ஷங்கர்ராமசுப்ரமணியன்
பொருள் மதிப்பில் பார்த்தால் சீக்கிரத்திலேயே வாடிவிடக்கூடியதும் அதேவேளையில் பேரழகும் நுட்பமும் கொண்ட வடிவங்கள் மலர்கள். எத்தனை கலைஞர்களை, மெய்ஞானிகளை, கவிஞர்களை அவை ஈர்த்திருக்கின்றன?
“உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளி யிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளரு கின்றன எனப் பாருங்கள்” என்று மலர்களைப் பார்த்து வியந்திருக்கிறார் கிறிஸ்து. புத்தர் ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தபடி சீடன் மஹாகாஷ்யபனுக்கு ஞானத்தைக் கடத்தியது தாமரையை உயர்த்திக் காட்டியபடிதான். மலர் வழியாகக் கடத்தப்பட்ட அந்த ஞானம்தான் 28 குருக்களுக்குக் கைமாறி ஜென் ஆனதாகச் சொல்லப்படுகிறது.
எல்லாக் காலத்திலும் அனைத்து மொழிகளிலும் இலக்கியத்தின் நிலையான உருவகங்களை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே வகுக்கிறார். காலம்–நதி, வாழ்வு-கனவு, மரணம்–உறக்கம், நட்சத்திரங்கள்–கண்கள், மலர்கள்-பெண்கள்.
கவிஞர் தேவேந்திர பூபதியின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘வாரணாசி’யில் உள்ள ‘கண்மலர் கண்டவன்’ கவிதை கண்ணையும் மலரையும் சேர்த்து கண்மலராகப் பார்க்கிறது. ‘கண்மலர்’ கண்டவனின் நிலையைப் பேசுகிறது. கண்மலர் என்ற சேர்க்கையில் பெண்ணின் கண்கள் அந்தக் கவிதையில் தோற்றம் கொள்கின்றன. பெண் கடவுள் சிற்பங்களின் கண்களும் கண்மலராகச் சொல்லப்படுகின்றன. நேசத்துக்குரியவளின் கண்ணில் மூழ்கிவிட்டால் தனிச்சுயம் என்பதே மறைந்துவிடும் என்பது சூபிகள் விடுக்கும் செய்தி.
மலர்கள் பூமியிலே பிறந்தாலும் பூமிக்கு அப்பாலான தன்மையையும் வெளிப்படுத்துபவை. ரூபமெடுத்திருந்தாலும் முழுக்க ரூபமாகாத தன்மையை இங்கே காண்பிப்பவை. அங்கேதான் பெண்களின் கண்களும் மலராகின்றன. வடிவமெடுத்ததற்கும் வடிவெடுக்காததற்கும் நடுவிலுள்ள பாலத்தில் நடக்கும் அரூபத்தன்மை கொண்டவர்களாக பெண்களை ஆக்குவது அவர்களது கண்மலர்கள்தான். அநித்தியத்துக்கும் நித்தியத்துக்குமிடையே செய்தி சொல்லிக்கொண்டிருக்கும் அந்தக் கண்மலரை உற்றுநோக்குவது நான்காம் பரிமாணம் என்று இந்தக் கவிதையைத் தொடங்குகிறான் கவிஞன்.
புல்லிவட்டம் சிந்தி, வாடும்போது அதன் துயரத்தையும் அனுசரிக்கும்போதே, இன்னும் ஒரு நூறு பூக்கள் பூக்க நிலம் கடந்துபோகும் மகரந்தப் பூச்சிகளையும் பார்க்கச் செய்கிறான். வாடுவதையும் மலர்வதையும் அடுத்தடுத்தே பற்றற்றுப் பார்ப்பவன் என்ன ஆவான்? ஒரு மலரைச் சரியாகப் பார்ப்பவர் என்ன ஆவாரோ அதுவாக மாறுகிறார்.
எப்போதும் மலர்களுக்கு அருகில் / கண்ணுக்குத் தெரியா துறவிகள் அமர்ந்திருக்கிறார்கள் / மலர் போன்றவர்கள் / நீர்நிலைகளின் மீதும் நடக்கிறார்கள் / விதையோ புல்லிவட்டத்தில் பெருக்கிறது.
ஒரு புராணிக ஓவியத்தின் சிறந்த கற்பனைக் காட்சியாக உள்ளது. மலர்களுக்கு அருகில் தன்னைத் தெரியாமல் ஆக்கும் துறவிகள் மட்டுமே அமர்ந்திருக்க முடியும். ஒரு மலரைப் பற்றாமல், உடைமையாக்காமல், அத்துமீறாமல் பார்க்கும் பரிமாணம்தான் நான்காம் பரிமாணமா?
நீர்நிலைகள் மீது நடக்கும் தேவ தூதர்கள் என்று மலர் போன்றவர்களைச் சொல்கிறாரா கவிஞர்? மணிமேகலை காலத்திலிருந்து அத்துமீறப்படும், ஆட்கொள்ளப்படும் துயரத்தைச் சுமக்கும் நிகர்மலர்களின் துயரத்தையும் அழகையும் இக்கவிதை பேசுகிறது என்று புரிந்துகொள்ளலாமா?
பிறப்புக்கு ஆதாரமான விதையோ பூவுக்கு மிக அருகே சற்று இடைவெளியில் பெருகிக்கொண்டே இருக்கிறது. அழகை எதிர்கொள்ளும் அணுகுமுறையில் துறவும் ஒன்றாக இருக்கக்கூடும்.
கண்மலர் கண்டவன்
ஒரு மலரைப் பார்த்துக்கொண்டிருப்பது
உற்றுநோக்கலின்
நான்காம் பரிமாணம்
அது மாலையாகி
ஒளி மலரைக் காற்று மலரை
சத்தம் மலரை நிலம் மலரை
செடி மலரை
அசைத்துப் புல்லிவட்டம்
சிந்துவது
கண்களின் சிமிட்டல்
அது வானம் நோக்க
அது என்ன துயரம்
வர்ணங்கள் இசைக்கும் நாளில்
இன்னும் பல மொட்டுகள்
அதன் மகரந்தப் பூச்சிகள்
நிலம் கடந்துபோகும்
அத்துவான வெளி
கண்மலர் கண்டவன் இமைகளை மூடுகிறான்
சொற்களை மலர்களைப் போல மலர்த்துகிறான்
எப்போதும் மலர்களுக்கு அருகில்
கண்ணுக்குத் தெரியா துறவிகள் அமர்ந்திருக்கிறார்கள்
மலர் போன்றவர்கள்
நீர்நிலைகளின் மீதும் நடக்கிறார்கள்
விதையோ புல்லிவட்டத்தில் பெருக்கிறது.
Comments