‘நீல குண்டு பல்பு’ கவிதையை நீங்கள் எழுதும் போது நானும் உடனிருந்தேன். அன்று காலை இருவரும்தான் அதைக் கண்டோம். எனக்கு அது நீலக்கடலின் கண்ணாக, பிக்காஸோவின் குவெர்னிக்காவில் வரும் நம்பிக்கை தரும் கண்ணின் மணியாக (கரு விழியை அவர் குண்டு பல்பாகதான் உருவகித்திருக்கிறார், அறிவியலின்/நவீனத்துவத்தின் மீதான நம்பிக்கையாக) தோன்றியது. நீங்கள் அந்த அருவச் சித்திரத்திலிருந்து முன்னகர்ந்து ஒரு முழு வாழ்க்கையைக் கண்டிருக்கிறீர்கள். அது உங்கள் கவிதைகளின் உச்சங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது. அக்கணத்தில் குண்டு பல்பின் காட்சியிலிருந்து எப்படி இரவில் விழித்திருந்து தாலாட்டும் அன்னையை சென்றடைந்தீர்கள்? நான்
உருவத்திலிருந்து அருவத்திற்கு சென்றேன். நீங்கள் அருவத்திலிருந்து வாழ்க்கையின் ஒரு கணச் சித்திரத்திற்கு சென்று அங்கிருந்து வாழ்க்கை முழுவதையும் கண்டிருக்கிறீர்கள்?
பெசண்ட் நகர் உடைந்த பாலம் கழிமுகப் பகுதியில் கடலுக்குள் செல்லாமல் கரையில் மிஞ்சும் கைவிடப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் நாம் அன்று கண்ட நீல குண்டு பல்பு. கடல் மணலில் பாதி புதைந்து முட்டை போல ஒளிர்ந்தபடி இருந்த படம் எனக்கு என்றைக்கும் மறக்காது. பயன்பாட்டிலிருந்து நீங்கிய எல்லாப் பொருள்களும் கடல் நீரால் கழுவப்பட்டு தூய்மையான, ஒரு வகை புனித மதிப்புடன் எல்லாரும் எடுத்துச் செல்லுமளவு எளிதாக, அதே நேரத்தில் எடுத்துச் செல்லமுடியாத அபூர்வத்தில் அவை வந்துசேர்ந்திருக்கின்றன. அதன் கழுவப்பட்ட தன்மை குறித்து என்னிடம் முதலில் பேசியவர் என்னுடன் அழைத்துச் சென்ற கவிஞர், நண்பர் வேணு வேட்ராயன். வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறந்துபோன சடலங்கள் மீண்டும் மீண்டும் அடக்கமோ, தகனமோ செய்யப்படுவதற்கு முன்னர் கழுவப்படுவதைப் போல கழிமுகத்தில் வந்துசேர்ந்த பொருள்கள் எல்லாம் கழுவப்படுகின்றன. என் தங்கை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1983 ஆம் ஆண்டு பிறந்தாள். அவளை வீட்டுக்கு அழைத்துவரும் அன்று எனது அப்பாவும் நானும் பஜாருக்குச் சென்று எங்கள் வீட்டுக்கு முதல்முறையாக விடிவிளக்கும் ஸ்விட்சும் சேர்ந்த குட்டி மரப்பெட்டியை வாங்கினோம். என் அப்பா பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக இறுக்கமில்லாமல் இருந்தார். மின்பொருள்கள் விற்கும் கடையில் என்னையே தேர்ந்தெடுப்பதற்கும் அனுமதித்தார். வீட்டுக்குப் புதிதாக வந்த தங்கச்சிப் பாப்பாவும், நான் தேர்ந்தெடுத்து வாங்கிவந்து சிறிய ஒண்டிக்குடித்தன வரிசை வீட்டின் சுவரில் மாட்டியிருந்த அந்த விடிவிளக்கும், தீராத காட்சியாய் இரவுகளில் இருந்தது. குட்டியாக மினுங்கும் அந்த விளக்கையும், பாப்பா படுத்திருந்து அசைந்து கொண்டிருக்கும் வெள்ளைத் தொட்டிலையும், இருட்டில் பார்த்த ஞாபகத்தைத் தூண்டி அந்த ‘நீல குண்டு பல்பு’ கவிதை உருக்கொண்டது
ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தைக் கடந்து வருவதாக இருப்பது எப்படி? அம்மாவின் மரணம், அப்பாவுடையது. இளஞ்சிறுவன் உலகை எதிர்கொள்வது, காதலனின் அகமரணம் என? இக்கவிதைத் தொகுதியே அம்மா நீங்கிய பிறகு பூக்காத டெஸர்ட் ரோஸில் துவங்கி தீபாவளியன்று கடற்கரையில் சென்று நிற்கும் கவிதையில் முடிகிறது.
