அவனுக்கும் அவளுக்கும் இரண்டிரண்டு முள்ளம்பன்றி முட்களை சமப்பரிசாய் கொடுத்தது காடு. வாழ்வு மரணம் அழகு கோரம் அன்பு வெறுப்பு இடையில் நிற்கும் வேலியில் தந்திரங்கள் எதையும் பயிலாத மூன்று நரிகள் அப்போதுதான் விடிந்து உடைந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கடந்துபோகின்றன. நடந்து கடப்பவர்களுக்குத் கொடும் வலியை தற்காலிகமாகக் கொடுக்கும் கட்டெறும்பின் தலையிலுள்ள நுண்கொடுக்கு மட்டும் எப்போதும் எரிநிலையில். (நன்றி - அகழ் இணைய இதழ்)
பாம்பின் உடல் மனிதத் தலை கொண்ட ராகு தசை நடப்பதால் நிலைகொள்ளாத இன்பவாதைகளின் மேடையாக உன் கபாலம் திகழும் என்றான் ஜோதிடன். மணி, மனத்தில் தொடங்கி மனத்தில் வரைந்து முடிக்கும் வாழ்வுதான் உனக்கு என்று சொன்னவள் அம்மா. (நன்றி: அகழ் இணைய இதழ்)