Skip to main content

பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன்


ஷின் ஷின் மிங் என்னும் இந்தப் பாடல், ஜென் குருவான சோசன் அவர்களால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜென்னின் தெளிவான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது கருதப்படுகிறது. ஷின் ஷின் மிங்-க்கு “பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்” என்று இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எரிக் புட்கோனன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளில் ஜென் ஆர்வலர்களிடம் புழங்கிவரும் ஷின் ஷின் மிங்-ன் தமிழ் மொழிபெயர்ப்பு இது. இதை நான் செய்வதற்கான ஆங்கில மின்படியை(பிடிஎப்) கவிஞர் ஆனந்த் சரியான தருணத்தில் தந்தார்.

ஒரு சொல்லோ, ஒரு மகாவாக்கியமோ, ஒரு கவிதையோ, ஒரு நூலோ சரியான சமயத்தில் தான் என்னிடம் வந்து சேர்கிறது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் காலம் இது. அப்படி வந்த ஷின் ஷின் மிங்-ஐ மொழிபெயர்த்து இங்கே பகிர்கிறேன்.எனது தானியப் பண்டாரத்தில் சேர்க்கிறேன்...  
தேர்வென்று எதுவும் இல்லாதவர்களுக்கு
மகத்துவப் பாதை சிக்கலானதல்ல.
ஏக்கத்தையும் துவேஷத்தையும் விட்டுவிட்டால்
அது தன்னாலேயே வெளிப்படுவது.

வேறுபாடு சின்னஞ்சிறியதாக இருப்பினும்
சொர்க்கத்திலிருந்து பூமி இருக்கும்
தொலைவுக்குப் போய்விடுவீர்கள்.
உண்மையை நீங்கள் கண்டுணர
எதற்கு எதிராகவும் ஆதரவாகவும்
அபிப்ராயம் கொள்ள வேண்டாம்.

விருப்பும் வெறுப்பும்
மனத்தின் நோய்.
பாதை குறித்த ஆழமான அர்த்தம் புரியாவிட்டால்
மனத்தின் உள்ளார்ந்த அமைதி தொந்தரவுறும்.

எல்லையற்ற வெளியைப் போல
அது முழுமையானதும் குறைகளேயற்றதுமாகும்.
விஷயங்களை அவ்வாறே பார்க்க முடியாத நிலையில் தான்
கொள்ளுவதும் தள்ளுவதும் நேர்கிறது.

விஷயங்களுடன் சிக்குற வேண்டாம்;
வெறுமையில் தொலைந்து போகவேண்டாம்.
விஷயங்களின் ஒருமையில் அதிராமல் இருங்கள்,
இரட்டைநிலை தன்னைப்போல மறைந்துபோகும்.

அசைவை நிறுத்தி மோனத்தை முயற்சிக்கும் போது
அந்த முயற்சியே உன்னை அசைவால் நிறைத்து விடுகிறது.
எதிர்நிலைகளைப் பற்றி நீங்கள் பிடித்திருக்கும் வரை
அந்த ஒரு பாதையை அறியவே போவதில்லை.

அந்தப் பாதையை புரிந்து கொள்ளாதவர்கள்
மெய்மையை நிரூபிக்கவோ மறுக்கவோ செய்வார்கள்.
விஷயங்களின் மெய்மையை மறுக்கும்போது, நீங்கள்
அதன் ஆழந்த சத்தியத்தை இழக்கிறீர்கள்;
விஷயங்களின் மெய்மையை நிரூபிக்கத் தொடங்கும்போது,
எல்லாவற்றிலும் உள்ள காலித்தன்மையை இழக்கிறீர்கள்.

மேலதிகமாக யோசிக்கும் போது
நீங்கள் மேலதிகமாக உண்மையிலிருந்து விலகிப் போகிறீர்கள்.
அனைத்து நினைப்பையும் விட்டொழியுங்கள்
உங்களுக்கு வெளிப்படாததென்று எதுவும் இருக்காது.

வேருக்குத் திரும்புவதென்பது சாரத்தைக் கண்டுபிடிப்பது
ஆனால் தோற்றங்களைத் தொடர்வது ஆதாரத்தைத் தொலைப்பதாகும்.
ஞானம் பெற்ற தருணத்தில்
நீங்கள் தோற்றம், வெறுமைக்கு அப்பால் சென்று விடுவீர்கள்.

அந்த வெற்று உலகில் மாற்றங்கள் நடப்பதுபோலத் தோன்றுகிறது,
அறியாமையால் தான் உண்மையென்று தோன்றுகிறது.
உண்மையைத் தேடாதீர்கள்;
அபிப்ராயங்களைப் பாராட்டுவதை விட்டால் போதும்.

