Skip to main content

அழகு சுந்தரம் திரிபுரசுந்தரி

ஷங்கர்ராமசுப்ரமணியன்


நரியும், கொக்கும் பரஸ்பரம் விருந்துவைத்த கதை தெரிந்திருக்கும் உங்களுக்கு. அது ஒரு நீதிக்கதை. ஆனால் அந்தக்கதை குறிப்பிடும் நீதியை மட்டும் கொஞ்சம் விலக்கி வைத்துவிடலாம் இப்போது.

நரியின் பெயர் அழகு சுந்தரம். கொக்கின் பெயர் திரிபுரசுந்தரி. அழகு சுந்தரம் எட்டாத திராட்சைக் கொடிகள் இருக்கும் தோட்டத்துக்கு வயல் வரப்பொன்றின் வழியாக, நாக்கை நீட்டியபடி போய்க்கொண்டிருந்தது. சட்டென்று ஒரு கணத்தில் வெண்கொக்கு ஒன்று வயலுக்கு நடுவில் எழுந்து பறக்க, பச்சைக்கும், வெள்ளைக்கும் ஏற்பட்ட தீவிரமுரணில் வரப்பில் மயங்கி விழுந்தது அழகுசுந்தரம். பிறகு தெளிந்த நரி நண்பர்களிடம் பேசி, தான் பார்த்த கொக்கின் பெயர் திரிபுரசுந்தரி என்று அறிந்துகொண்டது.

அதிலிருந்து தந்திரநரி என்று அழைக்கப்பட்ட அழகுசுந்தரம், அன்றாடம் விரக தாபத்துடன் வயல்வெளிகளில் ஒற்றைக்காலில் தவம் இருக்கத் தொடங்கியது. திரிபுரசுந்தரியும், தன்னை காதலிக்கும் நரியின் பெயர் அழகுசுந்தரம் என்று கேள்விப்பட்டவுடன் உடனே காதலில் விழுந்தது. சுந்தரம்- சுந்தரி என்று தரையில் தனது கூரலகால் எழுதிப் பார்த்தது திரிபுரசுந்தரி.

ஒரு நாள் திரிபுரசுந்தரி, தனது வீட்டுக்கு அழகுசுந்தரத்தை விருந்துக்கு அழைத்தது. அருமையான அரிசியில் இனிப்பான பாயசம் செய்திருந்தது. அழகு சுந்தரமும் ஆசையோடு வந்தது. கொக்கு, தான் குடிக்கும் குறுகிய வாயுள்ள குடுவையில் பாயசத்தை ஊற்றி நரிக்குக் கொடுத்தது. நரியோ ஏமாந்துபோனது. ஆனால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தாத நரி, குடுவையின் திறப்பில் தனது நுழையாத வாயை வைத்து, அருமை அருமை பாயாசம் அருமை என்று பாராட்டியது. திரிபுரசுந்தரியின் அறியாமையை மன்னித்த அழகுசுந்தரம், தன் வீட்டுக்கு ஒருநாள் சுந்தரியை விருந்துக்கு அழைத்தது.

திருடிச் சேகரித்த பழங்களிலிருந்து அரிதானவற்ற ருசித்துப் பொறுக்கி தன்கையால் திராட்சை மது ஒன்றை நரி தயாரித்தது. திரிபுரசுந்தரியும் விருந்துக்கு வாய் ஊற வந்தது. நரியோ தான் சாப்பிடும் தட்டில் மதுவை ஊற்றி தனது காதலியின் முன்வைத்தது. திரிபுரசுந்தரியும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவில்லை. அருமையான மது...அருமையான மது என்று கூறி அலகை நாட்டி பருகுவது போல பாவனை செய்தது.

அழகு சுந்தரத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருமணம் நிச்சயமானது. தேனிலவும் முடிந்தது. அழகு சுந்தரத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் குழந்தைகள் பிறந்தன. அழகு சுந்தரத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் எல்லா தம்பதிகளையும் போலவே திருமணம் புளிக்கத் தொடங்கியது. கூச்சலும் குழப்பங்களும் ஏற்பட்டன. அழகு சுந்தரமும், திரிபுரசுந்தரியும் தங்கள் 25 ஆவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர். இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் என்று அன்றிரவு சொல்லிக் கொண்டனர்.




Comments