Skip to main content

கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி


கனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட முதல் தலைமுறை அகதிகளில் ஒருவர் செல்வம்.
இன ஒடுக்குமுறையாலும் முரண்பாடுகளாலும், வரைபடத்தில் கூட முன்னர் பார்த்தறியாத நாடுகளை நோக்கித் துரத்தப்படும் ஒரு அகதியின் கண்ணீர் உலர்ந்த சிரிப்பை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர முடிகிறது.
‘எழுதித் தீராப் பக்கங்கள்’ நூலை சுவாரசியமான கேலிச் சித்திரங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். பிறரைக் கண்டு சிரிப்பது போன்றே தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தெரிந்த அபூர்வமான பண்புதான் இந்த நூலின் முக்கியத்துவம்.
பிரான்ஸில் தங்குவதற்கு சென்னை யின் பேச்சிலர் அறைகளைப் போன்ற வீடுகளில் தங்கி மொத்தமாகச் சமைத்து தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்கிறார்கள். ஊர் ஞாபகத்தில் இடி யாப்பத்தை பாரீஸில் தங்கள் அறையில் செய்துபார்க்க அது முறுக்காக வடிவெடுக் கிறது. பிரபாகரன் முதல் ஈழத்து அரிசிப் புட்டு வரை ஊர் ஞாபகங்களைப் பின்னிரவுகளில் அசைபோட்டபடி வாழ்கிறார்கள். காமம், காதல் சார்ந்த கானல் நப்பாசைகளும் அவர்களது அன்றாடத்தை சுவாரசியமாக்குகின்றன.
பாத்ரூம்களைச் சுத்தம் செய்வது, உணவுப் பாத்திரங்களைக் கழுவுவது, தெருவோரக் கடை விற்பனையாளர் வேலை போன்ற அடிமட்டப் பணிகளே அவர்களுக்குத் தரப்படுகின்றன. அரைகுறை ஆங்கிலம், பிரெஞ்சில் இரண்டு மூன்று வார்த்தைகளை வைத்து அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை படிப்படியாக உருவாக்கிக் கொள்கி றார்கள். பாரீஸ் தெருவில் ஒரு இலங்கைத் தமிழரைப் பார்த்து, “தமிழ் தெரியுமா?” என்று செல்வம் ஆசையுடன் கேட்க, “அதுவும் தெரியாமல் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்பது ஒரு உதாரணம்.
26 அத்தியாயங்களில் ‘தாய்வீடு’ என்ற ஈழத் தமிழ்ப் பத்திரிகையில் தொட ராக இதை எழுதியுள்ளார் செல்வம். ‘பத்தி எழுத்து’ போன்ற குறுவடி வத்தைக் கொண்ட தன் எழுத்து நடையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கதா பாத்திரங்களையும் அவர்களின் குணாதி சியங்களையும் வாசக நினைவில் என்றென்றைக்குமாக நிலைநிறுத்தி விடுகிறார் செல்வம். பாரீஸ் வந்த பின்னரும் ஈழத் தமிழர் பராமரிக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஒழுக்கப் புனிதங்களை அங்கதச் சிரிப்புடன் விமர்சிக்கிறார் செல்வம். மார்க்ஸியக் கருத்தியல் அடையாளம் கொண்டவர்கள்கூட சொந்த வாழ்க்கையில் மரபின் வழுக்கலில் விழுவதை சுயவிமர்சனமாகவே பகிர்ந்து கொள்கிறார் செல்வம்.
திருமணம் காரணமாக செல்வம் பாரீஸிலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர நேரும்போது, பாரீஸ் சார்ந்த ஞாபகங்களும் நேசமும் கூடுகிறது. பிறந்த யாழ்ப்பாணத்திலும் வாழ முடியவில்லை; வந்த பாரீஸிலிருந்தும் பெயர வேண்டிய நிலை; “நான் தப்பியோடி வரும்பொழுது ஏன் பிரான்சுக்கு வந்தேன்? ஏன் இப்ப விட்டிட்டுப் போறேன்? ஏன் இந்த அலைச்சல்? இதுவே தெரியவில்லை” என்று செல்வம் ஆற்றாமையுடன் எழுதும் போது, நாம் எல்லாரும் அபூர்வமாக உணரும் அநாதைத் தனிமையை உணர வைக்கிறார் செல்வம். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள் வாசக அனுபவத்தை மேலும் வளமூட்டுகின்றன.

Comments