ஷங்கர்ராமசுப்ரமணியன்
சமீபத்தில் மதுரையில் தேவதச்சனுக்கு நடைபெற்ற விளக்கு விருது விழாவில் தேவதச்சனின் கவிதைகள் குறித்து சுந்தர்காளி பேசும்போது, இந்த நூற்றாண்டில் தற்காலிக மகிழ்ச்சிகள் உண்டு, விடுதலை கிடையாது என்று கூறினார். அவர் அப்படிச் சொன்னது என்னைத் தொடர்ந்து கிளர்த்தியது. எல்லாக் காலமுமே சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் நெடிய சிறையுமாகத் தான் வாழ்வு, மனிதனுக்குத் தோற்றம் தந்திருக்கும் என்றே எண்ணத் துணிகிறேன்.
வாழ்வென்னும் நெடிய சிறையிருப்பை வாழ உகந்ததாக மாற்றுவதில் காதலுக்கும், காமார்த்தத்திற்கும் பிரதானப் பங்கிருக்கிறது. ஒருவகையில் படைப்புகளுக்கு உந்துதலாக இருப்பதும் காமார்த்தமாகவே உள்ளது.
மற்றதின் துணை இருப்பில் மகிழ்ச்சி கொள்வது, மற்றதின் புதிரை அறிய விழைவது, புதிரான மற்றதோடு ஈடுபடுவதும் முரண்படுவதும், மற்றதை வரையறுக்க முயல்வது, மற்றதை வெறுப்பது, மற்றதுக்காக தன்னையோ, மற்றதையோ அழிக்கவிழைவது என அனைத்தையும்ம் காதலின் வழியாக மனித உயிர்கள் காலம் காலமாக சலிக்காமல் அரங்கேற்றி வருகின்றன.
இந்த சலிக்காத விளையாட்டையே 'காதலில் சொதப்புவது எப்படி' சினிமா, நவீன கால தகவல் தொடர்புசாதனங்கள் மற்றும் அரங்கக்கூறுகளோடு தீராமல் வரையறுக்கவும் புரிந்துகொள்ளவும் முயல்கிறது.
ஒரு பதிண்வயது யுவதியை எத்தனை விருப்பத்துக்குரியவளாக இருக்கிறாளோ, அத்தனை அச்சத்துக்கும் உரியவளாகவே சமூகம் அவளைக் கருதுகிறது. இப்படத்தின் நாயகன் மட்டுமின்றி நண்பர்கள், பெற்றோர்கள், துணைக்கதாபாத்திரங்கள் அத்தனையும் பெண்மையின் ஆட்சிக்குடைக்குள், ஆதிக்கத்திற்குள் தங்களை ஒப்புவித்தவர்கள். அந்த வகையில் நவீன பெண்மைக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரிப்யூட்டையும் செலுத்தியுள்ளது.
வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாக இருக்கும் பெண் எப்போது புரியமுடியாதவளாக ஆகிறாள்? எப்போது நேசம் கொள்வாள்? எப்போது சினம் கொள்வாள்?. தெரியாமையின் முதல்படியில் நிற்கும் ஒரு இளைஞனின் முதல் காதலும் திகைப்புகளும் சின்னஞ்சிறிய நெருக்கடிகளும் தான் பார்வையாளனுக்கு சோர்வைத் தராத விதத்தில் இப்படத்தில் திரைக்கதையாக நெசவு செய்யப்பட்டுள்ளது.
புலவி, ஊடல் என திருக்குறள் காலத்திலிருந்து தொடரும் அம்சத்தை, தற்கால ஆண், பெண் உறவுகள் தொடர்பான தீர்க்கமான பார்வையுடன் முன்வைப்பது தான் இத்திரைப்படத்தை முக்கியமான அனுபவமாக மாற்றுகிறது.
