ஆற்றிடைத் தீவு         ஷங்கர்ராமசுப்ரமணியன்     எனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போது   படிக்கும்போது ,  அவை கருத்துகளால் , கதைகளால் ,  நாடகங்களால் நால்திசையிலும் இருந்து   ஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞை ,  வடிவ உணர்வு ,  அர்த்த   அணுக்கம் ,  வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல்   படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள்   கடந்த நிலப்பரப்புகள் ,  முகங்கள் , உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையை   உருவாக்குகிறது. பெருமிதம் , அசூயை , கூச்சம் , சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன்.     அடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்து ,  பயம் மிகுந்து ,  பேச்சொலியும்  குறைவதை உணரமுடிகிறது. கதை   முற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாக ,  ஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின.  பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிற தைப்  பார்த்துக் கொண்டிருக்கிறேன்...