எதிர்நிலையிலான பார்வைகளை வைத்துக் கொள்வது போன்ற
பழக்கங்களைக் கவனமாகத் தவிர்க்கவும்.
சரி, தவறின் சிறு சாயல் தென்பட்டாலும்
மனம் குழப்பத்தில் தொலைந்து விடும்.

எல்லா இரட்டைகளும் ஒன்றிலிருந்தே எழுந்தாலும்
அந்த ஒன்றையும் பற்ற வேண்டாம்.
பாதையில் மனம் தொந்தரவுபடாமல் இருந்தால்
எல்லாம் சரியாகவே இருக்கும்.

விஷயங்கள் எதுவும் தவறாகப் போகாத நிலையில்
விஷயங்களே இல்லாதது போன்றது
மனம் தொந்தரவுறாத நிலையில்
அது மனமில்லாதது போன்றது.
விஷயங்களும் பொருட்களும் மறையும்போது
நினைப்புறுவதும் மறைந்துபோகிறது.
மனம் மறைந்து போகும்போது பொருட்களும் மறைகின்றன.

மற்றது தோன்றும்போது சுயத்துக்கு எழுச்சி அளிக்கிறது
சுயத்துக்கு எழுச்சி வரும்போது மற்றதை உற்பத்தி செய்கிறது.
தோன்றும் இந்த இரண்டு அம்சங்களையும்
ஓர் வெறுமையென்று அறிக.

இந்த வெறுமையில், அந்த இரண்டும் பிரிக்க முடியாதது
அந்த இரண்டுமே தன்னிடம் முழுமையைக் கொண்டவை.
இதற்கும் அதற்கும் பாகுபாட்டைச் செய்யாத நிலையில்
ஒன்றைவிட்டு ஒன்றை எப்படித் தெரிவுசெய்வீர்கள்.

மகத்தான பாதை என்பது அனைத்தையும் அரவணைத்துச் செல்வது,
அது எளிதானதும் அல்ல, சிக்கலானதுமல்ல.
வரையறுக்கப்பட்ட பார்வைநிலையுள்ளவர்களை நம்புபவர்கள்
அச்சமுடையவர்களாக தீர்க்கமில்லாதவர்களாக இருப்பார்கள்;
எத்தனை அவசரமோ அத்தனை மெதுவாக அவர்கள் செல்வார்கள்.

பற்றி நிற்கும்போது, அவர்கள் வெகு தொலைவுக்கு அகன்றுபோய்விடுகிறார்கள்,
ஞானத்துடனான பற்றுதல் கூட வீணாய் போய்விடும்.
விஷயங்களை அதனதன் வழியில் அதன் இயல்பில் போக விடுங்கள்,
வருவதும் போவதும் கூட இல்லை. 

பாதையில் ஒத்திசைவுடன் இருங்கள்
அப்போது தொந்தரவுகளிலிருந்து விடுபட்டிருப்பீர்கள்.
உங்களது எண்ணங்களில் கட்டுறும் போது, உண்மையை நீ தொலைப்பாய்
கனமாய், மந்தமாய், நலிவாய் ஆவீர்கள்.

மனம் தொந்தரவுறும் நிலையில்
ஏன் எதையோ பற்றவும் விலக்கவும் செய்கிறீர்கள்?
அந்த ஒரு பாதையில் முன்னேற விரும்பும் போது
புலன்கள் கருத்துகளின் உலகங்களைக் கூட
வெறுக்க வேண்டாம்.

அவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதே
உண்மையான ஞானத்தைப் போன்றது.
புத்திசாலி எந்த இலக்குகளுடனும்
பிணைத்துக் கொள்ள மாட்டான்.
முட்டாள்களோ தம்மையே சங்கிலிகளில் பிணைத்துக் கொள்வார்கள்.

ஒரு தர்மத்தைத் தவிர அதிகமாய் வேறில்லை
பிரிவினைகள் அறியாதவர்களை பற்றியிழுக்கும்
தேவைகளிலிருந்து எழுகின்றன.
மனத்தைக் கிளறுவதற்கு மனத்தையே பயன்படுத்துவதுதான்
அசலான தவறு.

அமைதியும் தொந்தரவும் எண்ணத்திலிருந்தே வருகின்றன
ஞானத்துக்கு விருப்பமோ வெறுப்போ கிடையாது.
எல்லா இரட்டைகளும்
அறியாத அனுமானங்களிலிருந்தே உருவெடுக்கின்றன.

