Skip to main content

ஷங்கரின் திரைப்படத்தில் கதாநாயகியின் மரணம்



நண்பனை முன்வைத்து சில ஆய்வுக்(!) குறிப்புகள்

உறங்காப்புலி



நண்பன் படம் பார்த்து முடித்தபோது சமச்சீர் கல்வி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து முதல் படிப்பின் அழுத்தம் தாளாமல் சமீபத்தில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவனைப் பற்றிய செய்திகள்  எல்லாம் எனக்கு ஞாபகத்தில் வந்துபோனது. இந்தியாவில் குழந்தைகளின் பிரத்யேக படைப்பூக்கத்தை ஊக்குவிக்காத கல்வி அமைப்பு, எல்கேஜி முதல் உயர்கல்வி வரை மனப்பாட இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவது வரை எல்லாவற்றையும் சிறப்பாக நண்பன் படமே பேசிவிட்டது. ஆனால் நண்பனை முன்னிட்டு எனக்கு ஏற்பட்ட ஏமாற்ற அம்சம் குறித்து மட்டும் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். 
ஜெண்டில்மேன் படத்திலிருந்து ஷங்கரின் சினிமா என்னும் பிரமாண்டமான விருந்துச் சாப்பாட்டைச் சுவைத்தவர்களுக்கு  அவரது கதாநாயகிகள் மற்றும் தனிப்பாடல் நாயகிகளின் முக்கியத்துவம் என்னவென்று நன்றாகவே உணர்வார்கள். ஜெண்டில்மேனில் தேசலான, இழுத்துப் போர்த்திக் கொள்ளும் கட்டுப்பெட்டி நாயகியாக மதுபாலா வந்தாலும், டெல்லியிலிருந்து வரும் பெண்ணும், சிக்குபுக்கு கௌதமியும் தீபாவளிப் பட்டாசாக காமத்துய்ப்பை வழங்கத் தவறவில்லை. ஷங்கரின் பிரம்மாண்ட கதை நிலவெளியில் பார்வையாளனுக்கு சாகச,கிளர்ச்சி அனுபவத்தைத் தரக்கூடிய அம்சமாக பெண் உடல்களும் தொடர்ந்து கூடவே பயணிப்பவைதான்.

ஜெண்டில்மேனுக்கு அடுத்து காதலனைப் பொருத்தவரை ஹீரோயினாக வரும் நக்மாவை நாம் கதாநாயகன் என்றே சொல்லவேண்டும். துப்பாக்கி தூக்கிவந்து குறிவைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா என்றும் முசக்குட்டி தேடிவந்த கோபாலா அதை மூடிபோட்டு வெச்சிருக்கேன் கோபாலா என்று பாடி பிரபுதேவாவை நக்மா நாயகியாக்கி விடுவார். அந்த வகையில் தனது மூர்க்கமான பாலியல்பைக் கொண்டே ஆதிக்கம் செலுத்தும் வலிய ஆணாய் நாயகியைப் படைத்த முன்னோடி நமது ஷங்கர். அதற்கு முன்பெல்லாம் கவர்ச்சிப் பாடல்களில் ஆடும் ஜெயமாலினி போன்றவர்களை பக்கவாட்டாக மட்டுமே தமிழ்த்திரை அனுமதித்து வந்ததை மீறிப் புதுத்தடம் போட்டவர் ஷங்கர்தான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சீரற்ற உலோக சப்தங்களின் வழியாக தறிகெட்ட பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கியதும் நக்மாவின் உடலின் மீதுதான் என்பதை நாம் கவனித்தே ஆகவேண்டும். இந்திய நிலவெளியைத் தாண்டி கனவுகள் முடிந்த இடத்தின் படிமமான கௌபாய் பாலைவன வெளியை ஏ.ஆர்.ரஹ்மான் நக்மாவின் உடல்வழியாகவே இசையில் நிகழ்த்தினார். அதற்குப்பிறகு அதேபோன்ற தாறுமாறான எந்திரங்கள் குரலோடு புரளும் இசையையும் பாடல்களை சிவாஜியில் தான் அதிகமாகப் பயன்படுத்தினார். ஸ்ரேயாவின் முப்பரிமாண தேகத்தின் புதிர் வசீகரம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அந்த பைத்திய சாத்தியத்தை அளித்தது.
 காதலனை அடுத்து வந்த இந்தியனில் இந்தியன் தாத்தா அறிந்திருக்கும் வர்ம பிரதேசங்கள் அளவுக்கு ஊர்மிளாவும், மனிஷா கொய்ராலோவும் படமெங்கும், லஞ்ச ஊழல் தொடர்பாக மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் குளிரவைப்பவர்களாக முக்கியமான பங்கை பூத்தூவி ஆற்றினார்கள். முதல்வன் படத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

