சாகித்ய அகாடமி விருதுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில், சென்ற வாரம் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான நிகழ்வாகும். தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் 24 மொழிகளிலும் சாகித்ய அகாடமிக்கான விருதுக்குரியவர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டு, செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 18 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என சுயேச்சையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளிலும் தலையீடு செய்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அடக்கிவருகிறது. சாகித்ய அகாடமி என்ற சுதந்திரமான கலாசார அமைப்பின்மீதும் ஒன்றிய பா.ஜ.க அரசு தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடு இது.
லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி மற்றும் தேசிய நாடகப் பள்ளி தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வாயிலாக, சாகித்ய அகாடமி விருது கொடுக்கும் நடைமுறைகளில் மாற்றம் கொணடுவர வேண்டிய நடைமுறைக்காக சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றிய கலாசார அமைச்சகத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நினைவூட்டி இந்த சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கலாசார அமைச்சகத்துடன் ஆலோசனைகளில் ஈடுபடாமல் சாகித்ய அகாடமி இனி எந்த வேலையிலும் இறங்கக்கூடாது என்பதே உத்தரவு.
சாகித்ய அகாடமி விருது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது, சாகித்ய அகாடமி அமைப்புக்கும் இந்த ஆண்டு விருதைத் தேர்ந்தெடுத்த குழுவினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக ஆகியுள்ளது.
ஒன்றிய கலாசாரத் துறை அமைச்சகம் சாகித்ய அகாடமி விருது வழங்கும் நடைமுறையில் ஏதாவது மாற்றத்தைச் செய்ய எண்ணினால் இதை பல மாதங்களுக்கு முன்னரே செய்திருக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படும் நாளன்று ஒன்றிய அரசின் இந்த அவசர அவசரமான அறிவிப்பு மிகவும் மோசமான நடைமுறையாகவும் கலைஞர்களின் மீதான மத்திய அரசின் மரியாதையற்ற போக்கையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
சாகித்ய அகாடமி விருது வழங்கும் நடைமுறை சார்ந்து தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்துவருகின்றன. ஆனால் அவை எல்லாம் படைப்புகள், படைப்பாளிகளின் தரம் சார்ந்த சர்ச்சையும் குழுக்களின் ஆதிக்கம் சார்ந்த நடைமுறைகள் பற்றிய சர்ச்சைகள்தான். சாகித்ய அகாடமி என்ற சுதந்திரமான அமைப்பு ஒன்றிய அரசாலோ, வேறுவிதமான எதேச்சதிகாரப் போக்காலோ பாதிக்கப்பட்டதாக முன்னுதாரணம் இல்லை. சில மாதங்களுக்கு முன்னால் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர்களே விண்ணப்பிக்க வேண்டுமென்ற புதிய விதிமுறை வெளிவந்தபோதே ஒன்றிய அரசின் தலையீடுகள் தொடங்கிவிட்டன. பிராந்திய மொழி எழுத்தாளர்களுக்கு குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி முக்கியமான அங்கீகாரமாக இருந்துவரும் நிலையில் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
நவீன இந்தியாவின் சிற்பிகளான மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பெயர்கள், அவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள், விழுமியங்கள் மீது 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக அரசு தாக்குதல் தொடுத்துவருவதின் அடுத்த நீட்சியே சாகித்ய அகாடமி விருதுகளின் நிறுத்திவைப்பும். விருதுக்கு எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஓவியர்களை இனி யார் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? கலையுடனோ எழுத்துடனோ தொடர்பில்லாத அதிகாரிகளின் முடிவுக்கு இந்த விருதுகள் செல்வதற்கான பாதையா இது என்ற அச்சமும் எழுகிறது.
தமிழில் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருதை வழங்கிய நடுவர் குழுவினர் மூவரும் ஒன்றிய அரசின் முடிவுக்கு தாங்களே முன்வந்து கண்டனத்தைத் தெரிவித்தல் வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் உட்பட பெயரும் உள்ளடக்கமும் மாற்றப்பட்ட நிலையில், ஒன்றிய அரசின் சாகித்ய அகாடமி விருதை சாராத நிலையை தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். கேரளத்துக்கு இருப்பது போல தமிழ் சாகித்ய அகாடமி நிறுவனம் ஒன்றை உருவாக்கி படைப்பு, விமர்சனம், ஆய்வுகள், இளம் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பு என ஐந்து பிரிவுகளில் ஆண்டுதோறும் விருது வழங்கும் சுதந்திரமான அரசு தலையீடு இல்லாத நிறுவனமாக அதை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு அமைக்கும் தமிழ் சாகித்ய அகாடமியின் விருது, தொகை ரீதியாகவும், அங்கீகரிக்கப்படும் படைப்பாளிகள் வழியாகவும் மேன்மையான தன்மையில் இந்தியாவின் முன்னோடி அமைப்பாக முன்னிற்க வேண்டும்.
மேற்கண்ட அறிக்கையோடு உடன்படுவோர் இதில் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
ஷங்கர்ராமசுப்பிரமணியன் ( 7401329385)
கவின் மலர் (9841155371)

Comments