கனவுகளையும் காற்றில் பறக்கும் மலர்களையும்
முட்டாள் தான் பிடிக்க முயல்வான்
லாபம் நஷ்டம் சரி தவறு
அந்தவிதமான எல்லா எண்ணங்களையும் விட்டொழியுங்கள்.

கண்கள் உறங்காத போது
அனைத்து கனவுகளும் இல்லாமலாகிவிடுகின்றன.
மனம் பேதம் பார்க்காமலாகும் போது
அனைத்தும் ஒரு சாராம்சமாக அதன் இயல்பில் இருக்கின்றன.

இந்த ஒரு சாரத்தின் விந்தையைப் புரிந்துகொள்வதற்கு
அனைத்துப் பிணைப்புகளிலிருந்தும் விடுபட வேண்டும்.
எந்த வித்தியாசமுமின்றி எல்லாம் பார்க்கப்படும் போது
நீங்கள் தோற்றுவாய்க்குத் திரும்புகிறீர்கள்
நீங்கள் யாரோ அதுவாக மிஞ்சுவீர்கள்.

உறைநிலையில் அசைவும் அசைவில் உறைதலும்
இருக்கிறதாவென்று பாருங்கள்
அசைவு ஓய்வு இரண்டும் மறைந்துவிடும்.
அத்தகைய இரட்டைகள் இல்லாமலாகும் போது
ஒருமையாலும் கூட அங்கே தரித்திருக்க இயலாது.

இந்த உயர்ந்த நிலை
விதிகள் விவரணைகளுக்குக் கட்டுப்படாதது.
அந்தப் பாதையுடன் ஒருமைப்பட்ட முற்றுணர்ந்த மனத்தில்
அனைத்துச் செயலும் அற்றுவிடுகின்றன.

சந்தேகங்களும் தெளிவின்மைகளும் மறைகின்றன
அத்துடன் உண்மை உங்களில் நிரூபிக்கப்பட்டு விடுகிறது.
ஒரு சிறிய தட்டுதலில் நீங்கள் கட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறீர்கள்
உங்களை எதுவும் பற்றவில்லை எதையும் நீங்களும் பிடித்திருக்கவில்லை.

மனத்தைக் கையாள்வதற்கான தேவையின்றி
எல்லாம் இன்மையில் தெளிவுடன் சுயம்பிரகாசத்துடன் உள்ளன.
இங்கே எண்ணம், உணர்வு, அறிவு, கற்பனைக்கு
எந்த மதிப்பும் இல்லை.

உண்மையில் எதுவோ அதுவாக இருக்கும் உலகில்
தானோ பிறரோ அங்கே இல்லை
சட்டென்று அதை ஏற்றுக்கொள்வது
மட்டுமே ஒருமையை வெளிப்படுத்தும்.

இந்த ஒருமையில் எதுவும் தனியாகவோ
விலகியோ இல்லை.
அனைத்து காலங்களிலும் இடங்களிலும்
ஞானமுடையது
இந்த உண்மையை தனிப்பட்ட வகையில் அறிந்தே இருக்கிறது.

அந்த உண்மை காலம் வெளிக்கு அப்பாற்பட்டது,
ஒரு தருணமே நித்தியம்.
இங்கேயும் அல்ல அங்கேயும் அல்ல
ஆனால் எங்கும் உங்கள் கண்களுக்கு முன்னரே.

எல்லையேயற்று விரிந்தது எல்லையேயற்று சுருங்கியது
வித்தியாசமற்றது, வரையறைகள் ஒழிந்தது
அத்துடன் எல்லை காணமுடியாதது.
இருப்பும் இருப்பற்றதுமாயும் இருப்பது.

வாதங்களிலும் விவாதங்களிலும் காலத்தை வீணாக்கவேண்டாம்
புரிந்துகொள்ளவியலாததை புரிய முயற்சிக்க வேண்டாம்.
ஒன்றும் எல்லாமும்
ஒன்றாய் நகர்ந்து பேதமின்றி ஒன்றுக்கொன்று கலக்கவும் செய்கின்றன.

இந்த முற்றுணர்தலில் வாழ்வது
பூரணம் அல்லது பூரணமற்றது குறித்த கவலையின்மையிலிருந்து வருவது.
இந்தப் பாதையில் நம்பிக்கை வைப்பதென்பது பேதமுறாமல் வாழ்வதே
அத்துடன் இந்தப் பேதமற்றதில் நீங்கள் அந்தப் பாதையோடு இயைந்திருக்கிறீர்கள்.

வார்த்தைகள்! வார்த்தைகள்!
அந்தப் பாதை மொழிக்கு அப்பால்,
அந்தப் பாதையை விவரிப்பதற்கு
ஒருபோதும் வார்த்தைகளால் முடியவே முடியாது.

Comments