Skip to main content

பூபேன் கக்கர் எழுதிய போரன் சோப் என்னும் கதை உயிர் குறித்து...


ஷங்கர்ராமசுப்ரமணியன்



பயமும், வன்மமும், கழிவிரக்கமும், தனிமையும், அதனால் அதிகாரத்தாலும் கொலைத்திட்டங்களாலும் மூடுண்டுள்ளது நமது காமம். வரலாற்றில் நெடுங்காலமாய் அது தீண்டாமைக்கும், ஒதுக்கலுக்கும் உள்ளாகி வருகிறது. நாளும் பொழுதும் தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கும் தோல் நோயைப்போல் சதா நச்சரித்து தன் இருப்பைத் தெரிவித்தபடி நம் உறக்கத்திலும் தொடர்வதாய் இருக்கிறது. மண்ணுளிப் பாம்பை ஒத்த அதன் குருட்டுக் கண்களுக்கு நம்மை ஜீவிக்கச் செய்யும் சக்தியும் உண்டு. அதனால் அதை ஒருபோதும் குற்ற விசாரணைக்குட்படுத்த இயலாது. ஆனாலும், அதற்கு தணிக்கையின் விஷத்தை எத்தனை நாள் தான் உணவாகத் தந்து போஷித்துக் கொண்டிருக்கப்போகிறோம்.

போரன் சோப் கதை வீடுகளுக்கு இடையே தண்டனையின் அச்சப் பனிக்குள் மறைந்திருந்த என் குறியை குற்றநீக்கம் செய்கிறது முதலில். விரைப்பும் தளர்வுமான அதன் மாறாத அன்றாடத்தின் அலுப்பை நீக்கி எனது ஆசையின் விறைப்பை காலாதீதத்துக்குள் காதலாய் செய்கின்ற வித்தையைச் செய்கிறது போரன் சோப். எனது குறியின் விரைப்பு உள்திரும்பி ஒரு பாடலாய் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குப் பரப்பும் சுமையின்மையின் தருணம் அது. உடைமைகள், உடைமைகளைப் பராமரிப்பதற்காக உழைப்பு என்ற நுகத்தடியின் கீழ் காலமாகிவிட்ட உடலுக்கு காமம் என்பது இன்றைக்கும் குணமூட்டிதான்.

மனத்தளம், உடல்தளம், சமூகத்தளம், மதிப்பீட்டுத்தளம் என்ற பிரிவினைக் கச்சாத்துகள் அனைத்தும் காலாவதியாகி உள்ளது. எல்லா தளத்திலும் ஒடுக்கிய காமம் தான் ஒரு சுண்டெலி போல் நசுங்கி கீச்சிட்டுக் கொண்டே இருக்கிறது. சுண்டெலி கீச்சிடல் தான் மெய்மை. அந்த சத்தத்தினை மறைக்கத் தான் மதம், நிறுவனம், அரசு போன்ற எல்லா கேந்திர அதிகாரிகளின் கூச்சல் எல்லாம். தினசரி ஒரே காலையில் எழுந்தரித்து மாறாத கிழமைகளுக்குள் அலுவல்களுக்கு நகர, காமத்தை பூப்போட்ட வண்ணச் சட்டை போல் நாம் ஏன் வெளிப்படையாக அணிந்து கொள்ளக்கூடாது
 
குறுக்கு நெடுக்கான உறவுகளை வரைமுறையற்றத் தொடுதல்களை காதல் பேச்சுகளை தாபக் கிசுகிசுப்புகளை ஒரு ஜிலேபி போல பாவ் போல மேல் தளத்திலேயே ஏன் நாம் விநியோகிக்கக்கூடாது. (பூபேன் கக்கர் விவரணை மற்றும் உரையாடல் வழியாக மேல்தளத்திலேயே வெண்ணையை சிலும்பித் திரளச் செய்கிறார்) நான் ஒவ்வொரு நாள் இரவும் புரோட்டாவை, யதார்த்தத்தின் மேஜையில் பிய்த்து சால்னாவில் தோய்த்து உண்டு, காமத்தை ஒவ்வொரு நாளும் வெறும் படிமார்த்தமாகவே சுகித்து, பீகழித்து கொண்டிருக்கப்போவது எத்தனை நாளுக்கு. தன்னிலை மறக்க என்னைத் தவிர பிறிது என்பதைக் காண காமம் தவிர வேறென்ன வஸ்து இவ்வுலகில் இருக்கிறது. பிறிதைத் தொடும்போது உன் விரல்களில் படரும் வண்ணப்பொடியை தவிர, உன் உடலில், உனக்கு அளிக்கப்பட உடலில், வண்ணங்கள் ஏதாவது மீந்துள்ளதா? உன் நெஞ்சைத் தொட்டுச் சொல் வாசகா?

