடைபட்டன. சில பொம்மைகள் மிஞ்சியிருக்கின்றன. போர்ஹெஸ் சொன்னதுபோல அதுவே ஆழ்ந்த வெகுமதியாக உள்ளது.

நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்ளத் தகுதியும் திறனும் அற்ற பையனாக, சுந்தர ராமசாமியின் வீட்டுக்குள், ஒரு அடைக்கல இல்லத்துக்குள் நுழைவதைப் போல நண்பன் தளவாய் சுந்தரத்துடன் நுழைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தர ராமசாமியின் மனைவி கமலா அம்மாவைப் போய்ப் பார்த்தபோது, அவர் நினைவுக்குள் அந்தப் பையனே அடையாளமாக இருப்பதாகச் சொன்னார்.

உடலையும் மனத்தையும் சுயத்தையும் அதிகம் அழித்துக்கொள்ளாமல் இந்த வயதுவரை நீடித்திருப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள், என் ஆளுமையை மேம்படுத்திச் செம்மைப்படுத்தியவர்கள், இந்தத் தந்தைமாரும் ஆசிரியர்களுமே. என்னைக் கீறி அகழ்ந்து குணமூட்டிச் செப்பனிட்டவர்கள் அவர்கள்தான்.

லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி. மோகன், விக்ரமாதித்யன், தேவதச்சன், ந. ஜயபாஸ்கரன், ஆனந்த் என மேலானதும் ஆத்மார்த்தமானதுமான உறவுகளை இங்கேதான் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறேன். 

கௌதம், பச்சோந்தி, வே.நி. சூர்யா என என் அன்றாடத்தின் பகுதியாகிப்போன இளம் தலைமுறை நண்பர்களின் இணக்கமும் அணுக்கமும் இந்த மொழியுடனான ஈடுபடுதல் தந்த பரிசுகளே. நேசம், காதல், மதிப்பு எனச் சிறந்தது எல்லாவற்றையும் எனக்கு மொழிதான் தந்துகொண்டிருக்கிறது.

‘தாவரங்களின் உரையாடல்’ சிறுகதை மூலமாக 1990-களின் பிற்பகுதியில் அறிமுகமாகி, எங்களது ஆரம்பகாலக் கவிதை, வாசக ஆளுமையில் தாக்கம் செலுத்தியவை எஸ். ராமகிருஷ்ணனுடனான உரையாடல்கள். எனது கவிதைகளைப் புத்தகமாக்க வேண்டுமென்று முதலில் தூண்டியவரும் அவர்தான். அவரது ‘அட்சரம்’ இதழில்தான் பத்துக்கும் மேல் கவிதைகளைச் சேர்த்து வெளியிட்டார். நேரடியான தொடர்பு, படிப்படியாக அருகிப்போன நிலையில், எனது கவிதைகளின் வளர்நிலைகளைப் பற்றி, அரிதாக அவருடன் உரையாடிய பொழுதுகள் என்னைச் சோர்விலிருந்து மீட்டிருக்கின்றன. எனது அண்மைய கவிதைத் தொகுப்புகளைச் சிரத்தையோடு வாசித்து, வாசகர்களுக்குக் கவனமும் படுத்தியவர் அவர். எனது குறுங்காவியமான ‘இகவடை பரவடை’ தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு அவரது அவதானங்களைப் பேசியது, என்னை ஒருகட்டத்தில் ஆழ்ந்த மூச்சுமுட்டலுக்குள் தள்ளியது. ‘இகவடை பரவடை’யை இழைஇழையாகப் பிரித்துப் பேசினார். என் தொடக்ககாலக் கவிதைகளில் தென்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், சிறுமிகள் அண்மையக் கவிதைகளில் தொலைந்துவிட்டார்கள் என்று எஸ். ராமகிருஷ்ணன் சொன்னார். ஆமாம், உண்மைதான். சோகமும் கசப்பும் மூடிவிட்ட அந்தக் கல்மிஷமில்லாத சிறுவனை நான் மீட்டெடுக்க வேண்டும். அதை ஞாபகப்படுத்திய எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

அனுபவத்தைச் சலித்துச் சலித்துப் பேசி அர்த்தத்தை விமர்சனத்தோடு நெருங்கும் கதைமொழியை அம்மா தனது அன்றாடத்திலே பராமரித்தவள். அவள்தான் எனது மொழிக்கு முந்தையவள். புத்தகங்களின் உலகத்துக்குள் எட்டு வயதிலேயே என்னைத் தள்ளிவிட்டவளும் அவளே. அவள் குறித்த எனது கவிதைகளில் சில இத்தொகுப்பிலும் உள்ளன. 

எவ்வளவோ முட்டாள்தனங்களோடு வஸ்துகளையும் உணர்வுகளையும் சேர்த்துக்கொண்டு நானும் என் கவிதைகளும் ஓடிவந்திருக்கிறோம். இந்தக் கணம்தான் இருப்பதிலேயே ஞானம் கொண்டதாகத் தோன்றுகிறது. இன்னும் புதுப்புது முட்டாள்தனங்களோடும் கவிதைகளோடும் நான் ஓட வேண்டும்; புதிய பாதைகளை, புதிய ஞானங்களைக் கண்டு கடக்க வேண்டும்.

தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படியெடுத்து மெய்ப்புப் பார்த்த நண்பர் வேதநாயக்குக்கு எனது நன்றி. ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ தொகுப்புக்குப் பின்னுரையாக கட்டுரை எழுதிய மதிப்புக்குரிய கவி ஸ்ரீநேசன் இத்தொகுப்பின் முகப்பிலும் இருக்கிறார். அவருக்கும் எனது நன்றி. சிரத்தையோடு ஒட்டுமொத்த நூலையும் படித்து எல்லாவற்றையும் சரிசெய்து கொடுத்த நண்பர் செல்லப்பாவுக்கு நன்றி. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியை வெளியிடும் எதிர் வெளியீடு நண்பர்களுக்கும் என்னைப் பதிப்பகத்தாரிடம் ஆற்றுப்படுத்திய த. ராஜனுக்கும் எனது நன்றி.

Comments

Anonymous said…
Sinnanjiru kilengalgal👌😅😂😇😀🦚✌😘
Anonymous said…
சிறப்பு