தீபாவளிக்கு
புதிய நாய்க்குட்டிகள்
இங்கே வருகின்றன.
சில நாய்க்குட்டிகள்
இங்கிருந்து
விடைபெற்றுப் போய்விடுகின்றன.
உங்கள் கதை வேறுபட்டதல்ல.
என் கதையும் சற்றேறக்குறைய
இதுதான்.
என முடியும் போது ஒரு நாவலை வாசித்த பெரும் சோர்வும், பெருமூச்சுமாக முடிகிறது. இப்படி ஒவ்வொரு தொகுப்பும் ஒரு நாவலைப்போல துவங்கி ஒரு கண்டடைதலாக முடிவது தற்செயல் என்றால் முப்பது வருடங்களாக, பத்து தொகுப்புகளாக இப்படி நடக்குமா? நீங்கள் இதை உணர்ந்திருக்கிறீர்களா?
நெடிய பயணங்களில் இயல்பாகவே ஆர்வம் இல்லை. மிகப்பெரிய கற்பனைத்திறன் கொண்ட ஆளுமை என்று என்னைக் கருதிக்கொள்ள நீதமில்லை. பிரமிள்,விக்ரமாதித்யன், பிரான்சிஸ் கிருபா, லக்ஷ்மி மணிவண்ணன் படைப்புகளில் காணக்கூடிய இயல்பான மேதமையும், எரிந்தொளிரும் உணர்வுச்சமும் கொண்ட எழுத்துலகு என்னுடையதல்ல. முதல் பால்பல் விழுந்ததிதிலிருந்து பூமயிராக மீசை அரும்பியது வரை எனது உடல்வளர்ச்சியிலேயே அனைத்தும் தாமதமாகவே நிகழ்ந்தது. மகரக்கட்டு உடைந்து குரல் மாறவே இல்லை. ஆண்குரலே இதுவரை வரவில்லை. குடும்பத்தைத் தாண்டி பெண்களுடன் மிகக் குறைந்தபட்சம் சகஜபாவம் கொள்ளமுடிந்தது 40 வயதுக்குப் பிறகுதான். அதையொட்டியே, மிக மிக மெதுவாக விரிவுகொள்ளும் என் அக, புற உலகத்தை உன்னிப்பாகவும் துல்லியமாகவும் பார்க்க முடிவது மட்டுமே எனக்கிருக்கும் ஒரே சாத்தியம். அங்கே பரிச்சயமாகும் பிராணிகள், பறவைகள், பொருள்கள், மனிதர்களுடன் நிகழும் உறவிலும் பிரிவிலும் ஆழமாக சஞ்சரிக்க நேர்வதாலும் ஒரு நிறை, ஒரு தொடர்ச்சி சாத்தியமாகிறதென்று நினைக்கிறேன். இந்தக் குட்டி உலகத்தில் ஒரு துளி தித்திப்பு இந்த எறும்பின் தினத்தையே தீபாவளியாக்கி விடுகிறது.
சுதந்திர விருப்பு(free will) சார்ந்த நம்பிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. ‘எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ’ என்ற சினிமா பாடல் வரி மனத்துக்கு அத்தனை ஆறுதலாகவுள்ளது. ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு பருவங்களையும் அது கொடுக்கும் சவால்களையும் அகமும் புறமுமாக தீவிரமாகவே முகம்கொடுத்து மோதி மண்டை உடைபட்டுக் கடக்கிறேன். காதல்,கடவுள்,பிரிவு,மன அழுத்தம்,பயம்,சமூக வாழ்க்கையின் மீது அழுத்தமான தாக்கத்தைச் செலுத்திவரும் அரசியல் என எல்லாவற்றின் முன்னும் என் சுயத்தை மோதவிட்டு நொறுங்கித்தான் திரும்பத் திரும்ப என்னைத் தொகுத்துக்கொள்கிறேன் - ஒரு காலகட்டத்தில்பட்ட அவஸ்தைகள், அல்லல்கள் அனைத்தும் எனக்கே பொருளற்றவையாக சிரிப்பைத் தந்தாலும். அந்தப் பருவங்கள், அந்த அத்தியாயங்கள் எனது கவிதைத் தொகுப்புகளிலும் பிரதிபலிக்கிறதென்று நினைக்கிறேன். அம்மா வந்தார். அம்மா போனார். காதலி வந்தாள். காதலி போனாள். நாய்க்குட்டிகள் வருகின்றன. நாய்க்குட்டிகள் போகின்றன. கவிஞன் வருவதையும் போவதையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறான்.
