இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
டாஸ்மாக்கிலிருந்து சீக்கிரம் கிளம்புவது
சரியான வேளையில் குவளையைக் கவிழ்ப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
லட்சியங்களிலிருந்தும்
மாய்மாலங்களிலிருந்தும்
உருக்கம் மற்றும் நப்பாசையிலிருந்தும் தப்பிப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
பக்தி
ஏக்கம்
சரணாகதி
யாசகத்தை எல்லா நிலைகளிலும் மறுப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
நவீன மடங்களிலிருந்தும்
சதா நம்மை
துன்புறுத்தும் ஏக்கங்களிருந்தும் துண்டித்துக்கொள்வது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
காலை மாலை இரவு
கிழமைகளை குழப்பிக்கொள்ளாமல் இருப்பது.
அம்மா அப்பா அப்பப்ப்பா அம்மம்மாக்களின்
நினைவேக்கத்திலிருந்து நகர்வது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
அந்தி தரும் அர்த்தமில்லாத துக்கத்தைப் போக்க
ஒரு காஃபி போதுமென்று அறிவது.
இளையராஜாவிலிருந்து வெளியேறுவது
ரம்பத்தை நக்கிக்கொண்டே ரத்தத்தையும் சுவைத்துக்கொண்டிருக்கும்
நாயின் அவலத்திலிருந்து சற்றாவது பரிணமிப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
தழும்புகளை தற்புகைப்படங்களாக்கி உலவ விடாமலிருப்பது
நேசப்பெயர்களை பச்சைக்குத்திக் கொள்ளாமல்
சிகரெட்டால் முழங்கைகளைச் சுட்டுப் புண்ணாக்காமல் இருப்பது.
இளையராஜாவிலிருந்து வெளியேறுவது
கள்ளக்கண்ணீர் தொடர்ந்து திரவமாய் நம் கண்ணில்
அணைகட்டி இருப்பதை தாட்சண்யமே அற்றுப் பார்ப்பது.
துணை ஒன்று இருந்தால் தேறிவிடலாமென்ற நம்பிக்கைக்கு விடைகொடுப்பது.
இளையராஜாவிலிருந்து வெளியேறுவது
நிராசைகளைக் கூட்டிப் பெருக்கி
போகியன்று கொளுத்துவது
தற்கொலைகளைக் கொண்டாடாடமல் இருப்பதற்குப் பழகுவது.
இளையராஜாவிலிருந்து வெளியேறுவது
உணர்ச்சிகள் நடத்தும் நாடகங்களிலிருந்து உருவிக்கொள்வது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
ஒருதலைக் காதலுக்கு சீக்கிரம் விடைகொடுப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
குழந்தைகள் நம்மைச் சுரண்டுவதையும்
அம்மா அப்பாவை
நாம் சுரண்டியதையும்
அப்பட்டமாக உணர்தல்.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
பெற்றவர்களையும்
தாத்தா பாட்டியையும்
அயோக்கியர்கள் என்றும் அறிதல்.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
நமது பூர்விக நிலங்கள்
மலைகள்
நதிகள்
சமவெளிகள்
அனைத்தும் பறிபோய்விட்டன என்ற
மெய்யுணர்வில் திளைப்பது.
ஊர்நினைவுகளைத் தூக்கிவைத்துவிட்டு
சென்னைக்குப் பேருந்தேறுவது.
பண்டிகைகளுக்கும் திருமணங்களுக்கும்
ஓயாமல் ஊருக்குச் செல்வதைத் தவிர்ப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
சோழநாடு பாண்டிய நாடு என்ற வரலாற்று பிரமைகள்
எல்லாம்
ஒரு புரோட்டாவை வாங்கவும் உதவாதென்ற போதத்தின் படியில் ஏறுவது.
நாளெல்லாம் மடிகணினியைத் தட்டிப் பிழைக்கும் பிழைப்பின் இறுதியில்
சில பாடல்களைக் கேட்டு
பெருங்காதலனாகவும்
பெருங்கலைஞனாகவும்
தியாகியாகவும்
உணரும் ஃபீலிங்சை
கருணையின்றி விசாரிப்பது.
இளையராஜாவிடமிருந்து விடுபடுவது
ஏமாற்றிய காதல்களைச் சுற்றி
தொடர்ந்து வரையும்
நம் புனிதச் சித்திரங்கள் மீது
புகைவிட்டபடியே ஒன்றுக்கடிப்பது.
இளையராஜாவிடமிருந்து விடுபடுவது
நமது கல்லீரல்களைப் புதுப்பிப்பது
பழக்கங்களின் பாசியில் வழுக்காமலிருக்க
ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவுவது.
இளையராஜாவிடமிருந்து விடுபடுவது
தொடர்ந்து புறக்கணிப்பவர்களின் நட்பைத் துண்டிப்பது.
இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது
காதலியையும் காதலனையும் மானசீகமாய் கொன்றுவிட்டு
குற்றவுணர்வின்றி தேநீர் அருந்துவது.
இளையராஜாவிடமிருந்து விடுபடுவது
போதை மறுவாழ்வு சிகிச்சைகளிலிருந்து தப்பிப்பது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
மனத்தின் காம பாலுறுப்புகள் மீது தினசரி ஒருமுறையாவது
நமக்கு நாமே திட்டத்தில் உதைத்துக்கொள்வது
சல்லாபத்திலிருந்து விடுபட்டு சரியான நேரத்தில்
குறிகளுக்கு அதற்குரிய வேலையைக் காட்டுவது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
குறைந்தபட்சம் மூலதனம் பாயும் வழிகளைப் பசப்பாமல் புரிந்துகொள்வது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
அன்பு காதல் கோயில் எல்லாம்
பெருமுதலாளிகள் நிர்வகிக்கும் கடைவீதிகளென்று
புரிந்துகொள்வது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
நமது உள் அம்மணத்தை உணர்வது
உள்ளாடைகளின் மென்மையும் பூக்களும் அதிகரிக்கும்போதே
குடிநீரின் விலை அதிகரிப்பதைப் பார்க்க முடிவது.
இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது
குறைந்தபட்சம்
ரஹ்மானையும் யுவன் ஷங்கர் ராஜாவையும் அனிருத்தையும் கேட்கத் தொடங்குவது…
இளையராஜாவிலிருந்து வெளியேறுவது
இசையோடு நாம் சுமந்த
அனைத்துக் குப்பைகளையும்
எல்ஐசி கட்டடத்தின்
பதினைந்தாவது மாடியிலிருந்து தூக்கிப்போடுவது.
000
(மிஷ்கினுக்கு)
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments