Skip to main content

என்னிடம் காண்பித்துக் கொள்ளாத தேன்சிட்டு



     தன் புனைப்பெயரைப் போலவே புராதன நினைவுகளையும் அதன் இடிபாடுகளையும் கவிதைகளிலும் சமகால வாழ்விலும் சுமந்துகொண்டிருக்கும் கவிஞனும் நண்பனுமான கண்டராதித்தனின் வீட்டுக்குச் சென்ற சனிக்கிழமை இரவு போயிருந்தேன். குதிரைகளுக்குப் பதிலாக,  பூட்டப்பட்டு தெருவில் நிறுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் குட்டியானை வாகனங்களில் ஏற்றப்பட்டு களவு போகும் அந்தப் புராதன சோழர் காலக் கிராமத்துக்குள் இரவு பத்துமணிக்கு நுழைந்தோம். துருவப் பிரதேசங்களிலிருந்து பெங்குயின் பறவைகள் மீனம்பாக்கத்தில் இறங்கலாமா என்று விசாரிக்குமளவு ஆகிவிட்ட இந்த வருடத்து மார்கழிக் குளிர், முகத்தை வெட்ட கண்டராதித்தனின் வீட்டில் இறங்கினோம்.

   கண்டராதித்தனின் திருமதி மட்டுமே முழித்திருந்தார்கள். குழந்தைகள் இரண்டாம் சாமத்தில் நரிகளை விரட்டிக் கொண்டிருக்க வேண்டும். புதிதாகக் கட்டியிருக்கும் முதல் மாடிக்குத் தூங்குவதற்காக என்னை அழைத்துச் சென்றார் கண்டராதித்தன்.

 மாடியேறி முதல் அறைக்குள் புகுந்தவுடன், சற்று அமைதிகாக்கச் சொல்லி விட்டு, அந்த அறையின் கதவைத் திறந்து தெருவைப் பார்த்து விரிந்திருந்த பெரிய பால்கனி போன்ற அறையில் இருட்டில் அழைத்துப் போனார். இருட்டில் துணி தொங்க விடும் கொடியில் ஒரு பறவைக்கூட்டைக் காண்பித்து, தேன் சிட்டு கூடு கட்டியிருக்கிறது என்றார். ஆமாம், அதன் அலகு மட்டும் இருட்டில் வளைந்து தெரிந்தது. மனிதர்கள் நிற்பதுபோல அது தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அது அசையவும் இல்லை. 

எங்களால் தொந்தரவுறவும் இல்லை. ஒரு பொம்மையைப் போல அது அலகை மட்டும் நீட்டியபடி தூங்கிக் கொண்டிருக்கிறது போலும். கண்டராதித்தனின் இயல்பில் ஒரு பொம்மையைக் காட்டி தேன்சிட்டு என்று சொல்வது இல்லை.
மீண்டும் அறைக்குள் வந்து பாயை விரித்துப் படுத்தோம். சில மாதங்களுக்கு முன்னர் இங்கே வந்து அந்தத் தேன்சிட்டு கூடுகட்டியதாகவும், அந்தக் கூட்டின் அடிப்பாகம் பலவீனமாக இருக்க, இரண்டு முட்டைகள் உடைந்துவிட்டதாகவும், அதற்குப் பிறகு தேன் சிட்டு சில மாதங்கள் அங்கே வரவேயில்லையென்றும் குறிப்பிட்டார். கண்டராதித்தனும் அவர் குடும்பத்தினரும் தேன்சிட்டின் கூட்டை அப்படியே விட்டுவிட்டு துணிகளையும் காயப்போடாமல் இருந்திருக்கிறார்கள்.

கொஞ்சகாலம் வராமலிருந்த தேன்சிட்டு, மீண்டும் கண்டராதித்தன் வீட்டுக்கு வந்து தனது பழைய கூட்டுக்கு இணையாக ஒரு கூட்டைக் கட்டிச் சேர்த்து மீண்டும் குடியிருக்கிறது. அதுதான் நான் அன்றிரவு பார்த்த கூடு.

தேன்சிட்டின் வளைந்து நீண்டிருக்கும் அலகை நினைத்துக் கொண்டே குளிரின் அணைப்பில் உறங்கிப்போனேன். அதிகாலையில் வெந்நீர் போடவும் தேநீர் தயாரிக்கச் சொல்லவும் கண்டராதித்தன் சீக்கிரமே போய்விட்டார். நான் எழுந்தவுடன் கதவை மெதுவாகத் திறந்து அந்த தேன்சிட்டுக் கூட்டைப் போய்ப் பார்த்தேன். அதேபோல அலகு நீட்டி அது இருந்தது. எல்லாரும் எல்லாவற்றையும் தெரிவித்துக் கொண்டிருக்கும் நாட்களில், அந்தத் தேன்சிட்டின் பிடிவாதம் எனக்குப் பிடித்திருந்தது. கண்டராதித்தனின் கவிதைகளும் நவீனத்துக்குத் தன் அலகை மட்டும் காட்டிக் கொண்டு மரபின் இருட்டுக்குள் இருக்கிறது.

கீழே இறங்கி வெந்நீரில் குளித்துவிட்டுக் கிளம்பும்போது, கண்டராதித்தனின் மனைவியிடம் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள் தானே என்று பார்க்க முடியாத வருத்தத்தில் கேட்டேன். ஆமாம் என்றார். அந்தக் குழந்தைகள் காலைப் பனியில் வயலில் அருகருகே ஒட்டியபடி கிடக்கும் பூசணிக்காய்கள் போல நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.   

Comments

stalinsaravanan said…
அந்தக் குழந்தைகள் காலைப் பனியில் வயலில் அருகருகே ஒட்டியபடி கிடக்கும் பூசணிக்காய்கள் போல நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.excellent