Skip to main content

இளங்கோ புரோட்டா ஸ்டால்



ஷங்கர்ராமசுப்ரமணியன்




ஊருக்கு வரும்போதேல்லாம்
திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் முக்கு
இளங்கோ புரோட்டாக் கடையில்
ஆஜர் ஆகிவிடுவான் சங்கரன்.
நள்ளிரவில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு
வீடு திரும்பும்போதும்
இளங்கோவை அவன் புறக்கணித்ததில்லை.
இப்போது அவனுக்கு வயது நாற்பது.

மஞ்சள், கரும்பழுப்பு, செக்கச்சிவப்பு
மூன்று குழம்புகளையும் ஊற்றச்சொல்வான்
முதிய பரிசாரகனின் கருப்புக் கைகளும் சேரவேண்டும்.
புரோட்டோவை ஆசையோடு பிய்க்கச் சொல்வான்.
எலும்புத் துணுக்குகளை
இலையோரம் ஒதுக்கி வைப்பான்
சைவக்குடும்பத்தில் பிறந்த சங்கரன்.
முதல்முறையாக
ஒன்பது வயதில்
அப்பாவோடு
ரொட்டி சால்னா அறிமுகம் ஆனது.
கோழி எலும்புகள் தான்
செதில்செதிலாக புரோட்டா ஆகிறது
என்று கற்பனையும் செய்தான்
இப்போதும் 
சொந்த ஊர்
திருநெல்வேலிக்கு வரும்போது
தாபத்துடன்
ஏலக்காய் மணக்க மணக்க
புரோட்டா சாப்பிடுகிறான்.
அல்வாவைப் போலவே
புரோட்டாவையும்
தாமிரபரணிதான் ருசிக்கவைக்கிறது 
என்பது அவன் முடிவு.

வெங்காயம் நிறைந்த
உடல் பூரித்த ஆம்லேட்டை
அசௌகரியத்தோடும் வலியோடும்
மெதுவாக மென்று மென்று தின்கிறான்

தனது கடைவாய் பற்குழியை
மருத்துவரிடம் நேற்றுதான் அடைத்துவந்த
நாற்பது வயது சங்கரன்
இன்று

சந்திப்பிள்ளையாரையும்
இளங்கோ ஹோட்டலையும்
பால்யகால நண்பர்களைப் போல
மறக்காமல் இருக்கும்
அவன்
எப்போது
புரோட்டாவை வாயில் வைத்தாலும்
அப்போதெல்லாம்
அவனுக்கு ஒன்பது வயதுதான்.

(கவிஞர் ஞானக்கூத்தனுக்கு)

Comments