Skip to main content

அவளுக்குக் காயம் படுவதில்லை



சைக்கிள் ஓட்டத் தொடங்கி ஆறு மாதங்களான பிறகு எனது பன்னிரெண்டு வயது மகள் முதல்முறையாக காயம்படும் அளவுக்கு நேற்றுத் தான் விழுந்தாள். அடிபடுவதும் காயங்களும் தொடர் நினைவுகளாக இருந்த எனது தலைமுறையின் ஞாபகம் எனக்கு வந்தது. அவள் காண்பித்த காயங்களை விட, அவளுக்கும் அந்தக் காயங்களுக்கும் இருக்கும் இடைவெளி மீது எனது கவனம் குவிந்தது. அந்த இடைவெளியில் தான் நான் காண்பிக்க வேண்டிய அதிர்ச்சியின் அசலும் கனமும் குறைந்திருக்க வேண்டும். அவள் என்னைப் போல அடிக்கடி காயப்படுவதுமில்லை.   

பிறந்து மொழி பயிலத் தொடங்கும் முன்னர், தவழத் தொடங்கிய போதே எனது தங்கை, கழற்ற இயலக்கூடிய அடிபம்பை இழுத்துப்போட்டுக் கன்னத்தைக் கிழித்துக் கொண்டாள். அவள் முகத்திலும் எனது  நினைவிலும் அந்த நாளும் அந்தத் தருணமும் உறைந்திருக்கிறது. அரசு மருத்துவமனையின் திறந்த ஜன்னல் வழியாக அவளுக்குத் தையல் போட்டதை அழுதுகொண்டே பார்த்த ஞாபகமும் இருக்கிறது. பென்சில் சீவும் போது கையை நடுவில் விட்டு எலும்பு தெரிய வெள்ளையாகப் பிளந்து ரத்தமாகப் பொழிந்த என் நடுவிரல் இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. சைக்களிலும் கிரிக்கெட்டும் சிரங்கும் ஏற்படுத்தியவை 15 வயதுவரை என்னை அலைக்கழித்தன. அந்தத் தருணங்கள் என் தலைமுறையினர் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் ஒவ்வொரு சம்பவத்தையும் காயத்தையும் நிகழும்போது அதைப் பார்க்க முடிந்ததா? விபத்தையும் வலியையும் ரணத்தையும் நிகழத் தொடங்கும்போதே, முந்தைய தலைமுறையினரான நம்மால், இந்தக் குழந்தைகளைப் போலப் பார்க்க முடிந்திருக்கிறதா?

தானும் காயமும் வேறுவேறாக இல்லாத ஒரு கருந்துளைக்குள் தான் முந்தின தலைமுறை வரை விழுந்திருக்கிறோம். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அநீதி நிறைந்த கொடூரமான ஒரு குழியாகத்தான் தெரிந்திருக்கிறது. அதைக் குழந்தைகளாக இருந்த நம்மால் சுவாரசியமாக விவரிக்கவே முடிந்ததில்லை. அந்த நிகழ்வுகள் மீது நம்மால் கொஞ்சூண்டு ஒளியை ஏற்றுவதற்குக் கூட நமக்குக் கால இடைவெளி தேவையாக இருந்திருக்கிறது.

என் மகள் சைக்கிளிலிருந்து விழுந்து காலிலிருந்து நாடி வரை சிராய்ப்புக் காயங்களையும் அது நேர்ந்த விதத்தையும் படிப்படியாக காட்டிக் காட்டி விவரித்தாள். காயங்களின் வலியை விட அவள் காயப்பட்ட நிகழ்ச்சியை அவள் ஒரு சினிமா போலப் பார்த்திருக்க வேண்டும். அவள் விழத்தொடங்கியதிலிருந்தே காயத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். நிகழ்ந்ததை நிகழ்த்தும் போது வலி குறைந்து கேளிக்கை அங்கே தொடங்கிவிடும் போலும்.

தகவல் தொழில்நுட்பம், காட்சி ஊடகங்கள், மெய்நிகர் காட்சித் தொழில்நுட்பங்கள் அனைத்தின் பரவலும் பெருக்கமும் அவை தரும் அனுபவங்களும் அவளுக்கு காயத்தை இப்படியாகப் பார்க்கும் இடைவெளியைத் தந்திருக்கலாம். எல்லாரும் பங்கேற்பாளராகவும் பார்வையாளராகவும் ஒரே சமயத்தில் திகழக்கூடிய, திகழ்வதற்கு வாய்ப்புள்ள ஒரு புதிய யுகத்தின் குழந்தை அவள். ஒரு நிகழ்ச்சி தொடங்கும் கணத்திலேயே, ஒரு ஆளுமை உருவாகும் நொடியிலேயே பகடியாக, மீம்ஸாக மாறும் யுகம் இது. துயரம், அபத்தம், மகிழ்ச்சி, மேன்மை, சிறுமை எல்லாவற்றுக்கும் இடைவெளியே இல்லாத நமது காலத்தின் பிரதானமான உணர்வே கேலி செய்வதும் கேலிக்குள்ளாக்கிக் கொள்வதுமென்று கூடச் சொல்லலாம்.

அவள் தனது நாடியில் உள்ள காயத்தைத் தொட்டுச் சொன்னபோது அவளது வலி எதுவும் எனக்கு உறைக்கவேயில்லை. அவள்  டேப்லட்டில் விளையாடும் சப்வே சர்பர்ஸ் விளையாட்டில் ஓடுபவன் ‘ஹோ’வென்று விழுந்து தினசரி 50 முறைக்கு மேல் இறந்துபோகிறான்.

Comments