வசந்தம் வருகிறது
வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கிறது
வாழ்வரசிகள் கூடுகிறார்கள்
ஆசைப்பட்டு.
என்று விக்ரமாதித்யனை விட மேலானதாக இதை எப்படி அழகாகச் சொல்லிவிட இயலும்.
எளிதில் கைப்பழக்கமாக ஆகக்கூடியவை கவிதைகள். இத்தனை தொகுப்புகளிலாக உங்கள் உலகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் சிங்கத்துக்கு பல் துலக்கிய அதே சிறுவனும், அதே சிங்கமுமாக இன்னம் அந்த நாடகம் தொடர்கிறது. இப்போது சிங்கம் வேறொன்றாக ஆகியிருக்கிறது. அந்த வேலையில் சிறுவனுக்கு பெரும் புரிதல் நிகழ்கிறது. பல் துலக்குதல் நடனம் போலாகியிருப்பதாக தோன்றுகிறது. ஷங்கர் எழுதக்கூடிய கவிதை என ஒன்றை எழுதிவிடவே இயலாதவாறு கவிதை தேய்வழக்காக ஆகாமல் எப்படி தப்பித்துக் கொள்கிறீர்கள்? அந்தச் சிறுவனும் எப்படி வளராமல் இருக்கிறான்?
வணிக கலைகளில் தேய்வழக்குதான் கலைஞனின் அடையாளமாக நினைவில் பதிகிறது. அந்த விபத்து இப்போது நவீனகவிதை போன்ற வடிவங்களிலும் ஒரு படைப்பாளிக்கு சீக்கிரமே நிகழ்ந்துவிடுகிறது. என்னளவில் அந்த விபத்தைத் தவிர்ப்பதற்கு மிகக்கூர்மையான விமர்சகர்களாகவும், உடனே முகம்சுளித்து கடிந்துரைப்பவர்களாகவும் நண்பர்கள் எப்போதும் உடனிருக்கின்றனர். ஆரம்பகட்டத்தில் லக்ஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன், சி.மோகன் போன்றோர் இருந்திருக்கின்றனர். சுலபமாக வருவதாலேயே அதைச் செய்யாதே என்பதை மிகவும் துவக்கத்திலேயே kill your darling என்ற கூற்றின் வழியாக விளக்கி சி.மோகன் சொல்லியிருக்கிறார். ஆரம்பகால படைப்புகளுக்கும் இப்போது நடுப்பருவத்திலிருக்கும் படைப்புகளுக்கும் வித்தியாசம் என்னவென்று விசாரணையைத் தொடங்கலாம். அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்த உலகம் கனத்து கீழே இறங்கியிருக்கிறது. உலகத்துடனான உறவு கனிந்திருக்கிறது. கருத்து,லட்சியம்,ஸ்படிகத்தன்மையோடு கூர்மையும் வறண்டும் அவன் துவக்கத்தில் எழுதிய நேர்கவிதை இருந்தது. உலகத்து களங்கத்தின் மாசேறி தேய்ந்து கல்மிஷமும் காமமும் இசைத்தன்மை பெற்று, லட்சியம் குலைந்த கூழாங்கல்லாக மாறியுள்ளது. ஷங்கர் எழுதக்கூடிய கவிதைக்கு அதிக நகல்கள் உருவாகாதாதற்குக் காரணம் என்னவென்று நானும் யோசித்திருக்கிறேன். நான் ஒரு வெளிப்பாட்டின், ஒரு குணத்தின், ஒரு கருத்தின் நிறுத்தத்தில் தொடர்ந்து நின்றுகொண்டிருப்பதை விரும்பவில்லை. பகடிக் கவிதைகளின் சிறந்த முன்மாதிரிக் கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால், அதை நான் தொடர்ந்ததில்லை. ‘கல் முதலை ஆமைகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்த ஆன்மிகத் தன்மை மீது சந்தேகம் வந்து திரும்ப காம,குரோதங்களுக்கு நிழல்,அம்மா கவிதைத் தொகுப்பிலும் இகவடை பரவடை தொகுப்பிலும் திரும்பிவிட்டேன். நடுவில் சிறுவர்கள் இல்லாமலே என் கவிதைகளில் போயிருந்தனர். நீல குண்டு பல்பு கவிதையில் அவர்கள் திரும்ப வந்திருக்கின்றனர். ழாக் ப்ரெவர் தொடங்கி சமீபத்தில் சார்லஸ் சிமிக் வரையிலான கவிஞர்களின் தாக்கங்களும் வெளிப்படையானவை.