உன் மனைவியுடன் கூடும்போது எதிரே இருக்கும் கண்ணாடியைப் பார்த்துப்புணர். அப்போது நீ உணர்வது மேஜிக்கல் புணர்ச்சி. நீ பிறிதோடு கொள்ளும் புணர்ச்சி தான். அங்கே உனக்கு தெரிந்த அவளும் இல்லை. அவளுக்கு தெரிந்த உன் தொந்தி நிர்வாணமும் இல்லை.

படுக்கையறைகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு நீண்டகாலமாகிவிட்டது சகோதர சகோதரிகளே. ஜன்னல்களின் வெறித்த விழிப்புகள் எல்லாம் வெயிலுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது அதைத்தான். திரைச்சீலைகளை உற்றுப் பார்க்காதீர்கள். கட்டில்களில் புணர்ச்சியே நடப்பதில்லை. வீடுகள் மரணித்துப் போனதை அறிவிக்கலாம் இப்போது.


தமிழில் நவீனத்துவ கதைகளாக இருப்பினும் சரி, அதற்குப் பின்னுள்ள கதைகளாக இருப்பினும் சரி, தமிழ்ச் சமூகம் காமத்தின் மீது கொண்டிருக்கும் தணிக்கையையும், அச்சத்தையும் இறுக்கத்தையும் பிரதிபலிப்பவை. அல்லது காதலின் புனிதக் கருத்தியலை அபத்தமோ, நகைச்சுவையோ அற்று அனுசரிப்பவை. மேம்போக்கான சீண்டலோ பகடியோ கூட அபூர்வமானதே. ஏனெனில் யதார்த்தத்தை நாம் கருத்தளவில் மறுத்தாலும் யதார்த்தத்தின் முதல் தகவல் அறிக்கை இல்லாமல் புனைவைப் பதிவு செய்வது நமக்கு சாத்தியமே இல்லை. அதனாலையே காமத்தை தடித்த புனைவேயற்ற கல்யாண ஜமுக்காளத்துக்குள் சுருட்டிக் கட்டி இறுக்கி வைத்துள்ளோம்.

போரன் சோப், எல்லாரும் உபயோகப்படுத்தும் மறு உற்பத்தியே செய்ய முடியாத மறைந்து போகும் கடவுளைப் போன்ற காமத்தின் ஆன்மீகத்தைப் பேசுவதுதான். மற்றதைக் கவனிப்பதற்கு காமமும் ஒரு வழிமுறை தான். நமது, நமது உடல், நமது வீடு என்பதைச் சுற்றி நாம் தலைகீழ் குடைபோல் அணிந்திருக்கும் உடையை நடனத்தில் சுழற்றி சில மாயத் தருணங்களாவது நம் உடலை எறிவதுதான்.

பூபேன் கக்கரின் கதையில் வருபவர்கள் நம்மைப்போல பரிபூர்ணமற்ற குறை உயிர்கள். நாய்களைப் போல், கழுதைகளைப் போல, நண்டுகளைப்போல. முழுமை, மையம் என்ற நிலையிலிருந்து மனுஷனை நகர்த்தி விடுவதே ஒரு வகையில் அவனை அதிஉயிரியாக்கும் விடுதலைச் செயல்பாடுதான். (ஜே.ஜே. போன்ற தமிழ் படைப்புகள் மனிதனை கடவுளாக்க முயல்கின்றன. மிகக் கூடுதலான பொறுப்பு!!!) காமம் அவனுடைய உயிர் அலுப்பிலிருந்து விடுபடச் செய்து அவனை ஒளியுடல் கொள்ளச் செய்கிறது. காமத்தை இடம்பெயர்ப்பதான தற்காலிக ஏற்பாடுதான் நாம் கண்டுபிடித்திருக்கும் பிரமாதமான உணவுகளும், இனிப்புகளும். இதைத் தொட்டு விலகிச் செல்வது தான் அந்த குறைஉயிரின் அல்பத்தனமும். பழியும் வன்மங்களும். பிறப்பு இறப்பு இரண்டுக்கும் நடுவில் பொயிப்பட்ட சாண்ட்விச் தான் அந்த குறை உயிர்.

என் உள்திரும்பிய காம உறுப்பின் விரைப்பில் அது உலகெங்கும் இசையைப் பரப்பும் போது, நேர்த்தியற்று சில தருணங்களில் பிறரை தன் விரைப்பால் முட்டி ஒரு சிரிப்பைப்போல் ஒரு முரட்டு மலரைப்போல தன் இருப்பைத் தெரிவிக்கிறது. ஒரு மூலையில் சேரும் அதிகாரத்துக்கு சலிப்புக்கு, வெற்றிகளுக்கு, மரணத்துக்கு நம் காதலின் நீண்ட விரைப்பு எப்போதும் எதிர் திசையிலேயே இருக்கும். ஆத்மாநாமின் முத்தம் கவிதை முத்தத்தை எல்லா இடங்களிலும் நிகழ்த்தி முத்தத்தை விடுதலை செய்வதுபோல் சாகசத்தைச் செய்வது போரன் சோப்.

(புனைகளம்)

Comments