எனக்கு 21 வயதில் திருநெல்வேலியில் பாதி இடிபாடுகளோடு இருந்த சிந்துபூந்துறை பழைய கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டடத்தில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் கோணங்கியுடன் சேர்ந்து எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமானார். தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பை காலை வெளியிட்டு மிகவும் தீவிரமான உரையாடல் நாள்முழுவதும் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடில் லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் ராமகிருஷ்ணனை எடுத்திருந்த பேட்டியும் உதிரியாகப் படித்திருந்த சிறுகதைகளும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அப்படித்தான் அவருடன் பழக்கமும் உரையாடல்களும் ஆரம்பித்தது. திருநெல்வேலி, நாகர்கோவில் சுங்கான்கடை, கோயில்பட்டி, சென்னை என சில ஆண்டுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் பேசும் வாய்ப்புகளைத் தேடி உருவாக்கிக் கொண்டிருந்தோம். சென்னை முகப்பேரில் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த மணலில் பல இரவுகளை தளவாயும் நானும் நண்பர்களும் எஸ்.ராவோடு பேசி நள்ளிரவுகளைக் கடந்திருக்கிறோம். இன்றும் என் கவிதை உலகின் சாரமாக ராமகிருஷ்ணன் உரையாடல்கள் அளித்த சாரமும் அவர் அறிமுகப்படுத்திய ஆசிரியர்களின் சாரமும் இருந்துவருகிறது.
இப்போதும் ஆக்டோவியா பாஸ் முதல் ரில்கே வரை வெவ்வேறு கவிஞர்களையும் நூல்களையும் பிடிஎஃப்களாக அனுப்பி, எனது வாசிப்பைப் புதுப்பிப்பவர். அவர் தூண்டுதல் காரணமாகவே கரமசோவ் சகோதரர்கள் நாவலின் திருப்புமுனை அத்தியாயமான விசாரணை அதிகாரியை மொழிபெயர்த்தேன். லக்ஷ்மி மணிவண்ணனின் முதல் குழந்தையின் பெயர்வைப்பு விழாவை முடித்துக்கொண்டு, அடுத்தநாள் தேவதச்சன் வீட்டுக்கு நாகர்கோவிலிலிருந்து அழைத்துப் போய் ஒரு நீடித்த உறவுக்கு வித்திட்டவரும் ராமகிருஷ்ணன்தான். இன்றுவரை எனக்கு வற்றாத தூண்டுதலை அளித்துவரும் ஆசிரியர்களில் ஒருவரான போர்ஹேவை முதலில் ராமகிருஷ்ணனின் அறிமுகநூல் வழியாகவே தெரிந்துகொண்டேன்.
சமீபத்தில் ரீல்கேயின் புத்தர் கவிதைகளை அறிமுகப்படுத்திப் பேசி, அதை நீ மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நான் இன்னும் ஒரு கவிதையையே மொழிபெயர்ப்பதற்குத் திணறிவருகிறேன். அதில் ஒரு பகுதியை இச்சந்தர்ப்பத்தில் மேற்கோளாக காட்டுகிறேன்.
சிக்கென்று மூடப்பட்ட கவச அறைபோன்ற ஒன்றுக்குள் வாதுமைப் பருப்பு, திடப்பட்டு ருசியானதாக மாறுகிறது. அந்த ருசிக்கும் அதன் ஈரத்துக்கும் பிரபஞ்சத்தில் தூரதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் வரை உதவிசெய்கின்றன. வாதுமைப் பருப்பு முழுமையடைந்த பின்னர், அதன் மேல்தொலி உட்பட எதுவுமே அதைப் பற்றிப் பிடித்திருக்கவில்லை. வாதுமை, எல்லையற்ற அமைதியில் இப்போது உள்ளே இருக்கிறது. எல்லா நட்சத்திரங்களின் மரணத்துக்குப் பிறகும், அவற்றின் இருப்பு அந்த வாதுமையில் உறைந்திருக்கும்.
கவிதையுடனும் கலைகளுடன் அந்த வாதுமையைப் போல சிக்கென என்னைப் பற்றிப் பிடிக்க வைத்திருக்கும் ராமகிருஷ்ணன் போன்ற ஆசிரியர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றி.