என் ஆளுமைக்குள் இருக்கும் சிறுவன் ஏன் வளராமல் இருக்கிறான் என்ற கேள்விக்கு ரொம்ப மேலோட்டமான ஒரு பதிலை நான் சொன்னால் அது ஊழலானது. ஏனெனில் அதற்கான பதில் துயரமானது. அந்தச் சிறுவன் முன்பைவிடக் கூடுதலாகப் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறானா? ஆமாம். அந்தச் சிறுவனிடம் முன்பைவிட மறைப்பதற்கு நிறைய விஷயங்கள் சேர்ந்திருக்கிறதா? ஆமாம். வளர்ந்தவர்கள் உலகத்தில் ஒருவனாவதற்கான போராட்டங்கள் அனைத்தையும் செய்திருக்கிறானா? ஆமாம். பெரியவர்களின் உலகில் அங்கத்தினராக இப்போதாவது ஆகிவிட்டானா? இல்லை. அதற்கான காரணம் ஏதாவது அவனுக்கு விளங்குகிறதா? இல்லை. இத்தனை போராட்டங்களுக்கும் துயரங்களுக்கும் பிறகும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறானா? ஆமாம்.
மீபொருண்மையை மீபொருண்மையின் தளத்தில் அணுகுவதுதான் தமிழ் நவீனக் கவிதையாக இருந்து வந்திருக்கிறது. அல்லது அதை மறுப்பவர்கள் அன்றாடத் தளத்தில் அதை வைத்து அரசியல்/இருத்தலியல் நோக்கில் அணுகுவார்கள். முன்னதில் வாழ்க்கை இருக்காது. பின்னதில் மின்னல் இருக்காது. உங்கள் உலகில் மீபொருண்மை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது, ஆனால் அது பூக்களாக, பூனைகளாக, க்லிங்கென்று உடைபடும் பாட்டிலின் சூரியனாக வருகிறது. மரணம் கூட குயிலின் கூவலாக வருகிறது. காலபைரவர் சன்னதியில் நிற்கும் போது மரணம் இருப்பு குறித்துதான் சிந்தனை வரக்கூடும். அதுவும் சாணியின் மீது நின்று தற்படங்கள் எடுக்கும் உதட்டுச் சாயம் அணிந்த பெண்ணைக் காணும் போது. ஆனால் உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் எனத் தோன்றியதுதான் மெய்யான காலத் தரிசனமென அக்கவிதையை படித்த உடன் உணர்ந்து கொள்ளவும் முடிந்தது. அறிய முடியாமையையும் புலன்களின் தளத்தில் எதிர்கொள்வதை எப்படி அடைந்தீர்கள்? கவிஞர்கள் மீபொருண்மையாகவே சொல்லில் அடையும் ஒன்றாக இருப்பது எப்படி உங்களுக்கு நாவில் கரையும் ஒன்றாக தரிசனம் தந்தது?