பெற்றோரின் சண்டை, பிரிவினூடாக வளர நேரும் கல்லூரி மாணவியாக அமலா பால் தான் நாயகி பார்வதி. இதனால் இயல்பாகவே காதலனைத் தொடர்ந்து சோதித்து தனக்குரியவனா என்று கடுமையான உடைமையுணர்வுடன் பாதுகாப்பின்மையையும் அவனிடம் வெளிப்படுத்தியபடியே இருக்கிறாள் பார்வதி. பார்வதியின் குண இயல்பை உலகப்பொதுத் தன்மையாகவும் மாற்றி பார்வையாளனை தனது காதலி என உணரவைப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
அன்பான பெற்றோரின் சௌகரியமான மகன் அருண். இப்பாத்திரத்தை சித்தார்த் செய்துள்ளார். அவனுக்கு பார்வதியைச் சந்திக்கும் வரை வாழ்க்கை தொடர்பாக சின்னக் கசப்புகள் கூட இல்லை. வழக்கம் போல கல்லூரியில் பார்த்து பெரிய சிரமங்கள் ஏதுமின்றி பார்வதியுடன் காதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆனால் காதல் உறுதியானவுடன் அதை நிலைக்கச் செய்ய பெரிய பிரயத்தனங்கள் ஏதும் இல்லாமல் போகிறது. அது தொடர்பாக அவன் செய்யும் சின்னச் சின்ன புறக்கணிப்புகள், ஊடல்கள் வழியாக காதல் ஒரு நாள் முறிகிறது. சில, பல பிரயத்தனங்களுக்குப் பிறகு அருணும் பார்வதியும் சேர்கின்றனர். அதைப்போலவே சில, பல பிரத்தயனங்களுக்குப் பிறகு பார்வதியின் நாற்பதைக் கடந்த அம்மாவும், அப்பாவும் சேர்கின்றனர். இந்த சின்ன,பெரிய பிரத்தயனங்களே வாழ்க்கையை நேராக்கவும், தலைகீழாக்கவும் செய்கின்றன என்பதை மிக லேசான தொனியில் சொல்கிறது காதலில் சொதப்புவது எப்படி?
நாயகி பார்வதிக்கு எப்போது கனிவு வரும். கனிவு திடீரென்று முற்றி எரிய எப்போது கோபமாகும் என்பதை எப்போதும் ஊகிக்க இயலாத அருணின் தவிப்பும்,அலைக்கழிப்பும் தான் மிக அழகானது. 2000 ஆண்டுகளாக காதலில் உள்ள, திருமண உறவில் புதிதாக நுழையும் பெண் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் இந்த கோப அம்சத்தைப் புரிந்துகொள்ளவும் வரையறுக்கவும் எத்தனையெத்தனை இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. பொருட்கள் மிகவும் நவீனமாகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத்தின் பரிமாணம் எங்கேயோ போய்விட்டது. ஆனால் தூரத்திலிருந்து காண்கையில் மலைபோன்று பிரம்மாண்டமாக அச்சுறுத்தியும், அருகில் நெருங்கித் தொட்டால் இறகு போல் கைக்குள் துவண்டும் போய்விடும் கோபம், காதலியிடம் தொலையவேயில்லை. ஊடல், நவீன உடைகள், சாதனங்கள் வழியாக அதே நுட்பத்துடன் தொடரவே செய்கிறது.
ஒரு நுண்ணிய வேலைப்பாடுள்ள ஆபரணம் போலவும், ஆயுதம் போலவும் ஒரே வேளையில் திகழும் ஊடலும், பிணக்கும் அமலாபாலின் முகத்தில் அட்டகாசமாக வெடிக்கின்றன. பார்வதியின் சடைப்பின்னலும், முகத்துக்கு மேலே கூர்மையாக பிரிபிரியாகத் தொங்கும் முடியும்( நண்டு...காதல் நண்டு) அவரை அச்சுறுத்தும் பெண்மையாக அழகாக மாற்றுகிறது.
அருண், பார்வதியைத் தவிரவும் வகுப்புத் தோழர்கள், பெற்றோர் என எல்லா இடத்திலும் சின்னச்சின்ன உறவுகள், துண்டிப்புகள் என இன்றைய நவீன வாழ்க்கைக்கேயுரிய நீடித்த தன்மையற்ற நிகழ்வுகளாக கதையோடு பிணைத்துள்ளார் இயக்குனர். இன்று வாழ்க்கைக்கு, நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு உத்தரவாதமான நீடித்த தன்மை இல்லாதது போன்றே காதலும் நீடித்த தன்மையுடையதல்ல. அதனால் ஒரு காதல் உறவில் ஏற்படும் துண்டிப்பு வாழ்க்கையையே பலியாக கேட்பதும் இல்லை. ஒரு காதலின் துண்டிப்பு இன்னொரு காதலின் சந்தோஷத்திற்குள் நுழைய எந்த தடையும் இன்று இல்லை. ஆனால் காதல் என்ற உணர்வின் விழுமியமும், அழகும் மாறவில்லை.
ஒருவகையில் காதலி கொள்ளும் பிணக்கை கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால் வாழ்க்கையும் நம்மிடம் பிணங்கிப் பிணங்கிதான் கூடுகிறது- பிணங்குதல் இல்லையெனில் காதலில் இன்பத்தை நீட்டிக்க முடியாது என்பதால். ஏனெனில் நாம் அனைவரும் எப்போதும் கீழே இறங்கவேண்டிய சாபத்திற்கு உள்ளானவர்கள். உச்சத்திலேயே இருக்க முடியாதவர்கள் நாம் என்பதால், காதலில் சொதப்பாமல் இருப்பதும் சாத்தியமில்லை, ஆதலினால் காதல் செய்வோம். (காட்சிப்பிழை திரை இதழில் வெளியானது)
Comments