கவிதை நிகழும் தருணங்களுக்கு அருகில் தன் கதைகளைப் படைப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். அந்த அடிப்படையில் காலனிய காலத்துக் குற்றவாளிகளைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 25 கதைகள் கொண்ட ‘குற்றமுகங்கள்’ தொகுப்பை கவிதையின் அற்புத தருணங்களிலேயே நாயகர்கள், நாயகிகள் சஞ்சரிக்கும் காவியமென்றே வாசிக்க இயலும். குற்றமுகங்கள் தொடர் கதைகளை எழுதுவதற்கு சற்று முன்னால் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலாம்பூர் சென்றவன்’ குட்டிக்கதையை நான் அவரது இணையப் பக்கத்தில் படித்து, முழுமையாக இது போர்ஹேவிய தன்மையுள்ள கவித்துவமான உருவகக் கதை என்று உணர்ந்து நண்பர்களிடம் படிக்கச் சொல்லி பரிந்துரைத்தேன். குற்றமுகங்கள் கதையின் கதாபாத்திரங்களை வரிசையாக சந்தித்தபோது, கவிதையின் அதர்க்க வெளியில் கதைகள் நேர்த்தியானதும் விதவிதமான அனுபவங்களையும் அலுக்காமல் தந்துகொண்டிருந்தன. சில கதைகளை மட்டும் படிக்காமல் விட்டிருந்த நிலையில் முழுமையாக, மீண்டும் குற்றமுகங்கள் தொகுதியை, வாசிக்கும்போதும் அந்த மாயம் குறையவில்லை. நீலாம்பூர் சென்றவன் கதையில் வருவது போன்றே எளிய மக்களின் வேண்டுதலுக்காக குற்றங்களைப் புரியும் தகையார் வீட்டில் பிரிட்டிஷ் அதிகாரி மாட்டிக்கொள்கிறான்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘குற்றமுகங்கள்’ தொகுப்பை, குட்டிக் கதைகளும் கவிதைகளும் சேர்ந்திருக்கும் போர்ஹேவின் “In praise of darkness” நூலோடு ஒப்பிட்டுப் பேச இயலும். அந்த நூலின் முன்னுரையில், கவிதைப் புத்தகமாகவே இந்த நூலை வாசிக்கவேண்டுமென்று வாசகர்களுக்குச் சொல்கிறார். உரைநடைக்கும் கவிதைக்கும் இடையிலான வித்தியாசத்தையும் கவிதைக்கு துல்லியமான வரையறை ஒன்றையும் இதில் தந்துவிடுகிறார். “வெறுமனே வாக்கியத்தை உடைத்துத் துண்டாக்கும் குளறுபடிதான் கவிதை என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. இந்த முடிவில் ஒரு தவறு இருப்பதாக உணர்கிறேன். வார்த்தைகளை மடித்து மடித்து கவிதை காட்டும் தோற்றம், வாசகனை ஒரு அனுபவத்துக்காகத் தயார்படுத்துகிறது. கவிதையில் உள்ளது தகவலோ, காரண காரிய ரீதியான அறிவோ அல்ல; அது உணர்ச்சி மட்டுமே” என்ற செய்தியே அது.
நாவலையும் சிறுகதைகளையும் வரலாறாகவும் அறிவாகவும் அனுமானித்துத் தொகுத்துக்கொள்ளும் விசித்திரமான காலகட்டத்துக்கு வந்துசேர்ந்து விட்டோம். புனைவு அப்படிப் பொருள்படுவது புனைவாசிரியனின் மிகப் பரிதாபகரமான தோல்வி. கவிதைதான் அந்த அபாயத்திலிருந்து வெகுவாகத் தப்பித்து உயிர்வாழும் பிராணியாக இன்று உள்ளது. அதனால்தான் கவிதையும் கவிஞர்களும் எல்லா சமூகத்திலும் புனிதநிலைக்கோ அல்லது புறக்கணிப்புக்கோ அல்லது குற்றமூலையிலோ பொதுசமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள். போர்ஹேயின் கண்கள் அதனால்தான் இருட்டை வியக்கின்றன. இருட்டைப் பாராட்டாமல் நட்சத்திரங்களை எப்படி ரசிக்க இயலும்? திருடர்கள் நட்சத்திரங்களைப் போல என்று போலீஸ்காரர்களிடம் திருடும் திருடனான ஜோரூ தொங்கா வேடிக்கையாகப் பகிர்கிறான்.