நான் காதலித்து என்னைவிட்டுப் பிரிந்தவள், என் கண்முன்னால் புதிய காதலனோடு அவசரமாக ஆட்டோவில் ஏறிச்செல்லும் காட்சியைப் பார்த்த ஒரு இரவுநேரம், தற்கொலை செய்யவேண்டுமென்றென்னும் அளவுக்கு ஆற்றாமையும் அகவறட்சியும் ஏற்பட்டது. பக்கத்திலிருந்த ’அம்மா உணவக’த்துக்குப் போய் 6 ரூபாய்க்கு 6 சப்பாத்திகள் சாப்பிட்டு வீட்டுக்கு ரயிலேறினேன். பூமியில் கால்கள் தரித்த உணர்வு. தேவதச்சன் கவிதையில் அம்மாவின் சடலம் நடுவீட்டில் கிடக்க மகளும் அவளது கணவரும் பக்கத்து அறையில் நள்ளிரவில் உடலுறவு கொள்ளும் காட்சியை எழுதியிருக்கும் கவிதை உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம். நிலவு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். என் அப்பா இறந்த சடலத்தை எரிப்பதற்கு முன்னால் இன்னொரு சடலம் எரிந்துகொண்டிருந்ததால் நாங்கள் மயானத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. மயானத்தின் திண்ணையில் ஈர வேட்டியோடு மொட்டை அடித்து நான் உட்கார்ந்திருந்தேன். சாவுக்கு வந்திருந்த தேவதச்சன் தான் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து முறுக்கு எடுத்துக் கொடுத்தார். சாப்பிடுங்கள், பசிக்கும் என்று சொன்னார். பக்கவாட்டில் அப்பாவின் சடலத்தைப் பார்த்துக்கொண்டே கைமுறுக்கை ருசித்துச் சாப்பிட்டேன். அன்று காலை சாப்பிட்ட முதல் உணவு அது. எனக்கு எந்தக் குற்றவுணர்வும் எழவில்லை. அம்மா எனக்கு எப்போதும் ருசியாகத்தான் இருக்கிறாள். பெரியம்மா எனக்கு அவள் செய்துகொடுத்த நல்ல அவியலாகவே இருக்கிறாள். “மரணம் வேட்கையை வசீகர எழில் கொண்டதாக்குகிறது.மரணம் ஆசைநாயகியை தவிர்க்கமுடியாதவளாக்கிவிடுகிறது” என்று ராஜா ராவ் சொல்வது மந்திர வாக்கியம் அல்லவா?
ஆந்தைப் பூனைக் கவிதையில் “எல்லாம் ஒரு வட்டம் / உள்ளே ஒரு முக்கோணம்தான்” என்றொரு வரி வருகிறது. இருபத்தைந்து வருடங்கள் முன்பு நீங்கள் எடுத்த நேர்காணலில் சந்திரலேகா ஏறத்தாழ இதையே, “ஸ்ரீ சக்கரம் என்பதே ஆண், பெண் புணர்ச்சியை வெற்று வெளியில் குறிக்கும், அரூபம்தானே. அது சதுரமாகவும் வட்டமாகவும் முக்கோணமாகவும் புள்ளியாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இது எல்லா இந்திய மனங்களின் ஆழ்ந்த இடைவெளிகளிலும் இருக்கிறது” என்கிறார்.
பூனைக்கும் ஆந்தைக்கும் முகத்தின் வடிவவியலில் இருக்கும் ஒற்றுமையைப் பார்த்து எழுதியது அந்தக் கவிதை. எனது பிரௌனி முகத்தை மூன்னால் நீட்டி தரையில் கால்களை ஒட்டிப்பரப்பிப் படுத்திருக்கும்போது முதலையாகத் தோற்றம் கொடுக்கும். பிட்சாடனருடன் மான் இருக்கிறது. காலபைரவருடன் நாய் இருக்கிறது. குதிரை, நாய், மான் எல்லாம் வடிவவியலில் ஒன்றை ஒன்று பிரதிபலிப்பவைதானே. பிரௌனியுடன் காலை நடையில் சிலவேளைகளில் உற்சாகமாக ஓடும்போது குதிர குதிர என்றே சொல்லி ஓடுகிறேன்.
பிற கலை ஆளுமைகளை சந்திப்பது உங்கள் கவிதை/வாழ்க்கை நோக்கில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? ஏனெனில் நீங்கள் பேட்டி கண்ட ஆளுமைகள் பல்வேறு புலத்தில் இயங்குபவர்கள். உங்கள் கவிதைகளில் புற உலகம் என்பதும் அக உலகமாகவே வருகிறது....
