ஷங்கர்ராமசுப்ரமணியன்
இந்த வருடத்தின்
சுயமதிப்பீட்டுப் படிவத்தை நிரப்பி
மேலதிகாரியிடம்
கொடுத்துவிட்டு
கழிப்பறை சென்று
நிலைக்கண்ணாடியில்
முகம் பார்த்த போது
பார்த்தேன்
நான் சலித்திருக்கிறேன்
எனது நரைமுடிகள் நீளமாகியிருக்கின்றன
ஏன்
இப்போதெல்லாம்
குழந்தைகள் பிறந்த தகவலை
நண்பர்கள் பகிரும்போதோ
தெரிந்த பெண்கள்
திருமணப் பத்திரிகை
தரும்போதோ
கண்கள் துளிர்க்கின்றன
புளித்த மாவு தோசையின்
மணமடிக்கும் போதெல்லாம்
செத்துப்போன என் பெரியம்மா
வீட்டுக்குள் நுழைந்து விடுகிறாள்
எல்லாம் நுரைத்திருக்கும்
என் இந்த நாற்பது வயதில்
ஏன் என்னைத் தனியாக
விட்டுப்போனாய்
பெரியம்மா
Comments