இந்த உலகின் எந்தப் புதிர்களுக்கும் குறைவானதல்ல கவிதை என்று போர்ஹே சொல்வதை மீண்டும் மீண்டும் நான் நினைவுகூர வேண்டிய காலம் இது.
எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்கிய காலனியகால குற்றவாளிகள் எல்லாரது வினோத நடவடிக்கைகளும் இந்த அடிப்படையிலேயே எனக்கு கவிதைகளாகத் தெரிகின்றன. ஆண்கள், பெண்கள், பெண் வேடமிட்ட ஆண்கள் குற்றவாளிகளாக அலையும் குற்றமுகங்களில் கடைசி கதையில் வரும் குற்றவாளியான சோனாபானி ஒரு நாய். எனக்கு மிகவும் பிரத்யேகமான கதை அது. சமயத்தில் இந்தக் குற்றவாளிகள் மெய்ஞானிக்குப் பக்கத்தில் போய் அமர்ந்துவிடுகிறார்கள். சமயத்தில் இந்தக் குற்றவாளிகள் பெரும் காதலர்களாய் தோன்றுபவர்கள். சமயத்தில் இந்தக் குற்றவாளிகள், அநீதியின் அடித்தளத்தில் கட்டப்பட்ட இந்த சமூகத்துக்கு நீதிகளையும் கற்பிக்கும் போதகர்கள். சமயத்தில் இந்தக் குற்றவாளிகள் சுதந்திரம் மற்றும் அழகின் உபாசகர்கள். அழகைத் தவிர வாழ்க்கைக்கு எந்த அர்த்தமுமே தெரியாமல் தோன்றி அநித்யமாக உதிரும் குட்டி மலர்களைப் போலவே குற்றம் தரும் உயிர்ப்புக்காகவே குற்றத்தைத் தொடர்பவர்கள் இவர்கள். சில சமயங்களில் இந்தக் குற்றவாளிகள் அதீதமான சிந்தனைப் பரிமாணத்துக்குச் சென்று மீளும் பைத்தியங்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவின் பல்வேறு இன,மொழி,மத,சாதிக் குழுவினராக வாழும் மக்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் புரிந்துகொள்வதற்காக நாவல்களை அவரவர் மொழியில் எழுதுவதற்கு ஊக்குவித்தார்கள் என்ற ஒரு செய்தி உண்டு. இந்த ஆட்சியாளர்கள் மக்களைத் தெரிந்துகொள்வதற்கு கவிதைகளை எழுதச் சொல்லவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கவிதை வாழ்க்கையைப் பேசும் சாக்கில் ரகசியப் புலன்வழிகளை நோக்கித் திறந்து வாழ்க்கைக்கு வெளியே கொண்டுபோய் விட்டு விடுகிறது. கவிதை பேசும் மெய்மை மாற்று மெய்மை.
அதனாலேயே, தகையார் வீட்டிற்குள் அவரைப் பிடிப்பதற்காக நுழைந்த பிரிட்டிஷ் அதிகாரி பொய்க் கதவுகள், உண்மைக் கதவுகள், சுவரில் வரையப்பட்டிருக்கும் மயில் கண்களுக்கிடையில் சிக்கி வெளியேறவே முடியாமல் மாட்டிக்கொள்கிறான்.