எழுத்துக் கலைஞனுக்கும் உடல் சார்ந்த பிரக்ஞை அவசியமானது என்ற போதத்தை எனது 30 வயதில் முதலில் ஏற்படுத்தியது நடனக் கலைஞர் சந்திரலேகா தான். அவரது ஸ்பேசஸ் வீட்டில் உண்டாக்கிய ஒரு இடத்தில் களரிப் பயிற்சியை சில ஆண்டுகள் பெற்றிருக்கிறேன். சந்திரலேகாவின் நேர்காணல் வழியாகவே அந்த நட்பு வாய்த்தது.
நீங்கள் பத்திரிக்கையாளராக பணிபுரிந்த போது கண்ட நேர்காணல்கள் தொகுப்பாக இப்போது வெளிவருகிறது. எனக்கு நீங்கள் பத்திரிக்கைத் துறையில் பணிபுரிந்தது இன்னமுமே ஆச்சரியமாகதான் இருக்கிறது. உங்கள் கவி மனதிற்கு அது முற்றிலும் நேர் மாறான உலகம் என்பதாக என் எண்ணம். ஆனால் உங்கள் கவிதையில் வரும் சிறுவன், எந்த தயக்கமும் இன்றி அண்டைவீடுகளில் உள்ளே நுழைந்து அங்கே இருக்கும் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து சாக்லேட்டோ, கேக்கோ இருக்கிறதா என உரிமையோடு பார்க்கும் தன்மையில் இவர்கள் எல்லாருக்குள்ளும் புகுந்து வெளிப்படுகிறதான பார்வையை தருகின்றன இந்த நேர்காணல்கள். இரண்டும் வேறு வேறு உலகங்கள் இல்லையா? அந்த திருநெல்வேலி சிறுவன் சென்னையைக் காண்பதைப் போலத்தான் பிற ஆளுமைகளுக்குள் வேடிக்கை பார்ப்பதும் எனக் கொள்ளலாமா?
பணிபுரிந்தது என்ற கேள்வியிலேயே இறந்தகாலம் தற்செயலாக வந்துவிட்டது. அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். இரண்டும் வேறு வேறு உலகங்கள் அல்ல. கவிதையும் இலக்கியமும் மேலானது; இதழியல் வாழ்க்கைப்பாட்டுக்கானது என்ற எண்ணம் எனக்கு இன்றுவரை இல்லை. இந்து தமிழ் திசை நாளிதழில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகள், செய்த நேர்காணல்கள் வாயிலாக, கவிஞனாக என்னை முற்றிலும் தெரியாத சில நூறு வாசகர்களுக்கு, விருப்பமான பத்திரிகையாளனாக நினைவில் பதிந்ததுதான், எனது இதழியல் பங்களிப்பின் மகிழ்ச்சியான அடையாளமாக மீந்துள்ளது. குழந்தைகள் இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், மனித உரிமைகள், மருத்துவம், சினிமா, சூழியல், சமூகவியல், அரசியல், அறிவியல் என எனது ஈடுபாடுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கான கல்வியாகவும் அதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இதழியல் இருந்துள்ளது. கற்பதற்கும், கற்றதை எளிதாகப் பகிர்வதற்குமான ஒரே பணி இதழியல்தான் என்று கூறிய ஜோசப் காம்பலைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன். சம்பிரதாயக் கல்வியற்ற எனக்கு சுயகல்வியைத் தந்ததும் தந்துகொண்டிருப்பதும் காலச்சுவடு, நிறப்பிரிகை, புதுயுகம் பிறக்கிறது, இனி, சுபமங்களா, புதிய பார்வை, இந்தியா டுடே, உயிர்மை, தி இந்து, அவுட்லுக் தொடங்கி டெஹல்கா, தி கேரவன் வரையிலான சிற்றிதழ்களும் சீரிதழ்களும்தாம். சுந்தர ராமசாமி வீட்டின் மேல்மாடியில் ஆவணமாகச் சேகரிக்கப்பட்டிருந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் பழைய இதழ்களை நானும் நண்பன் தளவாய் சுந்தரமும் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் லட்சியத் தமிழ் இதழ் ஒன்றை நடத்தும் ஆசையைத் தொடர்ந்து எங்களுக்குள் வளர்த்திருக்கின்றன. அப்படி ஒரு மாற்றிதழ்ப் பண்பாட்டைக் கனவாகக் கண்ட பலரின் பொது விருப்பம், தமிழில் தீராநதி, விகடன் தடம், இந்து தமிழ் திசை பத்திரிகைகளின் வாயிலாக கொஞ்சம் யதார்த்தமாகவும் ஆனது.