ஷங்கர்ராமசுப்ரமணியன்
கூப்பிடும் தூரத்தில்தான் நிற்கிறது
காவலர் ரோந்து வாகனம்
துப்பாக்கிகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன
அப்போதைக்கு
உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், தேவாலயம்
எல்லாம்
வெறும் நடைதூரத்தில் சிதறியிருக்கின்றன
தாடி வைத்திருந்த அவன்
இறுக்கமாய் அந்தத் தொழிற்சாலையின்
இரும்புவேலிச் சுவரில் சாய்ந்து
நின்றுகொண்டிருக்கிறான்
அவன் சட்டைக்குள் வலதுகை
நுழைத்து
ஏதோ ஒன்றை
பொதிந்து மறைத்திருக்கிறான்
அவன் மார்பைப் பிடித்து
அதைக் கொடுத்துடுறா
அதைக் கொடுத்துடுறா
என அவள்
தன் உடை குலைய
எச்சிலும் கண்ணீரும் வழியக்
கெஞ்சி இரைகிறாள்
ஒரு நிம்மதிக்கும்
இன்னொரு நிம்மதிக்கும் இடையே
கலவரத்தின் முனைகள் இருக்கும்
அவற்றைக் கடந்துவிட வேண்டும்
நழுவும் உலகை
சாமர்த்தியத்துடன் பற்றிப் பிடித்து
பொது இடங்களைக் கடக்கின்றனர் பொதுமக்கள்
அச்சத்துடன் அவரவர் கவலைகளை
ஒருமுறை பார்த்துக் கொண்டு
வீடு திரும்புகின்றனர்
பரபரப்பான அந்த நடைபாதையில் தான்
அவன் அசையாமல் நிற்கிறான்
அவளது கோரிக்கையில்
முன்பு அவர்கள் பகிர்ந்திருக்கக் கூடிய
அந்தரங்கம் தெரிந்தது
அந்த அந்தரங்கத்தின் சுழியில்தான்
அவள் தற்போது தன்னந்தனியாகச் சிக்கியிருக்கிறாள்
அவனுடையதல்லாத ஒன்றைக் கேட்டு
அவள் பெருநகர சமுத்திரத்தில்
அலைகளென
மறுபடி மறுபடி
அழுது இரைந்துகொண்டிருக்கிறாள்
Comments