000
எஸ். ராமகிருஷ்ணனின் குற்றமுகங்களில் வரும் சம்பவங்களும், நாயக, நாயகியரும் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர்கள். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய அதே காலப்பகுதியில், இந்தியாவை ஆள்வதற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியார், இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் மீதும் குற்றவாளிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமே ஒரு முறையான நிர்வாகத்தை நிலைநாட்ட இயலுமென்று நம்பினர். சாதாரண மக்களிடம் வெள்ளையர்கள், முன்பு ஆண்டு பிரெஞ்சு போன்ற முந்தைய ஆட்சியாளர்களைவிட நல்ல ஆட்சியாளர்கள் என்பதை நிரூபிக்கவும், அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய அவசியமிருந்துள்ளது. திருடர்களும் கொலைகாரர்களும் கதைப்பாடல் நாயகர்களாக வாய்மொழிக் கதைகளாக நிலைபெற்று வழிபாட்டு அந்தஸ்தைப் பெறுவதையும் தடுத்து உரிய அமைப்புகளை நிறுவ வேண்டிய கட்டாயம் வெள்ளையர்களுக்கு இருந்ததாக ஆய்வாளர் சஞ்சய் சுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
இந்த அடிப்படையில்தான் கங்கை சமவெளி முதல் மெட்ராஸ் மாகாணம் வரை பரவியிருந்த திருடர்களையும் கொலைகாரர்களையும் தக் என்றும் தக்கீ என்றும் 1835 இல் மேஜர் ஜெனரல் ஹென்றி ஸ்லீமன் என்பவர் வகைப்பாடு செய்து, அவர்களது நடவடிக்கைகளையும் ஆராய்ந்தார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு கிராமங்கள்தான் தக்கீகளின் பூர்விகம் என்றும் வழிப்போக்கர்களை கழுத்தை நெரித்துக் கொன்று அவர்களிடமுள்ள உடைமைகளைத் திருடும் பழக்கம் இருந்ததாகவும் அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த திருடர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள் இருவரும் இருந்துள்ளனர். இவர்கள் இந்த திருட்டைச் செய்வதோடு பவானி அல்லது காளியை வழிபடும் வழக்கத்தைக் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்குள் ரகசியமாக பரிமாறிக்கொள்ளக் கூடிய பரிபாஷைகளும் இருந்துள்ளன. தில் லூனா என்று சொன்னால் கழுத்தை நெரித்துவிடு என்று சங்கேதம். தில் லூனா என்பதன் அர்த்தம் “நிலவை எனக்குத் தா”. அதே போல சர்க்கார் என்று நபரை அவர்கள் குறிப்பிட்டால், கொள்ளையடிக்கப்பட வேண்டிய ஆள் கையில் நிறைய பணம் வைத்திருப்பவன் என்று அர்த்தமாம்.
இந்த திருடர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை, மூன்று நாட்கள்வரை வெளிச்சத்தைக் காண்பிக்காமல் வைத்திருக்கும் வழக்கமும் இருந்துள்ளது. மிகுந்த இருட்டிலும் கண்ணுக்குத் துல்லியத்தைப் பழக்குவதற்காகவும், இரவில் பொதுவாகத் தெரிவதைவிட, தெளிவாக எல்லாவற்றையும் பார்ப்பதற்கும் இந்த ஏற்பாடு இருந்துள்ளதாக அலெக்ஸாண்டர் வாக்கர் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ளார். நாற்பது நாள்கள் ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தைக் கூட ஒரு குழந்தை பார்க்காமல் இருந்தால் இருளில் அபாரமான பார்வை இருக்குமென்பது அவர்களது நம்பிக்கை.
குற்றவாளிகளை ஒரு தனித்த சமூக குழுவினராகவும் குற்றமரபினராகப் புரியத் தலைப்பட்ட ஆங்கிலேயர்கள் 19 ஆம் நூற்றாண்டில் மட்டும் தக்கீகள் என்ற பெயரில் திருடர்களைப் பிடித்து இந்தியா முழுவதும் இரண்டு, மூவாயிரம் பேரைக் கொன்றுள்ளனர். இதன் நீட்சியே காலனிய காலத்தின் கொடிய சட்டமான குற்றப்பரம்பரைச் சட்டம்.