பாய்ஸ் படத்திலும், அந்நியன் படத்திலும் தனது பாதையில் கொஞ்சம் வழுக்கினார் ஷங்கர். அதீத பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துவதில் நாயகியின்  மரணம் இப்படித்தான் நிகழ்ந்ததா தெரியவில்லை. பாய்சில் லூசுப்பெண்ணாக நமது மனதில் பதிந்த ஜெனிலியா இதுவரை அந்தப் படிமத்திலிருந்து விலகவேயில்லை. அந்நியன் படத்தில் மதுபாலா போலவே சதா, பிரம்மாண்டத்தின் முன் மடிந்த கதாநாயகியாகத் துவண்டு போனாலும் காதல் யானையாய் நடனமாடிய யனாகுப்தா ஷங்கரின் பிரம்மாண்டத்தை ஈடுகட்டினார்.
 ஜீன்சையும், எந்திரனையும் விட்டுவிட்டேன். ஐஸ்வர்யா ராய் பற்றி வைரமுத்துவே சொல்லிவிட்டாரே, அவர் ஏழு அதிசயங்களுக்கு அடுத்த அதிசயம் என்று..ஐஸ்வர்யா ராயைப் பொருத்தவரை அவர் முப்பரிமாண அழகு என்றே எனக்கு முதலில் இருந்து தோன்றவில்லை. ஆனால் மிக அழகிய மெலடிகளை அவரது உடல் உருவாக்கியிருக்கிறது. கொடுத்து வைத்த கொலூசே கால் அழகைச் சொல்வாயா என்று வைரமுத்துவை உருகவைத்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் பார்வையாளருக்கு ஒரு கட் அவுட்டாகவே அந்நியமான பொம்மையாக இருக்கிறார். பார்வையாளனுக்கு ஐஸ்வர்யா தனது திறப்பு எங்கேயென்று தெரிவிப்பதேயில்லை. உறவுகொள்வது, ஈடுபடுவது போன்ற கற்பனை சாத்தியங்களை அவர் பார்வையாளனுக்குத் தரத் தொடர்ந்து மறுத்துவருகிறார்.  எவ்வளவுதான் அழகாக இருப்பினும் தேவசொரூபத்தை என்ன செய்துவிட முடியும். தேவசொரூபத்திடம் ஏற்படும் அலுப்பு ஐஸ்வர்யாராயிலும் ஏற்படுவது இயல்பே.
ஷங்கரின் முழுமையான கதாநாயகி என்றால் அவர் சிவாஜியில் நடித்த ஸ்ரேயாதான். கட்டுப்பெட்டித் தனம், ரகசிய உறவுக்கான கள்ளத்திறப்பு இரண்டையும் வைத்திருப்பவை அவரது கண்கள்.  
நண்பன் படத்தைப் பொருத்தவரை கதாநாயகி என்று இலியானாவின் பெயரைப் போட்டிருந்தார்கள். ஆனால் ஒரு ஒல்லியான உருவம், மலேரியாவிலிருந்து மீண்டு திரைக்குள் நுழைந்ததைப் போல கதாநாயகியின் உடையுடன் சில சேஷ்டைகளைச் செய்து திரையிலிருந்து நீங்கிப்போனதான ஞாபகம் மட்டுமே உள்ளது. நாயகி இலியானாவை விட பார்வையாளனை அவரது அக்காவாக வரும் அனுயாவே நிச்சயம் ஈர்த்திருப்பார். ஷங்கர் எங்கே கோட்டை விட்டார்?
 ஷங்கரின் படத்தில் இதுவரை கதாநாயகி இறந்துபோனதில்லை. நண்பன் அந்த துக்கத்தை எனக்கு கொடுத்தது.

Comments