தமிழ் இதழியலில் இன்னும் செய்யவேண்டிய வேலைகளும் பூர்த்தியாகாத இடங்களும் இருப்பதாகவே எண்ணுகிறேன். அச்சு இதழியல் அகாலமாக க்ஷீணமாகிவிட்ட நிலையில் இனி அதற்கு வாய்ப்பும் இல்லை. இணைய இதழியல் குறைந்தபட்ச தரத்தையோ புதுமைகளையோ எட்டும் என்ற நம்பிக்கையும் நம் சூழலில் இல்லை. இன்றைக்கும் தி இந்து ஆங்கில நாளிதழுடன்தான் எனது நாள் விடிகிறது. எனது உலகப் பார்வை, சமூக அறிவு, ஏற்றத்தாழ்வுகள், இந்துப் பெரும்பான்மை மதவாதம், நடுத்தர மக்களின் மொண்ணைத்தனம் அதிகரித்து வரும் நமது இந்தியச் சூழல் குறித்த பிரக்ஞை ஆகியவற்றை எல்லாம் தருவது ஆங்கில இதழியல்தான். தற்போது எனக்கு லட்சிய பத்திரிகையாக இருப்பது தி கேரவன் மாத இதழ். 20 வயதுகளில் அரசியல் பிரக்ஞையற்ற சுத்த இலக்கியவாதியாகத் தொடங்கிய நான், நீல குண்டு பல்பு தொகுதியில் வரும் ’காசி’ கவிதைகளை எழுதியிருப்பதற்குக் காரணம் எனது இதழியல் பணியே. அன்றாட எதார்த்தத்துடனான கூடுதலான ஈடுபாட்டையும் சமூகக் கடப்பாட்டையும் உண்டாக்கியிருப்பதற்கு எனது இதழியல் பணிக்கு நான் நன்றிக்கடன்பட்டவன். ஆங்கில இதழியலாளனாக இருந்திருந்தால் நல்ல புலனாய்வு பத்திரிகையாளனாக என்னைத் தயார் செய்துகொண்டிருந்திருப்பேன். ஒரு செய்தியை புனைவாகவும் கவிதையாகவும் ஆக்கமுடியும். ஒரு புனைவைவிட விந்தையான செய்திகளை நாம் கடக்கவே செய்கிறோம். அன்றாடத்தை நாம் பார்க்கும் விதத்தில்தான் சாதாரணம் அசாதாரணம் கொள்கிறது.
நடனக் கலைஞரின், கலையை யோகமாகக் கருதும் பேட்டி முடிந்த உடன் உடற்கூறாய்வு செய்பவரின் உலகம் அடுத்த நேர்காணலாக விரிவது உங்கள் கவிதை உலகத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. அதுவும் இன்னொரு கவிதைத் தொகுப்புதான் போல என்பதைப் போலிருக்கிறது....
சண்டைக் கலையான களரியின் அடவுகளை தனது நடனத்துக்குப் பயன்படுத்திக் கொண்டவர் சந்திரலேகா. தனக்கு களரியைக் கற்றுக் கொடுத்த கேரள இளைஞருக்கு சென்னையில் உள்ள தன் வீட்டுக்குப் பின்புறத்திலேயே வசிக்க இடம்கொடுத்து வருவாய்க்கு பிற மாணவர்களுக்கு களரியைக் கற்றுக்கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். சுவாசத்துக்கும் மனத்துக்குமான தொடர்பு, உடலுக்கும் இயற்கைக்கும் புழங்கு பொருள்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பு குறித்த பிரக்ஞையை உரையாடல்கள் வழியாக உருவாக்கியவர் அவர்தான். எனது அக்கா கணவர் மர்மமான பின்னணியில் இறந்தபோது, பிரேதப் பரிசோதனை அறையை ஸ்டான்லி மருத்துவமனையில் நேரடியாகப் பார்த்த அனுபவம் முக்கியமானது. ஒரு மருத்துவமனையில் யாருக்கும் தெரியாத இடத்தில் பிரேதப் பரிசோதனை அறை ஏன் இருக்கிறது? என்ற கேள்வி ஏற்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்யும் ஒரு பெண்ணின் நேர்காணல் ஒன்றையும் உயிர்மை இதழில் படித்த ஞாபகமும் இருந்தது. அதன் விளைவுதான் டிகாலின் நேர்காணல். ஒரு காதல் பிரிவால் நேர்ந்த உளச்சிதைவின் காரணமாக மனம் என்ற பிரதேசம் சார்ந்து நிறைய வாசித்ததன் பின்னணியில் போய் சேர்ந்த இடம்தான் மூளை நரம்பியலாளர் விளையனூர் ராமச்சந்திரன். தடயவியல் என்ற துறையை நவீனப்படுத்தியதே ஷெர்லக் ஹோம்ஸைப் படைத்த ஆர்தர் கானன் டாய்ல் என்ற புனைவாசிரியன்தானே.