000
குற்றமுகங்களில் வரும் குற்றவாளிகளும் அவர்களது நம்பிக்கைகளும் பழக்கங்களும் காலனிய காலத்தில் குற்றங்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் நான் மேற்சொன்ன காலனிய கால சட்டம் ஒழுங்கு நிலையைப் பிரதிபலித்தாலும் ராமகிருஷ்ணன் குற்றவாளிகளை கூட்டமாக, சமூக உளவியல் பார்வையிலிருந்து, குற்றமுத்திரையிடும் கண்ணோட்டத்தில் அணுகவில்லை. குற்றத்தின் வசீகரத்தால் தாக்கப்பட்ட தனிநபர்களே ராமகிருஷ்ணனின் நாயகர்கள். சில நடத்தைகள், சில பழக்கவழக்கங்கள், சில பின்னணிகள் இந்தக் கதைகளில் காட்டப்படுகின்றன. ஆனால், தி யுனிவர்சல் ஹிஸ்டரி ஆஃப் இன்ஃபேமி கதைகளில் போர்ஹே செய்தது போல தத்துவப்படுத்த இந்தக் கதைகளில் எஸ். ராமகிருஷ்ணன் முயலவில்லை. அதேநேரத்தில் அதிகமும் அவர்களை மனிதாயப்படுத்தாமலேயே நம்மை ஏதோ வகையில் கவர்ந்திழுக்கும் பாத்திரங்களாகவும் மாற்றிவிடுகிறார்.
குற்றமுகங்களில் வரும் பெரும்பாலான நாயகர்களுக்கு பொது சமூகம் மீது அபாரமான பரிகாசமிருக்கிறது. பொது சமூகம் குற்றவாளிகளை அல்பமாக கருதுவது போலவே, இந்த குற்றநாயகர்களும் பொது சமூகத்தினரை அல்பஜீவிகளாகவே கருதுகிறார்கள். அங்கிருந்துதான் குற்றம் அவர்களுக்கு தொடர் சாகச அனுபவமாக மாறுகிறது.
அதனால்தான் காவல் நிலையங்களில் மட்டுமே ஜோரூ தொங்கா திருடி, காவல் துறையினரை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறான். அம்மியால் நசுக்கப்பட்டு கால்கள் முடமானபின்னரும் காவல் நிலையத்துக்கே வந்து போலீசின் தொப்பியைத் தூக்கிப் போட்டு விளையாடும் துடுக்கு நீங்காமல் இருக்கமுடிகிறது அந்த சாகச உணர்வாலேயே. கண் துஞ்சார் கோவில்களில் மட்டுமே திருட்டுகளைச் செய்து மக்கள் மத்தியில் நாயக கூத்துப்பாத்திரமாகவும் அவர் வாழ்ந்த காலத்திலேயே ஆகவும் முடிகிறது.
குற்றமுகங்களின் முதல் சில கதைகளில் வரும் திருடர்கள் நிலத்துக்கும் நீருக்குமிடையே சஞ்சரிப்பவர்கள். தங்கப்பல் மோனியும், லான்சர் கீச்சானும் நீரின் தன்மைபெற்ற திருடர்கள். நூபுரனோ ஓடும் ரயிலில் பிறந்தவன். திருவிழாக்களிலும் நீர்ப்பகுதிகளுக்கு அருகிலும் பிறழ்காமத்துக்கான விழைவு கூடுதலாக ஏற்படுவதாக காமசூத்ராவில் வாத்சாயனர் குறிப்பிடுவதைச் சேர்த்துப் பார்க்கிறேன். கோளாம்பி திருவிழா ஒன்றில்தான் குற்றவாளியாக பரிமாற்றம் அடைகிறான். பின்னர் பைத்தியமாகவும் ஆகி கடைசியாக கங்கைக் கரையில் திரிகிறான்.
குற்றமுகங்களில் வரும் 25 கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் குற்றவாளிகளின் அகத்தைத் திறக்கும் வசீகரமான சாவிகளாக மாற்றியிருக்கிறார்.
லான்சர் கீச்சான், தங்கப்பல் மோனி, பெஜவாடா ரந்தேரி, பச்சையங்கி பிஸ்வாஸ், கார்டன் மார்த்தா, நூபுரன், கண்துஞ்சார், பூச்சா ஜக்காரி என எத்தனை வினோதமான பெயர்கள். லான்சர் கீச்சானில் தொடங்கி தங்கப்பல் மோனியில் வலுப்பெற்று பெஜவாடா ரந்தேரியில் தீர்க்கமடைந்துவிடுகிறது குற்றமுகங்கள். எல்லாமே ஒரே கட்டமைப்பில் உள்ள போலீஸ் – திருடன் கதைகள்தான். ஆனால் இந்தக் கதையில் வரும் சாகசத்தையொப்ப மிகையும் சலிப்பும் ஆகாமல் ஒவ்வொன்றையும் வசீகரமாக எஸ். ராமகிருஷ்ணன் படைத்திருக்கிறார்.
