ஷங்கர்ராமசுப்ரமணியன்
வழுக்கும்
ஈரமண் பாதை அது. கிடுகிடு
பள்ளங்களூடாக தடுமாறியபடி
நான் நடக்கிறேன். நான்
அந்தக் குழந்தையை என் கையிடுக்கில்
பிடித்திருக்கிறேன். அவள்
ஒரு பொம்மையின் அளவு இருக்கிறாள்.
அவள் உடலுக்குள்
இருதயம் மட்டுமே இருப்பது
போலத் துடிக்கிறது. அந்தத்
துடிப்பு மட்டுமே அதை உயிரென்று
உணரச்செய்கிறது. அந்தக்
குழந்தையை அபாயகரமான இந்த
இடத்துக்கு ஏன் கொண்டுவந்தேன்
என்று ஒரு குறிப்பும் இல்லை.
எனது பராமரிப்பில்
விடப்பட்ட குழந்தை அது.
அதன் பெற்றோர்களுக்குத்
தெரிந்தால் அவ்வளவுதான்.
திரும்ப அந்தக்
குழந்தையை நான் பத்திரமாக
அதன் வீட்டில் சேர்க்கவேண்டும்.
நான் சேற்றில் வழுக்கி
வழுக்கி நடக்கிறேன். என்
கையிலிருந்து நழுவி பாதாளத்தில்
அடிக்கடி துடித்து விழுந்துவிடுகிறது
குழந்தை. நான் பதறி
இறங்கி எடுக்கிறேன். குழந்தை
மண்ணில் விழுந்தவுடன்
'அவ்வளவுதான்'
என்று முனகிப்
புரண்டுவிடுகிறது.
குழந்தையின்
மெல்லிய சருமத்தில் சிறுசிறு
ரத்தக்காயங்கள் கூடிக்கொண்டே
போகின்றன. குழந்தை
என்னிலிருந்து துள்ளி மீண்டும்
மீண்டும் விழுகிறது.
வீட்டுக்குத் திரும்ப
இயலாத குற்றவுணர்வு அதிகரித்தபடி
உள்ளது. போகப்போக
குழந்தை மேலும் மேலும் ஆழமான
பள்ளங்களில் விழுந்து
அவ்வளவுதான் என்கிறது.
குழந்தை
அழவில்லை. ஆனால்
ரத்தம் அதன் மேனியெங்கும்
கசியத்தொடங்குகிறது. நான்
எப்படி அவளது பெற்றோருக்குப்
பதில்சொல்லப் போகிறேன்.
என் கையில் இருந்து
நழுவிவிழுவதற்கான அக்குழந்தையின்
விருப்பம், ஒரு
வன்மம் போல் செயல்படுகிறது.
இக்குழந்தையை
விட்டுப்போகவும் வழியில்லை.
மறுபடியும் பள்ளத்தில்
விழுந்துவிட்ட குழந்தையை
ஈர நசநசப்புடன் எடுக்கிறேன்.
வானம்
இருண்டு வந்தது. நான்
தப்பிக்கும் பாதை முழுக்கவும்
அடைபடப் போகிறது. அப்போது
எனது கைவிரல்களைப் பார்த்தேன்.
நகம் முழுக்கவும்
அழுக்கேறியிருந்தது.
Comments