தமிழில் சினிமா/அரசியல் களத்திற்கப்பாற்பட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்துவது அனேகமாக இல்லாமலாகியிருக்கிறது. இந்தத் தொகுப்பின் வழி பல தளங்களில் இயங்கிய ஆளுமைகளின் சித்திரம் கிடைக்கிறது. க்ரியாவின் கோணல்கள் தொகுப்பில்தான் முதல் முறையாக நவீன ஓவியம் (ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின்) இலக்கிய நூலின் அட்டை ஓவியமாக வெளிவந்தது என்பதைப் போன்ற தகவல்கள் ஆச்சரியாமக இருந்தது. நான் ஆதிமூலம்தான் இலக்கியதோடான உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் ஓவியர் என்றே எண்ணி வந்திருக்கிறேன். கோணல்கள் அட்டைப் படத்தை இணையத்தில் தேடிப் பார்க்க முயன்றேன். கிடைக்கவில்லை. தமிழகம் போல எந்நேரமும் அரசியற் தளத்தில் கொந்தளிக்கும் சமூகம், தன் வரலாறை ஆவணப்படுத்துவதில் காட்டும் அறிவின்மை உங்களுக்கு எப்படி பொருள்படுகிறது?
ஓவியம், செவ்வியல் இசை, நாடகம், சினிமா, தத்துவம் எல்லாவற்றோடும் சேர்ந்துதான் இலக்கிய உணர்வு வலுப்பெறுமென்ற பிரக்ஞையோடுதான் தமிழ் சிறுபத்திரிகை இயக்கம் இங்கே சென்ற நூற்றாண்டில் நடை பத்திரிகையிலிருந்து தொடங்கியது. மெட்ராஸ் கலை இயக்கத்தின் முக்கிய ஆளுமைகள் அனைவரும் தமிழ் படைப்பாளிகளுடனுடன் சிறுபத்திரிகைகள் பிரசுரங்களுடனும் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தவர்களே. சி. மணி, வெங்கட் சாமிநாதன், பிரமிள் தொடங்கி தமிழில் நவீன நாடகத்தை நிலைபெறச் செய்த சிறுகதை சாதனையாளர் ந. முத்துசாமி வரை இந்தப் பரிவர்த்தனையின் சாட்சிகள்தான். அந்த இணக்கமும் பல்வேறு கலைத்துறையினர் சேர்ந்து இயங்கும் சூழலும் அருகிப்போனது துரதிர்ஷ்டமானதே. ஆனால், தீவிர கலை இலக்கிய வெளியில் மட்டும் இந்தத் தனிமையும் polarization உம் நிகழவில்லை. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் பண்பாடு, வெகுஜன அரசியல், ஆட்சியாளர்களையே தீர்மானித்த வெகுஜன சினிமா சுவரொட்டிகளுக்கே இங்கே ஆவணங்கள் இல்லை. கி. ராஜநாராயணன் விகடனில் தொடராக எழுதி வெளிவந்த தொடர்கதைகளுக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களுக்கு மூலப்படங்கள் சேகரிக்கப்படவில்லை. ஆதிமூலத்தை விடுங்கள்; வெகுஜனத் தொடர்கதைகளின் நட்சத்திர ஓவியராக இருந்த ஜெயராஜின் சித்திரங்கள் பத்திரிகை அலுவலகங்களில் சேகரிக்கப்படவில்லை. ரோஜா முத்தையா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்ற தனிநபர்கள் சொந்த ஆர்வத்தில் சேர்த்திருக்கவில்லையெனில் நாம் இப்போது காணும் பழைய பத்திரிகைகள், ஆவணங்களைக் கூட இழந்திருப்போம்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)


Comments