என்னைத் திரும்பத் திரும்ப ஈர்த்தவை தங்கப்பல் மோனி, கண்துஞ்சார், தகையார், ஜம்னா, கார்டன் மார்த்தா, ஜூகூர். ஜம்னா கதை போர்ஹேவின் இனவரைவியலாளன் சிறுகதைக்கு ஒப்பான கதை. குற்றமுகங்களின் வாயிலாக காலனியமும் மேற்கும் இந்தியா போன்ற நாட்டையும் மக்களையும் எளிமையாகப் புரிந்துகொள்ளவும் நிர்வகிக்கவும் முயன்றதை கிட்டத்தட்ட இந்த குற்றநாயகர்கள் வழியாக எஸ். ராமகிருஷ்ணன் கேலியும் செய்கிறார். குறிப்பாக ஜம்னா கொள்ளையர்கள் பற்றிய கதையில். ஜூகூர் கதை, தற்போதைய இந்தியாவில் நிலவும் மதவாத, சாதியவாத சூழ்நிலையின் பின்னணியில் படிக்கப்பட வேண்டியது. ஜூகூர் என்ற குற்றவாளி ஒருவனே இல்லாமல் அந்தக் கதையில் காதல் குற்றவாளியாக ஜூகூர் என்னும் கதாபாத்திரமாக கங்கைக்கரை கிராமங்களில் அலைந்திருக்கிறது. காதலே குற்றமாக, சட்டப்படித் தண்டிக்கத்தக்கதாக ஆக்கப்பட்ட தற்போதைய கங்கைக்கரைக்கு ஜூகூர் கதை மிகவும் பொருத்தமானது. கண்துஞ்சார் கதை காஃப்காவின் பட்டினிக் கலைஞன் கதையை ஞாபகப்படுத்தும் கதை. கண்துஞ்சாரை சற்றே ஆழமாகப் பார்த்தால் வாசகனுக்கு வள்ளலாரும் தோன்றக் கிடைக்கலாம்.
கார்டன் மார்த்தா கதை இந்தக் கதைகளிலேயே அதிபயங்கரமானது. வில்லியம் ஃபாக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா கதையைப் போல விபரீத அழகு கொண்டது.
எஸ். ராமகிருஷ்ணன் தான் படைத்த ஒவ்வொரு குற்றவாளியையும் அமர நட்சத்திரங்களாக மாற்றியுள்ளார். தமிழில் நான் சமீபத்தில் வாசித்த புனைவுகளில் மிகவும் முக்கியமான நூல் இது.
000
பாலைவனத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் நீருற்றுதான் ஒட்டுமொத்த பாலைவனத்தையும் அழகானதாக ஆக்குகிறது என்று குட்டி இளவரசன் நாவலில் ஒரு கூற்று உண்டு.
சாகசமும், குற்றமும், காம குரோதங்களும் வாழ்வை இல்லாமல் செய்வது போலவே, வாழ்க்கையை உயிர்ப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
வைக்கம் முகம்மது பஷீரின் தங்க மாலை சிறுகதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. கிணற்றில் தவறி உள்ளே ஆழத்தில் விழுந்து மின்னிக்கொண்டிருக்கும் மனைவியின் தடித்த தாலிச் சங்கிலியை மீட்பதற்கு கணவன் எண்ணி கடுமையாகப் பிரத்யனப்பட்டு அதை மீட்டு மனைவியின் கழுத்தில் மீண்டும் மாட்டி விடுகிறான். ஆனால், கணவன் ஆரோக்கியமாக தொடர்ந்து இருக்க அந்தச் சங்கிலி கிணற்றிலேயே இருப்பதுதான் நல்லது என்று கதைசொல்லியின் மனைவி முடிவெடுத்து மீண்டும் கிணற்றில் போட்டுவிடுகிறாள் மனைவி.
சமூகவியலில் உலகியல் தர்க்கத்தில் அவள் எடுக்கும் முடிவுக்கு அவள் உணரும் சத்தியத்துக்கு ஒரு மரியாதையும் இல்லை. ஆனால் புனைவில் உண்டு. மாபெரும் மெய்மையை பஷீர் அத்தனை அழகாக வாசகனுக்குத் திறந்துகாட்டும் தருணம் அது.
இந்த உலகில் குற்றமும் குற்றவாளிகளும் கிணற்றின் ஆழத்தில் மின்னும் நகையைப் போல மின்னிக்கொண்டிருப்பதுதான் விதி என்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ஹே உரைப்பதைப் போலவே, ஒரு கனவில் இருப்பதைப் போல தங்கள் வாழ்க்கைகளை இந்தக் குற்றவாளிகள் வாழ்ந்தனர்- தாங்கள் யார்? தாங்கள் என்ன? என்று அறியாமலேயே.
நம் நிலையும் அதுவாகவே இருக்கலாமோ என்ற விழிப்பை ஏற்படுத்துபவர்கள் ராமகிருஷ்ணனின் குற்றநாயகர்கள்.
000
குற்றம், தோல்வி, இடிபாடுகள், இன்மை, பற்றாக்குறை, அநீதிக்கு ஆட்பட்ட உயிர்கள் அவற்றின் களங்கம் ஏறாமல் வைத்திருக்கும் கண்களையும் புன்னகையையும் வெளிப்படுத்தும் தனித்துவமான படைப்பாளுமை வைக்கம் முகம்மது பஷீர். மனித எத்தனங்களின் தோல்வி, வியர்த்தத்தின் இடிபாடுகளுக்குள்ளிருந்து முளைக்கும் செடியின் நறுமணத்தை வெளிப்படுத்தும் படைப்புதான் எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவல். யாமம் நாவலில் நாயுடன் சென்னைக்கு வந்து சேரும் பட்டினத்தாரை ஞாபகப்படுத்தும் சதாசிவப் பண்டாரம் ருசிக்கும் அடிக்கரும்பை ஞாபகப்படுத்துவது. குற்றமுகங்கள் கதைத்தொடர், எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் நாவலுக்கு அருகில் உள்ளது. சமூக ஒழுங்கு, நீதி, அமைப்புகள், நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கும் பிரமாண்ட கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து தோன்றும் செடிகளாக குற்றங்களை எஸ். ராமகிருஷ்ணன் பார்த்திருக்கிறார். அந்தச் செடிகள் மூலிகைத் தன்மை கொண்டவை. தாம்பே கதையில் வரும் கதாபாத்திரம் இந்த உலகில் செய்யப்படும் எல்லா குற்றங்களும் ஏற்கெனவே செய்யப்பட்ட குற்றத்தின் நகல்தான் என்ற ஒரு அறிதலுடன் குற்றங்களில் சலிப்பு ஏற்பட்டு துறவியாகி விடுகிறான்.குற்றத்துக்கு ஆதாரமான காரணிகளைத் தேடி ஒரு துறவியையும், ஒரு வியாபாரியையும், ஒரு பாலியல் தொழிலாளியையும் சந்திக்கிறான். குட்டி இளவரசனின் சிறுவனைப் போல மூன்று பேரிடமும் மூன்று பதில்களைப் பெறுகிறான்.
சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் குற்றத்தன்மை கொண்ட சிறுவன் லச்சத்தை சுந்தர ராமசாமி மரணமடையாமல் விட்டிருந்தால் அந்த நாவல் வேறொரு பரிமாணத்தை அடைந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.
ரோஜா என்பது இப்போது பெயரில் மட்டுமே இருக்கிறது என்ற உம்பர்த்தோ எக்கோவின் மேற்கோள் ஞாபகத்துக்கு வருகிறது. பிரியாணியும் பெயரில் மட்டுமே இப்போது இருக்கிறது.
எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
000
(எஸ். ராமகிருஷ்ணனின் ‘குற்றமுகங்கள்’ காலனிய கால குற்றப்புனைவுகள் நூலுக்கு ஆற்றிய உரை)



Comments